இப்போது இராமநாதபுரம் மாவட்டமாக உள்ள பகுதி மற்றும் சிவகங்கை மாவட்டம், விருதுநகர் மாவட்டம் ஆகிய மூன்று மாவட்டங்கள் அடங்கிய பகுதி பாண்டிய நாட்டின் கீழ்த்திசைப் பகுதியாக இருந்தது. இந்த நிலப்பரப்பு மறவர் நாடு என்றும் அழைக்கப்பட்டது. மறவர் நாடு பாண்டிய பேரரசி...ன் ஆட்சிக்குள் அடங்கிய பகுதியாகவே எப்போதும் விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. மறவர் நாட்டைச் சேர்ந்தவர்கள் அன்றும் சரி, இன்றும் சரி பாண்டியகள் என்றே சாதாரணமாக அழைக்கப்படுகின்றார்கள். சாதாரணப் பொது மக்களும் பெருமையோடு தாங்களுக்குப் 'பாண்டியர்” என்று பெயர் வைத்துக் கொள்கின்றார்கள். மறவர் நாடு பிற்காலத்தில் 'சேதுநாடு” என்றழைக்கப்பட்டது. 'சேது” என்ற பெயர் எப்படி வந்தது என்பதற்கு புராண காலச் செய்தி ஒன்று உள்ளது. 'சேதுநாடு” என்று அழைக்கப்படும் இன்றைய இராமநாதபுரம் இராமாவதாரத்தோடு பெரிதும் இணைத்துப் பேசப்படுகிறது. இராவணனின் நாடாக இருந்த இலங்கைத் தீவுச் சீதாதேவி சிறை அடைக்கப்பட்டிருப்பதை அனுமார் வழியாக தெரிந்து கொண்ட இராமபிரான் அங்கு செல்ல வேண்டிச் சுக்கீரவனின் வானரப் படைகளைக் கொண்டு பாலம் அமைத்தார். அந்தப் பாலத்திற்குத் திருவணை என்றும் 'சேது” என்றும் பொருள் உள்ளது. அந்தப் புனிதமான பாலத்திற்கு சேதுவிற்கு பொருத்தமான காவலர்களை நியமிக்க நினைத்தாராம் இராமபிரான். அச்சமயம் அந்த பகுதியில் வீரத்தோடு விளங்கிய மறவர்குலத் தலைவர் ஒருவரை நியமித்தார். அவருக்கு சேதுபதி என்று பெயராகி வந்ததாம். அப்படிப்பட்ட புனிதமான வழியில் வந்தவர்கள் சேதுபதிகள் என்று புராண கால வழி வந்த செய்திகள் கூறுகின்றன. இந்த சேதுபதி மரபினருக்கு 'திருவணை”க் காவலன் என்ற பெருமைக்குரிய பெயரும் உண்டு. இராமபிரானுக்கு பாலம் கட்ட உதவி செய்து வானரர்கள் கட்டிய பாலத்திற்குக் காவல் உதவி சேது என்ற பாலத்தைக் காத்து, சேதுபதி திருவணைக் காவலன் என்ற சிறப்புப் பெயர்களைப் பெற்றது என்பது எல்லாம் புராண காலச் செய்திகள் என்று சொல்பவர்களும் உண்டு. மதுரையை ஆட்சி செய்த முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் வரலாற்று ஆவணங்கள் இராமநாதபுரம் சீமையை ஆண்ட அரசர்களை சேதுபதி என்றே அழைக்கின்றனர். சேதுபதி அவர்களால் தேசத்தில் ஆளப்பட்ட பூமி இராமநாதபுரம் சீமை, சிவகங்கை சீமை, புதுக்கோட்டை பகுதி தஞ்சாவூர் சில பகுதிகளைக் கொண்டதாக இருந்தது. அதற்கு மறவர் நாடு என்று பெயர். இந்த மறவர் நாட்டை ஆளும் பொறுப்பு எப்படி சடையக்கத் தேவர் என்றழைக்கப்படும் உடையன் சேதுபதிக்கு வந்தது? மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு கிருஷ்ணப்ப நாயக்கர் சிறந்ததொரு வலிமையான ஆட்சியை நடத்தி வந்தார். அச்சமயம் மறவர் நாடு என்றழைக்கப்படும் இராமநாதபுரம் பகுதி