★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Tuesday, August 2, 2011

தன்மானத் தமிழ் மறவர் சி.இலக்குவனார் நூற்றாண்டு விழா, ஒரு கண்ணோட்டம்.

வரலாறு காணாதபடி, பெரும் பனிப்பொழிவு ஆட்கொண்ட பூமியில், இளவேனிற் காலம் திரும்பியிருந்தது. கூடவே, மலையெனக் குவிக்கப்பட்ட பனிப்பொழிவும் முழுவதுமாய்க் கரைந்து விட்டிருந்தது. குளிரில்லாத இதமான காற்று தழுவிய நேரமது; பிற்பகல் சரியாக மணி இரண்டு!!

மேரிலாந்து மாகாணத்தில் இருக்கும் கொலம்பியா நகரம். அமெரிக்காவிலேயே முனைவர்கள் அதிகமாக வாழும் ஊர் இதுவாகத்தான் இருக்கும்! அந்நகரத்தின் மைய நூலகத்தில் தன்மானத் தமிழ் மறவர் சி.இலக்குவனாருக்கு நூற்றாண்டு விழாவும், புறநானூற்றுக் கருந்தரங்க நிகழ்ச்சியும்.


சிகாகோ நகரில் இருந்து முனைவர் ஃபிரான்சிஸ் முத்து அவர்களும், மருத்துவர் இளங்கோ அவர்களும் முன்னதாகவே வந்து குழுமி இருந்தார்கள். மருத்துவர் அவர்கள், கையோடு புத்தகங்களைக் கொண்ர்ந்து அங்கே பார்வையாளர்களுக்காக வைத்திருந்த காட்சி அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. மனமுவந்த நன்கொடையோடு புத்தகங்கள் இடம் மாறிக் கொண்டு இருந்தன.

கண்மூடித் திறப்பதற்குள் அரங்கம் ஆயத்த நிலைக்கு வந்தது எப்படி என்றே புரியவில்லை. காலநேரம் தவறாமை என்பது முனைவர் பிரபாகர் அய்யா அவர்களின் தாரகமந்திரம் எனப் பலர், சிலாகித்துக் கொண்டு இருந்ததையும் காண முடிந்தது.

தமிழாசான் திரு.கொழந்தைவேல் இராமசாமி அவர்களுடன் இணைந்து மற்றவர்களும் தமிழ்வாழ்த்தைப் பாட, நிகழ்ச்சியானது துவங்கியது. வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைத் தலைவர் முனைவர் முத்துவேல் செல்லையா அவர்கள் தலைமை உரையாற்றியும், விழாவைத் தொகுத்தும் வழங்கினார்கள்.


புறநானூறு காட்டும் சங்ககாலத் தமிழகம் எனும் தலைப்பில் உரையாற்ற, முனைவர் ஃபிரான்சிஸ் முத்து அவர்களுக்கு விழாத் தலைவர் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, அவர் மேடைக்கு வந்து சங்ககாலத்தை பாடற்சான்றுக்ளுடன், சமத்துவம் வாய்ந்த சமுதாயம் எப்படிச் சங்க்காலத்தில் சிறந்தோங்கியது என்பதை வெகு அழகாக விளக்கினார்.

அகம், புறம் என்பதற்கு அவர் அளித்த விளக்கம் அனைவரையும் கவர்ந்தது. கூடவே, அன்றைய காலத்தில் இலக்கிய வரம்பு என ஒன்று எவ்வாறெல்லாம் கடைபிடிக்கப்பட்டது என்பதையும் தெளிதமிழில் விளக்கிக் கூறினார்.

