காத்தப்ப பூலித்தேவனுக்கு ஒரு நெடியவரலாறு இருக்கிறது.சரித்திரத்தின் சுழற்சியில் வரலாற்றுக் குறிப்பு சுவடுகளின்அடிப்படையில் 1378 ஆம் ஆண்டு வரகுராம சிந்தாமணிபூலித்தேவர் தொடங்கி இந்தாண்டோடு சரியாக 633 ஆண்டுகள்ஆகின்றன. வழிவழியாக ஒவ்வொரு பிள்ளைக்கும் பெயர்சூட்டுகிற போது பாட்டனின் பெயரை பேரனுக்குச் சூட்டுகிறவழக்கம் நம் நாட்டில் பல குலங்களில் உள்ள காரணத்தால்காத்தப்ப பூலித்தேவன் என்ற பெயர் தொடர்ந்து பேரன்களுக்குநான்காவது பெயராக 1715 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதிசித்திரபுத்திர தேவருக்கும் சிவஞான நாச்சியாருக்கும்பிள்ளையாக பிறந்த மாமன்னன் தான் காத்தப்ப பூலித்தேவர்ஆவார். 11 வயதிலேயே, அரியணைக்கு வரநேர்ந்தசின்னஞ்சிறு பிள்ளையான மாவீரன்தான் காத்தப்பபூலித்தேவன். 2015 ம் ஆண்டு வந்தால் 300 பிறந்து ஆண்டுகளாகிறது.
நெற்கட்டான்செவல். இந்தப் பகுதி வளம் நிறைந்த பகுதி. 1767இல் கடைசியாக வெள்ளையர்களின் கொடுமையால் உடன்இருந்தவர்கள் துரோகத்தால் மன்னர் பூலியின் படை வீழ்ந்ததற்குப்பிறகு இந்தப் பகுதியை அழிக்க வேண்டும் என்று வந்த கும்பினிப்படை அதிகாரி டொனல்டு காம்பல் ஆஹா, வளம் குவிந்துகிடக்கிறதுவாசுதேவநல்லூர் பகுதி மரகதப் பச்சையைப்போல எங்கு கண்டாலும்கழனிகள் செழித்துக் கிடக்கின்றன. கரும்புத் தோட்டங்களும்,செந்நெல் வயல்களும், வாழைத்தோப்பு களும் குவிந்து இருக்கின்றவளம் நிறைந்த இந்தப்பகுதியை அழிக்க எனக்கு மனமில்லை என்றுசொன்னான். அப்படிப்பட்ட பகுதி தான் நெற்கட்டுஞ்சேவல். இது சிவந்த நிலம். வீரமறவர்கள் சிந்திய இரத்தத்தாலும் சிவந்த நிலம். இயற்கையிலேயே செம்மண் பூமி. அதில் நெல்கட்டான் என்கின்ற ஒரு செடி அதிகமாக இருந்தது என்றும் அந்த நெல்கட்டான் செடியை நினைவூட்டி நெல்கட்டும்செவல் என்று பெயர் வந்தது. நெற்கட்டுஞ் செவல் பாளையத்துக்கு எல்லை
கிழக்கே குவளைக்கண்ணி. மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலை. தெற்கே முத்துக்குளம் சிவகிரிக்குப் பக்கத்தில் வடக்கே தலைவன் கோட்டை. இதுதான் அவருடைய அதிகாரத்துக்கு உட்பட்ட சட்டப்பூர்வமான பகுதியாக முதலில் இருந்தது.