முழுவதற்கும் அவர் அரசராக இருந்தார். மறவர் நாட்டில் காடுகள் நிறைந்திருந்தன. காடுகளென்றால் சாதாரணமான காடுகள் அல்ல. மிக அடர்ந்த காடுகளாக இருந்தன. காடுகளில் பாம்புகளும், துஷ்ட மிருகங்களும் தாக்கி வழிப் பயணிகளுகக்குத் துன்பம் தந்ததைவிட பல மடங்கு துயரத்தைக் கள்வர்கள் கொடுத்தார்கள். மறவர் நாட்டில், இந்தியாவின் தென்முனைக் கிழக்காக அமையப் பெற்றிருந்த இராமேஸ்வரம் பாரத தேசம் முழுவதும் புகழ்பெற்ற புண்ணியத்தலமாக விளங்கியது. அத்தோடு தனுஷ்கோடி என்ற உலகப்புகழ் வாய்ந்த புண்ணியத் தீர்த்தமும் இங்குதான் அமைந்துள்ளது. பாரத தேசத்தில் காசியில் இருந்தும் பக்தர்கள் தங்களின் பாவங்களைத் தொலைக்கக் காடுகளையும், கள்வர்களையும் கடந்து உயிரை வெறுத்து புண்ணியத்திற்காக இராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி காலத் தரிசித்த வண்ணம் இருந்தார்கள். இந்த நிலையில் மதுரையை மாட்சிமை பொருந்தி ஆண்ட முத்து கிருஷ்ணப்பருக்குக் குருவானவர் ஒருவர் இராமேஸ்வரம் சென்று இராமனாத சுவாமிகளைத் தரிசித்துவிட்டுத் தனுஷ்கோடியில் தீர்த்தமாடப் பெரிதும் விரும்பினார். ஏன் இப்படி குருஜிக்காக முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் பதறுகின்றார்? அதற்குரிய காரணம் இருந்தது. அரசருக்கு மத விஷயத்தில் மட்டும் குருவாக குருஜி விளங்கவில்லை. அரசியல் ஆட்சி விவகாரத்திலும் தன்னிகரற்ற தகுந்த ஆலோசனைகளை குருஜி மதி யூகத்தோடு காத்து கொண்டிருந்தார். அரசருக்கு 'தளபதி எங்கே - உடனே வரச் சொல்” மன்னர் வீரன் ஒருவனுக்கு கட்டளையிட்டார். தளபதி வந்து பணிந்து நின்றார். 'தளபதி” அவர்களே! நமது குருஜி இராமேஸ்வரம் தீர்த்தயாத்திரை செல்ல ஆசைப்படுகிறார். அதற்குப் பொருத்தமான படை வீரர்களைத் தேர்ந்தெடுத்து என் முன்னால் கொண்டு வாருங்கள். அத்தோடு மறவர் நாட்டில் இருந்து ஒரு மாவீரனையும் குருஜிக்கு துணையாக அனுப்பினால் நல்லது அல்லவா? 'ஆமாம் அரசே! மறவர் நாட்டிலிருந்தே ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்தால் நல்லது அரசே!” ஒரு வாரம் கழிந்தது. போகலூர் என்ற ஊரின் தலைவராக இருந்த சடையக்கத் தேவர் எனப்படும் மாவீரர் முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கரின் முன்னால் பெருமையோடு கொண்டுவரப் பெற்றார். மன்னர் சடையக்கத் தேவரைப் பார்த்தவுடன் அவரது உருவம், பேச்சில் வீசிய அறிவொளி முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கரைப் பெரிதும் கவர்ந்து தன் வயப்படுத்தியது. சடையக்கத் தேவரும் மன்னருக்கு ஏற்ற மாதிரி நடந்து கொண்டார். உன்னை நம்பி என் குருநாதரை உங்களுடன் தீர்த்த யாத்திரைக்கு அனுப்பி வைக்கின்றேன் என்றார். உங்கள் ஆணை மன்னவா! என்றார் பதில் முழக்கமாக சடையக்கத் தேவர். மறவர் நாட்டில் காடுகளைக் களைந்து