பல்வேறு வரலாற்று ஆதாரங்களை வைத்து எழுதப்பட்ட நாவல் சு.வெங்கடேசனின் காவல் கோட்டம். அதின் சில சுவாரஸ்யமான பகுதிகளை திரைக்கதையாக அமைத்து அரவான் படத்தை உருவாக்கி இருக்கிறார் வசந்தபாலன். ’காவல் கோட்டம்’ சாகித்திய அகாதமி விருது பெற்ற நாவல் என்பது குறிப்பிடத்தக்கது.
18ஆம் நூற்றாண்டில் நடக்கிற கதை என்ற சவாலை ஏற்ற வசந்தபாலன், கதாபாத்திரங்களின் உடை, சிகை, பேச்சு, உடல் அசைவுகள், கலை, ஒளிப்பதிவு என அனைத்திலும் அந்த காலகட்டதின் உணர்வை ஏற்படுத்துகிறார். இதுவே வசந்தபாலனின் வெற்றி என கருதலாம்.
இது நாவலில் இருந்து அமைக்கப்பட்ட திரைக்கதையாக இருப்பதால், கதையைப் பற்றி நாம் அதிகமான விமர்சனங்களை வைக்க முடியாது. அது காட்சிப்படுத்தப்பட்ட விதத்தையே அலசிப்பார்க்க முடியும். மதுரையை சுற்றியுள்ள சிற்றூர்களும் அந்த மக்களுக்கு இடையே நடக்கும் சம்பவங்களுமே கதையின் மையம். கிராமிய தெய்வங்கள் உருவான விதத்தையும் பதிவு செய்வதாக உள்ளது.
இரண்டு கிராம மக்களுக்கு இடையேயான பகை, தீர்ப்பு சொல்லும் பண்ணையக்காரரால் (ராஜா) வருவதும், அந்த சூழ்ச்சியே ஒருவர் தெய்வமாக்கப்படுகிறார் என்ற செய்தியும் இதில் அடங்கி இருக்கிறதை நாம் உணர முடியும். இன்னும் தெளிவாக சொன்னால், பட்டாடை உடுத்தும் ராஜாவின் தவறுக்கு மேல்சட்டை அணியாத கிராம மக்கள் பலியாகிறார்கள் என்பதை உணரலாம்.
வேம்பூர் கிராமம் கள்ளர் வம்சத்தை சேர்ந்தவர் பசுபதி. களவாடுவதில் வல்லவர்களாக இந்த கிராமத்தில் இருக்கிறவர்கள் கருதப்படுகிறார்கள். வேம்பூர் கிராமத்தின் பேரைச் சொல்லி களவாடி வருகிறார் ஆதி. மகாராணியின் வைர அட்டிகையை களவாடியதும் ஆதிதான் என்று பசுபதிக்கு தெரியவர, ஆதியை பிடித்து வைர அட்டிகையை திரும்ப பெற்று அதை அரண்மனையில் ஒப்படைக்கிறார். இதனால் அவர் கிராமத்துக்கு 100 மூட்டை நெல் தரப்படுகிறது. ஆதியின் திறமையைப் பார்த்து அவரை தன் களவுகளில் சேர்த்துக் கொள்கிறார் பசுபதி.
ஆனால் ஆதி தன்னைப் பற்றிய முழு உண்மைகளையும் சொல்லாமல் மறைத்து வருகிறார். மாத்தூரில் களவாடும் போது பசுபதி சிக்கிக்கொள்கிறார். அவரை மீட்டெடுத்து வருகிறார் ஆதி. திருவிழா நேரம் மாடுபிடி போட்டி நடக்கிறது. வேம்பூர் கிராமத்தின் சார்பில் களமிரங்குகிறார் பசுபதி.
பசுபதிக்கு ஆபத்து வர, மீண்டும் அவரை மீட்டெடுக்க, களத்தில் ஆதி இறங்குகிறார். இவன் வேம்பூர்காரனே இல்லை என்று கூடி இருந்தவர்கள் அடித்து தாக்கும் போது. ஆதி தான் யார் என்ற உண்மையை சொல்ல வேண்டிய நேரம் வருகிறது. ஆதி சின்னவீரம்பட்டி நாக வம்சத்தை சேர்ந்தவர், அவர் ஏற்கெனவே திருமணமானவர், அவர் மாத்தூருக்கு பலிகொடுக்க வேண்டிய பலியாள் என்ற உண்மைகளை படத்தின் இரண்டாம் பாதி சொல்கிறது.