வாசுதேவநல்லூர் கோட்டைக்கு ஈடான கோட்டை எதுவும் இல்லை என்றும் பரங்கியர் சொன்னார்கள். இது தென்னாட்டில் இருக்கின்ற மற்றக் கோட்டைகளைவிட, அபூர்வமான கோட்டை. பொறியியல் நுட்பத்தோடு கட்டப்பட்டு இருக்கின்ற கோட்டை. அந்தக் கோட்டையின் நீளம் 650 கெஜம். அகலம் 300 கெஜம். கோட்டையின் அடிமட்டத்தின் அகலம் 15 அடி. உச்சியின் அகலம் 5 அடி. கோட்டையின் மூலைகளில் கொத்தளங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. அந்தக் கொத்தளங்களுக்குள்ளே நிலவறைகளைப்போல வீரர்கள் உள்ளே இருந்து சண்டை செய்வதற்கு ஏற்ற அமைப்புகள் இருந்தன. வெளியே இருந்து பார்த்தால் வீரர்கள் இருப்பது தெரியாது. அதில் அமைக்கப்பட்டு இருந்த துவாரங்கள் வழியாக அவர்கள் ஆயுதங்களை ஏவக்கூடிய அமைப்பு இருந்தது.சுண்ணாம்பும், பதநீரும், கருப்பட்டியும், கம்பப் பசையும் மற்றும் பல்வேறு பொருட்களையும் கொண்டு அமைத்த பீரங்கிக் குண்டுகள் கூட துளைக்க முடியாத மிகச்சிறந்த கோட்டை.
1755 ஆம் ஆண்டு பரங்கிப்படையின் கர்னல் ஹீரான்,ஆர்க்காடு நவாப்பின் துணையோடும், மாபூஸ் கானையும் துணைக்கு அழைத்துக்கொண்டு களக்காட்டுக் கோட்டையைக் கைப்பற்றினார்கள். அப்போது வாசுதேவநல்லூரில் இருந்த பூலித்தேவருக்கு களக்காடு வீழ்ந்ததன் காரணத்தை அறியவும்,மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்றும் நினைத்தார். களக்காடு கோட்டையை கைப்பற்றுவது மட்டுமல்ல, கும்பினிபடைக்கு எதிராகவும், ஆற்காடு நவாபிற்கு எதிராகவும் எப்போதும் வெற்றி பெறும் வகையில் முதன் முதலாக ஒரு கூட்டமைப்பை உருவாக்குகினார்.
வெள்ளையர்களை எதிரியாக கொண்டு கூட்டமைப்பை உருவாக்க நினைத்த பூலித் தேவர், அதுவரை தனக்கு எதிரியாக இருந்த திருவிதாங்கூர் மன்னருக்கு தகவல் கொடுத்து திருவிதாங்கூர் மன்னரை நண்பராக்கி கொண்டு உடன் சேர்த்துக்கொண்டார். அவர் அமைத்த அந்தக் கூட்டமைப்பில் சேத்தூர், கொல்ல கொண்டான், தலைவன்கோட்டை, நடுவக்குறிச்சி,சொக்கம்பட்டி என்று அழைக்கப்படுகின்ற வடகரை, சுரண்டை,ஊர்க்காடு, ஊத்துமலை என பல சிற்றரசுகளை சேர்த்து ஒரு கூட்டமைப்பை மன்னர் பூலித்தேவர் ஏற்படுத்தினார்.
ஆறடி உயரமும், இரும்புபோன்ற தேகமும், ஒளிவீசும் கண்களும், பகைவருக்கு அஞ்சாத உள்ளமும், நட்புக்குத் தலை வணங்குகின்ற பண்புமும், அடக்குமுறைக்கு அஞ்சாத நெஞ்சுறுதியும், குதிரையில்லா விட்டாலும் 40 கல் தொலைவு வேகமாக நடக்கக்கூடிய ஆற்றல் கொண்ட மகத்தான மாவீரனாக பூலித்தேவன் இருந்தார். பூலித்தேவர் நடந்தால் உடன் வரும் வீரர்கள் தொடர்ந்து ஓடித்தான் வரவேண்டும் என்றும் அவரைப்பற்றி நாட்டுப்பாடல் சொல்கிறது. 40 கல் தொலைவும் அயர்வின்றி ஒரு குதிரையின் ஓட்டத்தில் நடக்கக்கூடிய ஆற்றல் மன்னர் பூலிக்கு இருந்தது என்று நாட்டுப்பாடல்கள் தெரிவிக்கின்றன.