கள்வர்களை ஓட.. ஓட விரட்டி குருஜியை இராமேஸ்வரம் - தனுஷ்கோடி தீர்த்த யாத்திரைக்கு சடையக்கத் தேவர் அழைத்துச் சென்றார். குருஜியின் மனம் முழுவதிலும் இடம் பிடித்தார் சடையக்கத் தேவர். குருஜி மதுரைக்குத் திரும்பியதும் தன் மன்னனும் மாணவனுமான முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கரைச் சந்தித்தார். மன்னவா... என் மனம் குளிர்ந்தது! உன் நண்பன் சடையக்கத்தேவன் மூலம் இறைவனின் பரிபூரணமான அருளை நான் பெற்றேன். உன் ஆட்சி நிலைக்க நீ நீடித்த ஆயுளைப் பெற அந்த இராமநாதஸ்வாமி உனக்கு அருள்பாலிப்பார்” என்று மனம் மகிழ்ந்து ஆசீர்வதித்தார் குருஜி. சடையக்கத் தேவருக்கு ஏதாவது செய்தே தீருவது என்ற உறுதிப்பாட்டுடன் அன்றிரவு நிம்மதியாகத் தூங்கச் சென்றார். மறுநாள் அரசரின் ஆலோசனைக் குழு மறவர் நாடு பற்றியும், சடையக்கத் தேவரைப் பற்றியும் நிறைய ஆலோசனை செய்தது. சடையக்கத் தேவரிடம் சீர்கெட்டுக் கிடக்கும் மறவர் திருநாட்டை முறைப்படுத்திட ஒரு காவலன் தேவை, அதற்கு சரியான ஆள் இந்த சடையக்கத் தேவர் தான் என முடிவு செய்யப்பட்டது. மன்னர் சொல்லைக் கேட்டு மகிழ்ந்த சடையக்கத் தேவர் தனது வீரத்திற்குக் கிடைத்த பரிசை எண்ணி மகிழ்ச்சி அடைந்தார். புதிதாக ஒரு மறவர் நாட்டைச் சடையக்கத் தேவர் மூலமாக உருவாக்கிய பெருமை முத்துக்கிருஷ்ணப்ப நாயக்கரையே சேரும். கி.பி. 1605ஆம் ஆண்டு முதல் சேதுபதியாக பதவி ஏற்ற சடையக்கத் தேவர் மிகச் சிறந்த முறையில் ஆட்சிப் பணியைத் தொடங்கினார். அதன் பிறகு திருமலை நாயக்கர் என்ற புகழ்பெற்ற நாயக்க மன்னர் மதுரையை ஆண்டு வந்தார். அவர் மிகச் சிறந்த நாயக்க மன்னர் மட்டுமல்ல, சிறந்த ராஜ தந்திரம் உடையர். சடையக்கத் தேவர் கி.பி. 1621ஆம் ஆண்டில் மறைந்தார். கி.பி. 1621ஆம் ஆண்டு முதல் 1635ஆம் ஆண்டு வரை கூத்தன் சேதுபதி மறவர் நாட்டை மிகச் சிறந்த முறையில் ஆண்டார். கூத்தன் சேதுபதிக்கு குழந்தை இல்லை. அவரது மறைவுக்குப் பிறகு இரண்டாம் சடையக்கத் தேவர் என்று பெயர் பெற்றிருந்த தளவாய் சேதுபதி மறவர் நாட்டின் சேதுபதியாகப் பதவி ஏற்றார். தளவாய் சேதுபதி அவர்கள் திடீரென ஓர் அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு மறவர் சீமையில் பெரும் உள்நாட்டுப் போரை உருவாக்கிப் பங்காளிகளைப் பகையாளிகளாக மாற்றி வெறி கொள்ள வைத்தது. அந்த அறிவிப்பு 'எனக்குப் பின் மறவர் நாட்டை ஆளும் உரிமை என் தமக்கையின் மகன் இரகுநாத தேவருக்குத்தான்” என்பது. இந்த அரசுரிமை பற்றிய அறிவிப்பால் மிகுந்த கோபம் கொண்டவர் கொதித்தெழுந்தவர் தம்பித் தேவராவார். தம்பித்தேவர் யார்? இவர் சடையக்கத் தேவரின் காதல் மனைவிக்குப் பிறந்தவராவார். மேலும் இவர் காளையார் கோவிலை ஆண்டு வந்தவர். தம்பித்தேவர் தொடர்ந்து தளவாய் சேதுபதிக்குத் தொல்லை கொடுத்து