முனைவர் ஃபிரான்சிஸ் முத்து அவர்களுக்கு அடுத்தபடியாகப் பேச வந்தார், இலக்கிய வட்டத் தலைவர், முனைவர் திரு.இர,பிரபாகரன் அவர்கள். எப்படி வாழ வேண்டும் என்பதைச் சொல்கிறது திருக்குறள்; எப்படி வாழ்ந்தார்கள் என்பதைச் சொல்கிறது புறநானூறு என்று எவருக்கும் விளங்கும்படியாக, அடுக்கடுக்காக செறிவான இலக்கிய மேற்கோள்களைக் காண்பித்து, அனைவரையும் இலக்கிய மழையில் நனைய வைத்தார் இவர்.

கொடை எவ்வாறு போற்றப்பட்டது என்பதையும், புரவலர்களும் புலவர்களும் எப்படி வாழ்ந்தார்கள் என்பதையும் அங்கு கூடியவர்கள் கண்முன்னே, காட்சிகளாகக் கொண்டு வந்து நிறுத்தினார் என்று சொன்னால், அது மிகையாகாது. மொத்தத்தில், சங்ககாலமென்பது தமிழகத்தின் பொற்காலம் என, அவர் தனது சொற்பொழிவை முடிவுக்கு கொண்டு வந்த போது, குழுமியிருந்த அனைவரும் சங்ககாலத்திற்கே நாம் சென்றுவிடக் கூடாதா என ஏக்கப் பெருமூச்சு விட்டனர்.

அடுத்தபடியாக, கோவை மாவட்டத்தில் இருந்து வந்திருந்த நல்லாசிரியர் திரு. கு.பெ. வேலுச்சாமி அவர்களைப் பேச வருமாறு தலைவர் அவர்கள் அழைப்புவிட, தமிழ்க்கடலே வந்து அனைவர் முன்னும் தோன்றியது.

புறநானூறு கூறும் வாழ்வியல் கருத்துகள் என்ற தலைப்பில் பேச வந்த நல்லாசிரியர் அவர்கள், வாழ்வின் அகக்கூறுகளையும் புறக்கூறுகளையும் வெகு அழகாக, அற்புதமான சொல்லாடலில் விளக்கினார். அறம் என்பது பண்டமாற்று அல்ல என அவர் அழுத்தம் திருத்தமாகச் சொல்லியபோது, அரங்கத்தினர் ஞானோதயம் பெற்றது போன்ற ஒரு அகச்சூழலுக்கு ஆட்பட்டனர்.

நல்லாசிரியர் திரு.கு. பெ. வேலுச்சாமி அவர்களை அடுத்து, நூற்றாண்டு விழா நாயகர், தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் அவர்களின் புதல்வி, முனைவர்.இ. மதியழகி மனோகரன் அவர்களை, ஆசிரியர் தலைவர் என்ற வகையிலே, பல போராட்டங்களை முன்னின்று நடத்தியதில், ஐந்து முறை சிறை சென்ற்வர் இவர் என அறிமுகம் செய்து வைக்கப்பட்டதும், பலத்த கரவொலியோடு மேடைக்கு வந்தார் முனைவர். இ.மதியழகி மனோகரன் அவர்கள்.

புறநானூற்று நெறியில் தமிழறிஞர் இலக்குவனார் எனும் தலைப்பில் பேசிய, தமிழறிஞரின் புதல்வி, தன் தந்தையார் எப்படி எல்லாம் தமிழுக்காக, தமிழ் இனத்துக்காக உழைத்தார் என்பதையும், கொடைக் குணத்தை எப்படி எல்லாம் வெளிப்படுத்தினார் என்பதையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டார்.

இடைவேளை நேரம் அறிவிக்கப்பட்டு, வந்திருந்த அனைவருக்கும் சிற்றுண்டி அளிக்கப்பட்டது. குறித்த நேரத்தில், நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும் என்பதில் அனைவருமே திண்ணமாக இருந்தபடியால், அடுத்ததாகக் குறித்த நேரத்தில், செந்தமிழ்க் காவலர் பேராசிரியர் இலக்குவனார் எனும் தலைப்பில் பேச வந்தவர் முனைவர் அரசு செல்லய்யா அவர்கள்.