காந்தசக்தி கொண்ட அவரது ஆளுமை காரணமாகஆர்க்காடு நவாப்பின் படையில் வந்த தளபதிகளில் மூன்று இஸ்லாமிய தளபதிகள் முடேமியா எனும் முகம்மது மியானச்,மியானோ எனும் முகம்மது பார்க்கி, நபிகான் கட்டாக் ஆகிய மூவரும் மன்னர் பூலித்தேவர் முகத்தைக்கண்டு அவரால் கவரப்பட்டு அவரது படையில் சேர்ந்து பூலித்தேவருக்காக வீரப்போர் புரிந்தார்கள்.
1756 மார்ச் 21 இல் திருநெல்வேலியில் மீண்டும் போர் நடத்தி வெள்ளையரை தோற்கடித்தார் மன்னர் பூலித்தேவன். அந்தப் போரில் முடேமியா என்கின்ற இஸ்லாமியத் தளபதியின் மார்பில் குண்டு பாய்ந்து இரத்த வெள்ளத்தில் அவன் புரண்டு கொண்டிருந்த வேளையில் மன்னர் பூலித்தேவருக்குத் தகவல் கிடைத்து,ஓடிச்சென்று முடேமியாவை எடுத்து மடியிலே கிடத்தி இந்த மண்ணில் அந்நியனை எதிர்த்த போரில் வீரத்தின் விளை நிலமாக திகழ்ந்து உன் ஆவி பிரிகிற வேளையில் உன்மேனியில் இருந்து இரத்தம் என் மடியில் பாய்கிறது என்று உச்சி மோந்து அவனை அரவணைத்துக் கொண்டார். இஸ்லாமியக் குலத்தில் பிறந்து நவாப் படையில் வளர்ந்து, தன்னோடு வந்து படையிலே சேர்ந்து போரிலே உயிர் விட்டவனுக்கு நடுகல் எழுப்பினார் பூலித்தேவன்.
மைசூர் புலி ஹைதர் அலியைப் போர்க்களத்தில் தோற்கடித்த மருதநாயகம் என்கிற கம்மந்தான் கான்சாகிப் தெற்கே நவாபிற்காக படை நடத்தி வந்தான். வாசுதேவநல்லூரில் ஒரு மன்னன் இருக்கிறான். அவன் பெயர் பூலித்தேவன். அவனை எவராலும் வெற்றிகொள்ள முடியவில்லை என்று பிரிட்டிஷ்காரன் அவனுக்குத் துணையாக நாகப்பட்டினம், திருச்சி, தூத்துக்குடி,பாளையங் கோட்டை, மதுரை, திருவனந்தபுரம் மன்னன் அஞ்செங்கோவின் படை என பல முனைகளில் இருந்து அனுப்பபடைகள் வாசுதேவநல்லூரை நோக்கி வந்தது.
1759 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி வாசுதேவநல்லூர் கோட்டையையும், நெற்கட்டுஞ் செவல் கோட்டையையும் தாக்கவேண்டும் என்று வந்த கான்சாகிப், 1759 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி தொடக்கிய யுத்தம் டிசம்பர் 26 ஆம் தேதி வரை நடந்தது. ஹைதர் அலியையேத் தோற்கடித்த சூராதி சூரனான கான்சாகிப், பூலித்தேவனை எளிதில் வெற்றி கொள்வான் என்று கும்பினியர்கள் நினைத்துக்கொண்டிருந்தபோது அந்தப் போரில் கான்சாகிப் தோற்றான். பூலித்தேவன் வெற்றிபெற்றான். பீரங்கிகளும்,துப்பாக்கிகளும் கொண்ட இத்தனை படைகளை வெள்ளைக்காரன் கொண்டுவந்து பெரும்படையோடு தாக்கி ஏறத்தாழ ஒருமாதகாலம் நடைபெற்ற முதல் யுத்தத்தில் பூலித்தேவன் வெற்றிபெற்றான். கான்சாகிப் தோற்கடிக்கப்பட்டான்.