வந்தார். உள்நாடடில் இரத்த ஆறு ஓடியது. தம்பித்தேவரைத் திருமலை நாயக்கர் ஆதரிக்கின்றார் என்ற செய்தி வதந்தியாக மறவர் நாடு முழுவதும் பேச வைக்கப்பட்டது. திருமலை நாயக்க மன்னர் மேற்கொண்ட இராஜ தந்திரத்தால் மறவர் நாட்டை தளவாய் சேதுபதி பலமிழந்தார். திருமலை நாயக்கரின் மனோநிலையை உணர்ந்து கொண்ட தம்பித்தேவர் மதுரைக்குச் சென்று அவரிடம் சரணம் என்று சேர்ந்தார். திருமலை நாயக்கரும் தளவாய் சேதுபதியை கலகக்கார் என்று அறிவித்தார். தம்பித் தேவர்தான் மறவர் நாட்டின் மன்னர் என்றும் அறிவித்தார். தம்பித் தேவருக்குத் தேவையான பணத்தையும் படையையும் வேண்டிய அளவிற்கு விரும்பிக் கொடுத்தார் திருமலை நாயக்க மன்னர். தம்பித் தேவரும் படைகளுடன் மறவர் நாட்டுக்கு வந்து தளவாய்ச் சேதுபதியோடு மோதினார். தளவாய் சேதுபதி இராமேஸ்வரத் தீவுக்குள் அகழிபோலப் பயன்படுத்திப் பாதுகாப்பாக இருந்தார். இறுதியில் திருமலை நாயக்கர் படையுடன் இராமப்பையர் மற்றும் அவரின் மருமகன் உதவியுடன் தளபதி சேதுபதியையும், தணக்கத் தேவரையும் கைது செய்து மதுரைக்கு கொண்டு வந்தார். மறவர் சீமையில் சேதுபதியாக ஆன தம்பித்தேவர் அமைதியான மனநிலையில் ஆட்சியைத் தொடர முடியாது பெரிதும் தொல்லைப்படுத்தப்பட்டார். தம்பித் தேவருக்குத் தாளாத தொல்லை தந்தவர்கள் இரகுநாதத் தேவர், நாராயணத் தேவர் ஆகியோர் ஆவார்கள். மேற்குறிப்பிட்ட இரண்டு பேரின் ஓயாத உரசல்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தம்பித் தேவர் மறுபடியும் திருமலை நாயக்க மன்னரின் உதவியை நாடினார். ஆனால் இப்போது திருமலை நாயக்க மன்னரின் மனம் முழுவதுமாகத் தம்பி தேவருக்கு எதிராக நின்றது. தளவாய் சேதுபதியை மீண்டும் மறவர் சீமைக்கு தம்பித் தேவருக்குப் பதில் சேதுபதி மன்னர் என மன்னர் திருமலை நாயக்கர் அறிவித்தார். இது காலத்தின் மாற்றம் தான். தளவாய் சேதுபதி மாட்சிமை மிக்க மன்னராக மீண்டும் இராமநாதபுரம் நகருக்குள் நுழைந்தார். அவருக்கு மக்கள் அமோக வரவேற்பு கொடுத்தார்கள். கி.பி. 1646ஆம் ஆண்டு தளவாய் சேதுபதி தம்பித் தேவரால் படுகொலை செய்யப்பட்டார். மறவர் நாட்டில் ஏற்பட்ட குழப்பத்தை முடிவிற்குக் கொண்டுவர நினைத்தார் திருமலை நாயக்கர் மன்னர். கி.பி. 1646ஆம் ஆண்டில் மறவர் நாடு மூன்றாக பிரிக்கப்பட்டது. கீழ்க்கண்டவாறு திருமலை நாயக்க மன்னர் பிரித்தார். இரகுநாதத் தேவருக்கு - இராமநாதபுரம் பகுதி, தம்பி தேவருக்கு - சிவகங்கைப் பகுதி, தணக்கத் தேவர், நாராயணத் தேவர் ஆகிய இருவருக்குமாக - திருவாடனைப் பகுதி என மூன்றாகப் பிரிக்கப்பட்டது. கி.பி. 