தமிழ்நாட்டு அரசியல், சமூக வரலாற்றில் 1957-ல் நடந்த முதுகுளத்தூர் சாதிக் கலவரம் முக்கியமானதாகும். இம்மானுவேல் சேகரனின் கொலையைத் தொடர்ந்து நடந்த அந்தக் கலவரத்தை அடக்க காங்கிரஸ் அரசு பல வழிகளில் முயன்றது. அதன் ஒரு கட்டமாக, கொலையாளிகளைத் தேடி நாலாபுறமும் போலீஸ் படைகள் புகுந்து புறப்பட்டன. 1957, செப்டம்பர் 14&ம் நாள் முதுகுளத்தூர் அருகே உள் கீழத்தூவல் கிராமத்திற்குள் புகுந்த போலீஸார், தவசியாண்டித் தேவர், ஜெனநாத தேவர், முத்துமணித் தேவர், சித்திரவேல் தேவர், சிவமணித் தேவர் என்ற ஐந்து இளைஞர்களை அந்த ஊர் கண்மாய்க்குள் அழைத்துச் சென்று அவர்களின் கண்களைக் கட்டி கருவேல மரத்தில் கட்டி வைத்து சுட்டுக் கொன்றார்கள். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதிலுமுள்ள தேவரினத்தவர்களிடம் இன்னமும் ஆறாத வடுவாக அமைந்துவிட்டது. ‘மறத் தமிழர் சேனை’ என்ற அமைப்பினர், கீழத்தூவலில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஐந்து பேருக்கும் மணிமண்டபம் கட்ட, வரும் ஏப்ரல் 14 - ம் தேதி (சித்திரை முதல் நாள்) அடிக்கல் நாட்டப் போவதாக அறிவித்துள்ளார்கள். ஏன் இந்தத் திடீர் அறிவிப்பு? என மறத் தமிழர் சேனையின் மாநில அமைப்பாளரான ‘புது மலர்’ பிரபாகரனை நாம் சந்தித்து கேட்டபோது, மடமடவென பேச ஆரம்பித்தார். ‘‘இம்மானுவேல் சேகரனின் கொலை வழக்கில் பசும்பொன் தேவரய்யா கொலைக்குற்றவாளியாக சேர்க்கப்பட்டபோது, ஒட்டுமொத்த தமிழகமும், தேவர் இனமும் அதிர்ந்து போனது எத்தனை நிஜமோ... அத்தகைய அதிர்வுகளை கீழத்தூவலில் ஐந்து தேவர் இன இளைஞர்கள் அன்றைய காங்கிரஸ் ஆட்சியில் சுட்டுக் கொல்லப்பட்டபோது, தேவர் இன மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. ஏனென்றால் அந்த ஐந்து இளைஞர்களும் அப்பாவிகள். இந்தக் கொலைக்கும், அவர்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது. தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி மறைவதற்கும் இக்கொலை சம்பவம்தான் முக்கியக் காரணமாகும். நிரபராதிகளான அவர்களது கொலைக்கு மறைந்த எம்.ஜி.ஆரிடம் தேவர் இன முக்கியஸ்தர்கள் முதுகுளத்தூர் தேர்தல் பிரசாரத்துக்கு வந்தபோது நியாயம் கேட்டார்கள். ‘இப்படியுமா கொலைகளை நடத்தினார்கள்?’ என அதிர்ந்து போய்த்தான், அந்த மாவீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்துக்கு வந்த எம்.ஜி.ஆர்., மலர்வளையம் வைத்து அவர்களுக்கு மரியாதை செலுத்திவிட்டு, ‘இந்த ஐவரது வீரத்திற்கும் நான் என்றும் தலைவணங்கக் கட்டுப்பட்டவன் ஆவேன். நீங்கள் அவர்களுக்கு முதலில் ‘நினைவு ஸ்தூபி’ கட்ட ஏற்பாடு செய்யுங்கள். நான் உதவி செய்கிறேன். பிறகு மணிமண்டபம் கட்டலாம்’ என்றார். உடனே ஏ.சி.சீனிச்சாமித்தேவர் தலைமையில் குழு அமைத்து வசூல் செய்து, முதுகுளத்தூர்- பரமக்குடி சாலையில் அந்த நினைவு ஸ்தூபியை நிறுவினோம். நினைவு ஸ்தூபியை நிறுவிய-உடனேயே, எங்கே விட்டால் இனி மணி மண்டபமே கட்டிவிடுவார்கள் போலிருக்கே என நினைத்த சில அமைப்புகள், அடுத்து வந்து தி.மு.க. அரசிடம் தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி, மணிமண்டப முயற்சிக்கு எத்தனை முட்டுக்கட்டை போட முடியுமோ, அத்தனை தடைகளையும் அடுத்தடுத்து போட்டார்கள்’’ என்றவர், அவற்றையும் விவரித்தார். ‘‘கீழத்தூவல் வீரத் தியாகிகள் சுட்டுக் கொல்லப்பட்ட செப்டம்பர் -14 -ஐ, வீர வணக்க நாளாக தேவர் இனத்தவர்கள் கடைப்பிடித்து வந்தோம். அன்றைக்கு வீரத்-தியாகிகள் சுட்டுக் கொல்லப்பட்ட ஸ்தலத்தில் தேவர் இனத்தவர்கள் மலர்-வளையங்களையும், தொடரோட்ட ஜோதிகளையும் கொண்டு வந்து அஞ்சலி செலுத்துவதை வாடிக்கையாகச் செய்து வந்தோம். கடந்த மூன்று வருடமாகத் தற்போதைய தி.மு.க. அரசாங்கம் செப்.