இரண்டாம் முறையாக கான்சாகிப் 1760 டிசம்பர் 12 இல் திருநெல்வேலியில் இருந்து பெரும்படையுடன் வந்து நெல்கட்டும் செவலில் இருந்து மூன்று கல் தொலைவில் உள்ள மலையடிவாரத்தில் முகாம் போட்டான் 1760 டிசம்பர் 20 இல் போர் தொடங்கியது. வீரமறவர்கள் நூறுபேர் மடிந்தார்கள். பூலித்தேவரே இம்முறையும் வென்றார்.கான்சாகிப் தோற்றான்.
மூன்றாம் முறையாக கான்சாகிப் 1761 மே மாதத்தில் மீண்டும் பெருமளவில் கும்பினிப் படைகளுடன்,பீரங்கிகளுடன் போர் தொடுத்தான். மே 3 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி முடிந்தது போர். இப் போரில்தான் பூலித்தேவர் தோற்றார். வாசுதேவநல்லூர் கோட்டை,பனையூர் கோட்டை, நெற்கட்டும் செவல் கோட்டைகள் வீழ்ந்தன.
வீரமும், தீரமும் நிறைந்த மன்னன் பூலித்தேவன் படையில்தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச்சேர்ந்த வெண்ணிக்காலாடி இரண்டாவது போரில் பிரதான தளபதி.அந்தப்போரில் தோற்று ஓடுகின்றவர்களை விரட்டிச்சென்று வெற்றிபெற்றுவந்தான் வெண்ணிக் காலாடி. அந்த வெண்ணிக்காலாடியின் வயிற்றில் பாய்ந்த ஆயுதம் வயிற்றைக் கிழித்து குடல் வெளியேவந்து விட்டது. குடல் வெளியே வந்தவுடன் அந்தப் பெருவீரன் தலையிலேயே கட்டி இருந்த தலைப்பாகையை எடுத்து அந்தக் குடலை உள்ளேதள்ளிவிட்டு இரத்தம் பெருக்கெடுக்கின்ற இடத்தில் அந்த தலைப்பாகையைவைத்து இடுப்பில் கட்டிக் கொண்டு திரும்பவும் சண்டை செய்கிறான். சண்டை செய்து வெற்றிச் செய்தியோடுதான் வந்து மன்னர் பூலித்தேவன் முன் கீழே விழுகிறார். இரத்தம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பூலித்தேவர் எப்படி இஸ்லாமிய முடேமியாவை எடுத்துமடியில் போட்டாரோ அதேபோல,தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தில் பிறந்த வெண்ணிக்காலாடியை எடுத்து மடியில் போட்டுக்கொண்டு கண்ணீர் பெருக்க பூலித்தேவன் அழுகிறார். அப்பொழுது அந்தத் தலைப்பாகை முழுக்க இரத்தத்தில் நனைந்து பூலித்தேவனின் உடம்பெல்லாம் இரத்தம் பாய்கிறது. ஓற்றர் படைத்தலைவன்ஒண்டிப்பகடையும் பூலித்தேவனுக்கு விடப்பட்ட சவாலை முறியடிக்க தனது உயிரை அர்ப்பணம் செய்தான். இப்படி அனைவரையும் அரவணைத்து யுத்தகளத்தில் நின்று சாகசங்கள் புரிந்தவர்தான் பூலித்தேவர்.
இதற்கிடையில் கும்பினி படைக்கு எதிராக மாறி வீரமுடன் போராடிய மருதநாயகத்தை 1964ல் பிரிட்டிஷார் தூக்கிலிட்டனர்.
1767 ஆம் ஆண்டுகும்பினிப்படையின் டொனல்டு காம்பெல் பெரும் பீரங்கிகளோடு வந்து வாசுதேவ நல்லூர் கோட்டையை தாக்கினான். இந்தச் சண்டையில்தான் அனந்த நாராயணன் துரோகத்தால் பூலித்தேவர் தோற்றதாக சரித்திரம் சொல்கிறது. காம்பெல் தனது டைரிக்குறிப்பில் எழுதுகிறான். நினைத்தேப் பார்க்கமுடியாது. எங்கள் பீரங்கிகளின் குண்டுகள் விழுந்து கொண்டே இருந்தன. கோட்டைத் தகரவில்லை ஆனால் கோட்டையின் சுவர்களில் ஓட்டைகள் மட்டும் விழுந்தன.