1647ஆம் ஆண்டு இராமநாதபுரம் பகுதியை ஆளவந்த இரகுநாத சேதுபதி அதிர்ஷ்டமுள்ளவராகவும், சிறந்த ஆட்சித் திறமை உடையவராகவும் இருந்தார். இரகுநாத சேதுபதி என்ற திருமலை சேதுபதியின் புகழ் மறவர் நாட்டையும் தாண்டி எல்லைகளை எல்லாம் கடந்து பரவிடும் காலம் என்று அவரைத் தேடிவந்து நின்றது. மறவர் சீமை பிரிவதற்குக் காரணமாக இருந்த தணக்கத்தேவர் மற்றும் தம்பித்தேவர் ஆகியோர் இறைவனடியில் சேர்ந்தனர். இதன் விளைவாக மறுபடியும் இரகுநாத சேதுபதியின் கீழ் மறவர் சீமை ஒன்றுபட்டது. 1659ஆம் ஆண்டு மைசூர்ப்படை மதுரை நகரைத் தாக்கியது. அந்தப் பயங்கரத் தாக்குதலை கண்ட திருமலை நாயக்கரால் எதிர்கொள்ள முடியவில்லை. உடனே இராமநாதபுரம் உதவியை மன்னர் திருமலை நாயக்கர் நாடினார். ஒரே நாளில் இருபத்தைந்தாயிரம் படை வீரர்கள் உடன் மதுரைக்குச் சென்று மைசூர் படையை ஓட ஓட விரட்டி அடித்தனர். திருமலை நாயக்கர் திகைத்துப் போனார். இரகுநாத சேதுபதியின் உதவியை நினைத்து பெரிதும் மகிழ்ச்சியடைந்தார். அதன் பயனாக 'தாலிக்கு வேலி” என்ற பட்டத்தைக் கொடுத்து இரகுநாத சேதுபதியை பெருமைப்படுத்தினார். அத்தோடு மறவர் சீமையை ஆளுவதால் 'முன்னோர் வழக்கப்படி மறவர் சீமையை ஆண்டுவந்த சேதுபதிகள் தவறாது செலுத்தி வந்த கப்பத் தொகையை இனி இரகுநாத சேதுபதி செலுத்த வேண்டாம் என்று கட்டளையிட்டார். திருப்புவனம், திருச்சுழி, பள்ளிமடம் ஆகிய பகுதிகளை திருமலை நாயக்ர் மனமுவந்து இரகுநாத சேதுபதிக்குக் கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் தான் மட்டும் பரம்பரையாகக் கொண்டாடி மகிழும் மதுரைக்கே அக்காலத்தில் பெருமை சேர்த்த நவராத்திரி விழாவை இரகுநாத சேதுபதியும், இராமநாதபுரத்தில் தனக்கு இணையாகக் கொண்டாடி மகிழும் உரிமையைத் தந்தார். அந்த விழா இன்றும் இராமநாதபுரத்தில் சீரும் சிறப்புமாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. சிறிது காலம் கழித்து மதுரை மீது முற்றுகையிட வந்த யூசுப்கானையும் இரகுநாத சேதுபதி பெரும் படையுடன் விரட்டி அடித்து திருமலை நாயக்கருக்கு உதவி செய்தார். தனது காலத்தில் மறவர் சீமையை வளப்படுத்திய பலப்படுத்திய புகழ் ஒளி நிறைந்த வீரத்திருமகன் இரகுநாதசேதுபதி அவர்கள் 1672ஆம் ஆண்டில் மறைந்தார். இரகுநாத சேதுபதிக்குப் பிறகு பட்டமேற்ற இராசசூய சேதுபதி ஆறு மாதத்தில் கொல்லப்பட்டார். இராசசூய சேதுபதிக்கு பிறகு பட்டத்திற்கு வந்த அவரது தம்பி ஆதன இரகுநாத சேதுபதி மூன்று மாதங்களில் ஆட்சியை முடித்துக் கொண்டார். இராசசூய சேதுபதி மற்றும் ஆதன சேதுபதி ஆகியோருக்கு குழந்தை இல்லாததினால் அவர்களின் நெருங்கிய உறவினர் ஆன கிழவன் சேதுபதி என்றழைக்கப்பட்ட இரகுநாததேவர் 1674ஆம் ஆண்டில் மறவர் சீமையின் ஒப்பற்ற சேதுபதி ஆனார். கிழவன் சேதுபதி மறவர் சீமையின் வரலாற்றில் கரும்பு நெஞ்சம் கொண்டவர். இவர் ஆட்சி செய்த காலம் முழுவதும் எதிர்ப்பே இல்லாத உயர்ந்த நிலையில் விளங்கிய காலமாகும். புதுக்கோட்டையை ஆண்ட பல்லவராயர் கிழவன் சேதுபதிக்கு முரணாகத் தஞ்சை