முதல் பாதியில் வரிபுலி கதாபாத்திரமாகவும் இரண்டாம் பாதியில் சின்னா கதாபாத்திரமாகவும் ஆதி மிரட்டி இருக்கிறார். கமர்ஷியல் ஹீரோக்களின் அந்தர் பல்டி சாகசங்களுக்கு பெப்பே காட்டுகிற மாதிரியான பல சவால்களை மேற்கொண்டிருக்கிறார். தன்ஷிகாவுடனான பாடல் காட்சிகளிலும் கதையைவிட்டு விலகாமல் அதற்கே உறிய நளினமான நடிப்போடு அசத்துகிறார். காளை மீது பசுபதியை மீட்டு வருகிற காட்சியில் காளைகளின் கூட்டத்தைவிட ஆதியின் நடிப்பே பிரம்மாண்டத்தை ஏற்படுத்தியது.
பசுபதி நல்ல நடிகர் என்பது எல்லோரும் அறிந்த விஷயம். இதிலும் பிண்ணியெடுக்கிறார் மனுஷன். படத்தின் முதல் பாதியில் ஆதியுடனான நையாண்டித் தனமான பேச்சுகளிலும், ஆதியின் மீது வைத்துள்ள பாசத்தை வெளிப்படுத்தும் காட்சிகளிலும், க்ளைமாக்ஸில் கலக்கத்தோடு இருக்கிற காட்சியிலும், முக்கியமாக களவாடுகிற காட்சிகளிலும் நடிப்பதே தெரியாமல் சவாலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் பசுபதி.
தன்ஷிகா அச்சுஅசல் மழைவாழ் பெண் மாதிரியே காட்சியளித்தார். கொடுக்கப்பட்ட காட்சிகளில் நன்றாக நடித்திருந்தாலும் அவர் கதாபாத்திரம் அழுத்தம் பெறவில்லை என்பதே உண்மை. சொந்தக்குரலில் பேசியிருக்கும் தன்ஷிகாவுக்கு ஒரு சபாஷ் போடலாம்.
ஆதியின் அம்மாவாக வரும் டி.கே.கலா, பசுபதியின் தங்கையாக வரும் அர்ச்சனா கவி, வில்லனாக சித்தரிக்கப்படும் கரிகாலன், ஊர் பெரியாளாக வரும் பெயர் தெரியாத பெரியவர்கள் முதல் ஆதியின் மகனாக வரும் சிறுவன் வரை அனைவரின் முகங்களும் மனதில் பதிந்து போகிற வகையில் படமாக்கப்பட்டு இருக்கிறது. ”களவில் இருந்து தான் காவல் பிறக்கிறது” என்று சொல்லும் ஆதிக்கு அவர் அம்மாவுடனான உரையாடல் காட்சி ரசிக்க வைக்கிறது.
சிறப்புத் தோற்றத்தில் வரும் பரத்தும், அஞ்சலியும் கொஞ்ச நேரம் வந்தாலும் நிறைவாகவே ஞாபகத்தில் இருக்கிறார்கள். பரத் அஞ்சலி வரும் காட்சிகளே படத்தின் கதைக்கு திருப்புமுனையாக இருப்பதும் இதற்கு காரணமாக இருக்கக் கூடும். காமெடியில் கலக்கும் சிங்கம் புலியை சொல்லாமல் இருக்க முடியாது.
ராஜாவாக வருபவர் நடிகர் கபிர் பேடி, அனைத்துவித சினிமாத்தனங்களையும் தூக்கிப்போட்டு இப்படித்தான் ராஜாக்கள் இருந்தார்கள் என்ற உண்மையை பதிவு செய்கிற விதத்தில் அமைந்திருக்கிறது அவர் கதாபாத்திரம்.
கதையின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களும் இருக்கக் கூடும்.