-14 அன்று கீழத்தூவலில் ‘144 தடை’ உத்தரவைப் போட்டு, அஞ்சலி செலுத்த விடாமல் செய்துவிட்டார்கள். அதனால்தான் கீழத்தூவலில் வீரத் தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான பூமிபூஜை நாளை வரும் சித்திரை ஒன்றாம் தேதி என நிர்ணயம் செய்து, ‘மறத் தமிழர் சேனை’ சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுமதி கேட்டு கடிதம் கொடுத்துவிட்டோம். மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் இதற்கு அனுமதி மறுக்கும் பட்சத்தில், கோர்ட்டு மூலம் ஆர்டர் வாங்கி, நிச்சயம் மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டியே தீருவோம்’’ என்றார் உறுதியாக. மறத் தமிழர் சேனைக்கு ஆதரவாக, ‘கீழத்தூவல் தியாகிகள் ஐவர் அறக்கட்டளை’ என்ற அமைப்பும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பில் நம்மிடம் பேசிய கீழத்தூவலைச் சேர்ந்த முனியசாமித்தேவரும், சிவமணித்தேவரும் நம்மிடம், ‘‘அன்றைக்கு நடந்ததைக் கண்ணால் பார்த்த உயிரோடு உள்ள சாட்சிகள் நாங்க ரெண்டுபேரும்தான். கீழத்தூவல் கிராம மக்களையெல்லாம் ஆட்டுமந்தை மாதிரி ஒரு வட்டத்துக்குள் கூட்டி வந்து நிறுத்தி, அதில் நின்ற அந்த ஐந்து திடகாத்திரமான இளைஞர்களைத்தான் போலீஸார் சுட்டுக் கொன்றார்கள். அப்பாவி-களான அந்த ஐவரது குடும்பமும் இன்னிக்கு வரைக்கும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் வறுமையில்தான் வாடுகிறார்கள்’’ என்றவர்கள், அந்த ஐவரது வழிப் பேரப்-பிள்ளைகளான முத்துவையும், பாலமுருகனையும் நம் முன்னே கொண்டு வந்து நிறுத்தினார்கள். அவர்கள், ‘‘நாங்க அரசாங்கத்திடம் கல்வி, வேலைவாய்ப்பு, வீடு கோரிக்கையெல்லாம் வைக்க-வில்லை. எங்க தாத்தாமார்களது வீரமரணத்துக்கு மரியாதை செய்யும் விதமாக அவர்களுக்கு மணிமண்டபம் கட்ட அனுமதி கொடுத்தால் அதுவே எங்களுக்குப் போதுமானதாகும்’’ என்றார்கள். மறத் தமிழர் சேனையின் மணிமண்டப ஏற்பாடுகள் பற்றி, தலித் அமைப்பு ஒன்றில் முக்கியப் பொறுப்பு வகிக்கும் முக்கிய நிர்வாகி ஒருவர் பெயரைத் தவிர்த்துவிட்டு நம்மிடம் பேசினார். ‘‘செப்டம்பர் -14 அன்று சர்ச்சைக்குரிய ஊர்வலமோ, கூட்டமோ நடத்தக் கூடாது என்பதற்காகத்தான் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அன்றைக்குத் தலித் கிராமங்களான கீழக்கன்னிசேரி, மேலக்கன்னி சேரி வழியாக, வாகன போக்குவரத்து கூட தடைசெய்யப்பட்டு வருகிறது. இந்த மணிமண்டபம் விஷயமாகக் கீழத்தூவலுக்குக் கூட்டம் போட வந்த, பி.டி.குமாரை குறிவைத்த போதுதான், அப்பாவியான தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த கிருஷ்ணசாமி கன்னிசேரியில் வேல் கம்பால் குத்தப்பட்டார். எனவே மணி-மண்டபம் கட்ட தமிழக அரசு அனுமதி கொடுத்தால் தலித் அமைப்புகள் அதைத் தடுத்து நிறுத்தியே தீருவோம் என்றவர்கள், தமிழக அரசு இந்த விஷயத்தில் மிக மிக எச்சரிக்கையோடு நடந்து கொள்ள வேண்டும்’’ என எச்சரித்தார்கள், ராமநாதபுரம் எஸ்.பி. பிரதீப்குமாரிடம் இதுபற்றி கேட்ட போது, ‘‘மாவட்ட நிர்வாகமும், அரசும்தான் இவ்விஷயத்தில் எங்களுக்கு வழிகாட்ட வேண்டும். மிகவும் சென்சிடிவான பிரச்னை என்பதால் நிலைமைகளை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்’’ என்றார். மணிமண்டபம் கட்ட மறத் தமிழர் சேனை அமைப்பினர் செங்கல், ஜல்லி போன்றவற்றோ தயாராகிவிட்ட நிலையில் கீழத்தூவலில் இப்போதே டென்ஷன் பலமடங்கு ஏறிவிட்டது. சித்திரையின் கத்திரி வெயிலை-விட பதற்றமாகப்போகும் மணிமண்டபப் பிரச்னையை அரசு கையாளும் விதம்தான் இதற்கொரு சுமுகத் தீர்வுக்கு வழி சொல்லும். படங்கள்: சி. கார்த்திக் இந்த கட்டுரையின் Original பக்கத்தை படிக்க இங்கே கிளிக் செய்யவும் ‘ கிஷோர் |
நன்றி : தமிழக அரசியல் 25-02-2010