மன்னனுடன் நேசம் கொண்டிருந்ததால் இதைத் தெரிந்து கொண்ட கிழவன் சேதுபதி பல்லவராயனைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, தனது கள்ளர் இன மனைவி 'கதலி” என்பவளின் சகோதரனாகிய இரகுநாதத் தொண்டைமானை அரசன் ஆக்கினார். இப்படித்தான் புதுக்கோட்டையில் தொண்டைமான் அரசு உதயமாயிற்று. கிழவன் சேதுபதி முப்பத்தாறு ஆண்டுகளாக மறவர் நாட்டை ஆண்டு மகத்தான வெற்றிகளைப் பெற்றவர். இரகுநாத சேதுபதியைப் போல கிழவன் சேதுபதியும் மதுரை மன்னருக்கு ஆரம்ப காலத்தில் உதவி செய்தவர் தான். ருஸ்தம்கான் தலைமையில் வந்த முஸ்லீம் படையெடுப்பின் போது மதுரை மன்னருக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்தார். சில காரணங்களை மையமாக வைத்து மதுரை மன்னருக்கும் கிழவன் சேதுபதிக்கும் பகை உருவாயிற்று. அது போராகத் தோன்றி இருதரப்பினருக்கும் வெற்றி தோல்வி இன்றி முடிந்தது. 1702ஆம் ஆண்டில் ராணி மங்கம்மாள் மறவர் நாட்டின் மீது படையெடுத்தார். ராணி மங்கம்மாள் அனுப்பிய பெரும் படையுடன் தஞ்சாவூர் படையும் கலந்து சேது நாட்டின் மீது தாக்கிட வந்தது. இந்த கூட்டுப்படையை கிழவன் சேதுபதி மிக துணிச்சல் உடன் எதிர்கொண்டு போரிட்டு விரட்டி அடித்து முகவையை பெரிய அழிவில் இருந்து காப்பாற்றி சேது நாட்டை கிழவன் சேதுபதி முழுமையான சுதந்திரப் பகுதியாக அறிவித்தார். 1709ஆம் ஆண்டில் படையெடுத்து வந்து தஞ்சை நாட்டின் படைகளை வென்று அறந்தாங்கி கோட்டையையும் கைப்பற்றினார் கிழவன் சேதுபதி. மறவர் நாட்டில் புகழை தமிழகம் முழுவதுமாகப் பரப்பிய கிழவன் சேதுபதி 1710ஆம் ஆண்டில் காலமானார். கிழவன் சேதுபதி தன் மறைவிற்கு முன்னதாக தன் காதலியின் மகன் பவானி சங்கரத்தேவனுக்கு முடிசூட்ட நினைத்தார். ஆனால் மக்களின் விருப்பம் வேறு விதமாக இருந்ததால் விஜய ரகுநாதனுக்கு அரசுரிமையை கொடுக்க ஒப்புக்கொண்டார். விஜய இரகுநாத சேதுபதியின் ஆட்சி 1711ஆம் ஆண்டு வாக்கில் தொடங்கியது. உடனே பவானி சங்கரத் தேவரின் தொல்லையும் தொடர்ந்து தொடங்கியது. பவானி சங்கரத் தேவன் தனக்குத் துணையாக புதுக்கோட்டை மன்னன், தஞ்சை மன்னன் ஆகியோரைச் சேர்த்துக் கொண்டு விஜய இரகுநாத சேதுபதியை அறந்தாங்கிக் கோட்டையில் வைத்து சண்டையில் சந்தித்தார். நோயின் தாக்குதலுக்கு ஆளாகி இருந்து விஜய இரகுநாத சேதுபதி தனது சாவை எண்ணி கிழவன் சேதுபதியின் பேரனான தண்டத் தேவன் என்ற சுந்தரேச இரகுநாத சேதுபதியை மறவர் சீமையின் அரசரராக நியமித்தார். இந்த காலக்கட்டத்தில் விஜய இரகுநாத சேதுபதி 1720ஆம் ஆண்டில் மரணமடைந்தார். மறவர் சீமை மக்களிடம் தனது நிலையை உயர்த்திக் காட்டி பவானி சங்கரன் மறவர் சீமையின் ஆட்சியைக் கைப்பற்றினார். பதவியில் இருந்து துரத்தப்பட்ட தண்டத் தேவன் தனது ஆட்சி உரிமையை