கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டதையடுத்து கடந்த 7 மாத காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அணு உலை பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டன.
இதனை எதிர்த்து கூடங்குளம் போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் கடந்த ஒரு வார காலமாக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை இடிந்தகரையில் நடத்தி வருகிறார். போராட்டக்காரர்களால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கக் கூடாது என்பதற்காக ராதாபுரம் தாலுகா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலைய பகுதியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக் குழுவினரை போலீசார் கைதுசெய்து ஜெயிலில் அடைத்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும், கூடங்குளம் அணுமின்நிலையத்தை முற்றிலும் மூடவேண்டும் என்று வலியுறுத்தி கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், புஷ்பராயன் மற்றும் 7 பெண்கள் உள்பட 15 பேர் சாகும் வரை உண்ணா விரத போராட்டத்தை தொடங்கினார்கள்.
இன்று அவர்களது போராட்டம் 8-வது நாளை எட்டியுள்ள நிலையில் தொடர் உண்ணாவிரதம் இருந்தவர்களில் ஒருவரான மில்ரெட் என்ற பெண்ணின் உடல் நிலை நேற்று மிகவும் மோசமடைந்தது.
ஆகையால் அந்த பெண் உண்ணாவிரத பந்தலில் இருந்து இடிந்தகரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், மற்ற 14 பேர் இன்று 8-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.
அவர்களது உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதால், அனைவரும் சோர்வுடன் உண்ணாவிரத பந்தலில் படுத்தபடியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த நிலையில் போராட்டக்குழுவினருக்கும் நக்சலைட்டுகளும் தொடர்பு இருக்கிறது என்று காவல்துறையினர் கூறினர்.
இன்று பத்திரிகையாளர்களிடம் உதயகுமார் பேசியதாவது:
இந்திய மக்களாகிய எங்களை நக்சலைட்டுகளுடன் தொடர்புபடுத்தி, தேசத்திற்கு எதிராக நாங்கள் செயல்படுவதாக கூறுவதை கண்டிக்கிறேன். இந்த போராட்டத்தை நாங்கள் கைவிட வேண்டுமெனில் போராட்டக்காரர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ள அத்தனை வழக்குகளையும் நீக்க வேண்டும். எங்களுடன் மத்திய அரசும், மாநில அரசும் பேச்சு வார்த்தை நடத்த முன்வர வேண்டும்.
நெல்லை மாவட்ட கலெக்டரும், மாவட்ட எஸ்.பி.யும் எங்களை நிறைய முறை சந்தித்திருக்கின்றனர். நாங்கள் தமிழக முதல்வரை 2 முறையும், பிரதமரை 1 முறையும் சந்தித்திருக்கிறோம். ஆனால் நாங்கள் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டதிலிருந்து மத்திய குழுவோ, மாநிலக் குழுவோ எங்களை சந்திக்கவில்லை.
இவ்வாறு உதயகுமார் கூறினார்.