முனைவர் அரசு செல்லய்யா அவர்கள், பேராசிரியரின் பங்களிப்புகள் ஒவ்வொன்றையும் நேர்த்தியாக எடுத்துக் கூறி, அவர் எப்படியெல்லாம் போராடுவோரிடம் போராடி, இணக்கமாக இருக்க வேண்டியவரிடத்து இணக்கமாக இருந்து, தமிழுக்கும் தமிழனுக்கும் பங்காற்றினார் என்பதை விவரித்தார்.

சொற்பொழிவு என்ற முறையிலே, இறுதியாக, இவர் ஒரு செயல்வீரர் என்ற முன்னுரையோடு, தன்மானத் தமிழ் மறவர் இலக்குவனார் எனும் தலைப்பில் பேச வந்தார் பதிவர் பழமைபேசி.

வந்தவர், வந்த வேகத்திலேயே, தமிழையும் தமிழனையும் தமிழ்நாட்டிலேயே இரண்டாந்தரமாக நடத்தும் போது, தன்மானத் தமிழ் மறவர் வழியில் நின்று நாம் ஏன் போராடக் கூடாது என உணர்ச்சி வயப்படலானார். அதைத் தொடர்ந்து, தன்மானத் தமிழ் மறவர் பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொண்ட பின்னர், வாய்ப்புக் கொடுத்த தமிழ்ச் சங்கப் பேரவைக்கு நன்றி ந்வில்ந்து தனது உரையை முடித்துக் கொண்டார் பழமைபேசி என்கிற மணிவாசகம்.

விழாத் தலைவர் அவர்களால் துடிப்பான உரை என வர்ணிக்கப்பட்ட பழமைபேசியின் உரையைத் தொடர்ந்து, அனைவரும் பேரார்வத்துடன் எதிர்நோக்கிக் கொண்டிருந்த, நாஞ்சில். திரு. பீற்றர் அய்யா அவர்களின் புறநானூறு - வினா விடை விளக்கம் எனும் பல்லூட நிகழ்ச்சி மிகுந்த எழுச்சியோடு உயிர்த்தது.

முனைவர். ஜெயந்தி சங்கர் அவர்கள் இலக்குவனார் அணிக்குத் தலைமை ஏற்றும், திரு. கொழந்தைவேல் இராமசாமி அவர்கள் பாவாணர் அணிக்குத் தலைமை ஏற்றும் இருந்தார்கள். இரு அணியினருமே, புறநானூற்றுப் பாடல்களை நன்கு கற்றாய்ந்து வந்திருந்தனர்.

வினாவுக்கு விடை என்பதோடு மட்டுமில்லாமல், மேலதிக விளக்கங்களை அளித்ததின் மூலம், வந்திருந்தோருக்கும் புறநானூற்றுச் சுவையை அளித்த பெருமை, நாஞ்சில் பீற்றர் அய்யா அவர்களையும், இலக்கிய வட்டத் தலைவர் முனைவர் பிரபாகர் அவர்களையும் சாருமென்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது.

நிகழ்ச்சியானது முடிபை நெருங்கிவிட, நல்லதொரு நிகழ்ச்சி முடிபுக்கு வந்து விட்டதே என அனைவரும் அங்கலாய்த்துக் கொண்டனர்.

அரங்கம் நிறைந்து, இடவசதி நெருக்கமாக இருந்ததால், அடுத்த முறை பெரிய அரங்கில்தான் வைக்க வேண்டும் என அனைவரும் ஒருமித்த குரலில் கூறிக் கொண்டனர்.

இறுதியாக, வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் தலைவி, திருமதி. கல்பனா மெய்யப்பன் அவர்கள் நன்றி நவில, விழா இனிதே முடிவுற்றது. கூடவே, மீண்டும் இந்நாள் எப்போது வாய்த்திடுமோ என்ற எண்ணத்தினூடே ஒருவொருக்கொருவர் பிரியா விடை பெறலாயினர்.