மறுபடியும் நிலைநாட்டிக் கொள்வதற்காகப் போராட்டத்தில் இறக்கினார். தண்டத்தேவன் தனக்குத் துணையாக மதுரை மன்னன், புதுக்கோட்டை மன்னன் ஆகியோரைச் சேர்த்துக் கொண்டு மறவர் சீமையின் சேதுபதியாக அறந்தாங்கிக் கோட்டையில் வீற்றிருந்து ஆட்சிபுரிந்து கொண்டிருந்த பவானி சங்கரத்தேவனைத் தாக்கி அறந்தாங்கிக் கோட்டையைக் கைப்பற்றினார். மறவர் சீமையின் அரசனாகப் பதவியேற்றார் தண்டத்தேவன். இந்நிலையில் பவானி சங்கரத் தேவன் நாட்டைவிட்டு ஓடி தனது சொந்தமான தஞ்சை மன்னரிடம் சரணடைந்தார். மன்னர் பிரானே எனக்கு உதவி செய்து மறவர் நாட்டை எனக்கு மீண்டும் கிடைக்கும்படி நீங்கள் செய்துவிட்டால் பாம்பாற்றிற்கு வடக்கே உள்ள பகுதிகளை எல்லாம் உங்களுக்கே தந்துவிடுகிறேன் என்றார் பவானி சங்கரன். பவானி சங்கரனுக்கு ஆதரவாகத் தஞ்சையின் படைகள். தண்டத்தேவனுக்கு ஆதரவாக மதுரையின் படைகளும், புதுக்கோட்டை படைகளும் களத்தில் சந்தித்தன. தஞ்சை படைத் தளபதி புதுக்கோட்டைத் தொண்டைமானின் இரண்டு மக்களையும் கைது செய்தார். தஞ்சை தளபதியுடன் உடன்பாடு செய்து கொண்டு சண்டையிலிருந்து விலகினார் புதுக்கோட்டை மன்னர். இறுதியில் தஞ்சைப் படை தண்டத்தேவனின் படையையும், மதுரைப் படையையும் எளிதாகத் தோற்கடித்தது. தண்டத்தேவனுக்கு நெருக்கமாக இருந்தவர்களும் கொல்லப்பட்டனர். பவானி சங்கரத்தேவன் மீண்டும் மறவர் நாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்த போது மறவர் நாட்டைச் சேர்ந்த பகுதிக்கும் தலைவராக இருந்தார். இந்தச் சமயத்தில் தான் சிவகங்கைக்கு அருகாமையில் உள்ள நாலுகோட்டை பாளையத்தில் சொந்தக்காரர் சசிவர்ணத்தேவர் மிகச் சிறந்த வீரர் என்ற பெயர் பெற்றிருந்தார். இவர் மறவர் நாட்டின் மன்னராக பவானி சங்கரத்தேவர் வரக்கூடாது என்ற எண்ணத்தில் இருந்ததினால் இவரது செல்வாக்கு, செல்வம், வீரம் இவைகள் மீது பொறாமை கொண்ட பவானி சங்கரத்தேவன் சசிவர்ணத் தேவரின் உடைமைகளைப் பறித்து மறவர் சீமையை விட்டுவிரட்டினார். சசிவர்ணத் தேவர் தஞ்சை அரண்மனைக்குச் சென்றார். தன்னை யார் என்று காட்டிக் கொள்ளாமல் அங்குள்ள அமைச்சர்கள் மற்றும் அரசப் பிரதானிகளின் முன்பாக தனது வீரதீரங்களைக் காட்டினார். பல வீரர்களை வெற்றி கொண்டார். சசிவர்ணத்தேவர் புலியோடு சண்டையிடுவதைப் பார்த்த தஞ்சை மன்னரின் நெருங்கிய உறவினர்கள்கூடப் பயத்தில் அலறினார்கள். தஞ்சை மன்னரின் நெருக்கம் சசிவர்ணத்தேவருக்கு வீரத்தின் பரிசாக கிடைத்தது. ஒரு சமயம் தஞ்சாவூர் மன்னரைக் கொல்ல அவரது எதிரிகள் திட்டம் போட்டனர். மன்னரை எப்படிக் கொல்வது என்று பலவாறு ஆலோசித்து மன்னரின் எதிரிகள் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள். மூர்க்கமான காளை ஒன்றினை ஆரம்ப காலம் தொட்டே மன்னரின் உடையில் வீசும் வியர்வை வாடையைப் பிடிக்கச் செய்து வெறி கொள்ள வைத்து வளர்த்தனர். சமயம் பார்த்து