ஆனால், பூலித்தேவரின் மறவர்கள் அந்த ஓட்டைகளை அடைப்பதற்கு பனை ஓலைகளையும், ஈரமண்ணையும் கொண்டுவந்து அந்த ஓட்டைகளை அடைத்தார்கள். இந்த வீரத்தை எங்கும் பார்த்தது இல்லை. மறவர்கள் சிலரின் உடலைப் பீரங்கிகுண்டுகள் துண்டு துண்டாகவும் சின்னாபின்னமாகவும் சிதறவைத்தன. குண்டுகள் விழுந்து கொண்டே இருந்தன. பக்கத்தில் நிற்பவன் செத்து விழுகிறான். அதைப்பற்றிக் கவலைப்படாமல் அந்த இடத்தின் சிதிலமான பகுதிகளை செப்பனிடுவதில் பனை ஓலைகளையும், ஈரமண்ணையும் கொண்டுவந்து அந்த ஓட்டைகளை அடைப்பதிலே உறுதியாக இருக்கக்கூடிய வீரர்களை இந்த உலகத்தில் எங்கே பார்க்க முடியும். வாசுதேவநல்லூரில் தான் பார்க்க முடிந்தது என்று தனது குறிப்பில் எழுதிவைத்துள்ளான்.
தமிழ்மொழி வளர்ச்சிக்கு பாடுபட்ட அறிஞர் கால்டு வெல் எழுதிய திருநெல்வேலி சரித்திரத்தில் பூலித்தேவனைப் பற்றி “இந்த மேற்கத்திய பாளையக்காரர்கள் மத்தியில் உயர்ந்த இடத்துக்கு வந்தவர்தான் பூலித்தேவன். அவர் படைபலம் குறைவாக இருந்தாலும் பண்பால், வீரத்தால், திறமையால் அவருடைய ஆளுமைக்கு உட்பட்ட இடத்தைவிட செல்வாக்கும் புகழும் பெற்றார்” என்று எழுதுகிறார்.
இந்தப் போரில் பூலித்தேவர் படை தோற்றபின் கடைசியாக அவரைக் கைதுசெய்து கொண்டு செல்கிறபோதுதான் சங்கரன்கோவில் ஆலயத்துக்குள் நான் வழிபட்டு வருகிறேன் என்று உள்ளே போனார் பூலித்தேவர். அவர் சிவனை நினைத்துப் பாடிய பாடல் என்று இன்றும் பாடப்படுகிறது.
''பூங்கமலத்தயன் மால் அறியா உமைசங்கரனே
புகலக் கேண்மின்
தீங்குபுரி மூவாலிச வினையே – சிக்கி
உழறும் அடியேன் தன்னை
ஓங்கையில் சூழ் உலகமதில் உனை அன்றி
எனைக்காக்க ஒருவருண்டோ
ஈங்கெழுந் தருள்புரியும் இன்பவாருதியே
இறைவனே போற்றி போற்றி''
சங்கரன்கோவில் கோவிலுக்குள் போனவர் திரும்பவில்லை. நேதாஜியின் மரணத்தைப்போல பூலித்தேவரின் மறைவும் இன்றுவரை மர்மமாகவே உள்ளது. இந்திய விடுதலைப் போரில் வீரன் பூலித் தேவனின் வீரமிகு பாத்திரம் வீண் போகவில்லை. மண்ணில் போட்ட விதையாய் பல வடிவங்களில் தென்னிந்தியாவில் முளைக்க ஆரம்பித்தது.
ஆதாரங்கள் :
1. திருநெல்வேலி சரித்திரம் - கால்டுவெல்
2. விடுதலை தழும்புகள் - சுபொஅகத்தியலிங்கம்
3. திரு. வைகோ அவர்கள் பேசிய உரையிலிருந்து..