மன்னர் மீது அந்தக் கொலை வெறிக் காளையை ஏவிவிட்டனர். சசிவர்ணத் தேவருக்கு அவர்களின் துர்குணம் எப்படியோ தெரிந்தது. காளையின் முன்னே பாய்ந்து அதன் வலிமை மிக்க கொம்புகளை உடைத்து அந்த முரட்டு காளையை அடக்கி மன்னனின் உயிரைக் காப்பாற்றினார். இந்த நிகழ்ச்சியால் தஞ்சை மன்னர் மனதில் சசிவர்ணர் நீங்கா இடம் பெற்றார். தஞ்சையில் ஏற்கனவே மறவர் சீமையைச் சேர்ந்த ஒருவர் அடைக்கலமாகி இருப்பதால் அவர் விஜய இரகுநாத சேதுபதியின் நெருங்கிய உறவினர் தட்டையத் தேவர் ஆவார். தட்டையத்தேவரும், சசிவர்ணத்தேவரும் பவானி சங்கரத்தேவரால் பல துன்பத்திற்கு ஆளானவர்கள். இவர்களின் பொது எதிரியாக பவானி சங்கரத் தேவர் கருதப்பட்டார். தஞ்சை மன்னருக்கு பவானி சங்கரத் தேவ சேதுபதி மீது ஏராளமான கோபம் இருந்தது. 'பாம்பாற்றில் வடக்கே உள்ள பகுதிகளைத் தருகின்றேன் என்று வாக்குறுதியை கைப்பற்றினார். பவானி சங்கரத்தேவ சேதுபதி நிறைவேற்றாதது” தஞ்சை மன்னனுக்குப் பெரும் வெறுப்பை ஏற்படுத்தி இருந்தது. தட்டையத் தேவரிடமும், சசிவர்ணத் தேவரிடமும் சரியான முறையில் ஒப்பந்தங்களை எழுதி வாங்கிக் கொண்ட தஞ்சாவூர் படை பவானி சங்கரத்தேவ சேதுபதியின் படைகளை ஓரியூரில் எதிர்கொண்டது. தோல்வி அடைந்த பவானி சங்கரத்தேவர் சேதுபதி சிறையில் அடைக்கப்பட்டார். ஒப்பந்தப்படி தஞ்சை மன்னர் பாம்பாற்றின் வடக்கே பரவிக் கிடந்த பெரும் நிலப் பகுதிகளைத் தஞ்சை தரணியுடன் சேர்த்துக் கொண்டார். தான் எடுத்துக் கொண்ட பாம்பாற்றின் வடபகுதி போக எஞ்சியவற்றை ஐந்து பகுதிகளாகப் பிரித்தார் தஞ்சை மன்னர். ஐந்து பகுதிகளில் மூன்று பகுதிகளை தட்டையத் தேவர் எடுத்துக் கொண்டார். இவர்தான் குமாரமுத்து விஜயரகுநாதர் ஆவார். மீதி இருந்த இரண்டு பகுதிகளை சசிவர்ணத்தேவர் எடுத்துக் கொண்டார். இவருக்கு நாலுக்கோட்டை உடையத்தேவர் என்ற பெயரும் உண்டு. நாலுக்கோட்டை உடையத்தேவர் ஆண்ட பகுதிதான் சிவகங்கை சீமை என்றழைக்கப்பட்டது. சசிவர்ணத் தேவர் என்ற நாலுக்கோட்டை உடையத்தேவர் சிவகங்கை சீமைக்கு ராஜமுத்து விஜயரகுநாத பெரிய உடையத்தேவர் என்ற பெயரில் அரசரானார். சசிவர்ணத் தேவரின் தந்தையார் பெயர் கண்டுமேச்சி பெரிய உடையத்தேவர். இராமநாதபுரத்தின் சேதுபதி விஜய இரகுநாத சேதுபதியின் மகளான அகிலாண்டேஸ்வரி நாச்சியாரை மணந்து கொண்டவர் சசிவர்ணத் தேவர். தன் மனைவி வழியாக வந்த சீதனங்களுக்கு எல்லாம் சசிவர்ணத்தேவர் உரிமையாளரானார் என்பது குறிப்பிடத்தக்கது. கி.பி.1730ஆம் ஆண்டில் தான் சிவகங்கை சீமை உருவாயிற்று. இதற்கு 'சின்ன வாடகை” என்றும் சிறிய மறவர் நாடு என்றும் பெயர் விளங்கப் பெற்றது. தட்டையத்தேவர் என்ற குமாரமுத்து விஜயரகுநாதர் ஆண்ட இராமநாதபுரம் பகுதிக்குப் 'பெரிய வாடகை” என்றும் பெரிய மறவர் நாடு என்றும் பெயர்கள் வழங்கப்பட்டன..