லண்டன், மார்ச். 14-
பிரபாகரன் மகன் கொல்லப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரம் உண்மையானது என சேனல்-4 தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் நடந்த இறுதி கட்ட போரின் போது ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்களை சிங்கள ராணுவம் சுட்டு கொன்றது. இந்த காட்சிகளை இங்கிலாந்தில் இருந்து ஒளிபரப்பாகும் சேனல்-4 தொலைக்காட்சி இன்று இரவு 10.55 மணி அளவில் (இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4.25 மணியளவில்) வெளியிடுவதாக அறிவித்துள்ளது.
அதில், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் சிங்கள ராணுவத்தினரால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ள காட்சியும் ஒளிபரப்பாகிறது என உறுதி செய்துள்ளது.
இந்த தகவல் இங்கிலாந்தின் “தி இன்டி இன்டி பெடன் டென்ட்” நாளேட்டில் வெளியாகி உள்ளது. மேலும் பாலச்சந்திரன் சுட்டு கொல்லப்பட்டு பிணமாக கிடக்கும் படமும் பிரசுரிக்கப்பட்டிருந்தது. சேனல்-4 ஆவணப்படத்தை தயாரித்துள்ள காலம் மாக்ரே எழுதியுள்ள கட்டுரை மூலம் இது வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த வீடியோ காட்சிகள் உண்மையானதா? என்ற கேள்வியை இலங்கை அரசு விடுத்துள்ளது.
மேலும் இது கிராபிக்ஸ் மூலம் புனையப்பட்ட காட்சி என சேனல்-4 தொலைக்காட்சி மீது குற்றம் சுமத்தியுள்ளது. ஆனால் பிரபாகரன் மகன் சுட்டுக் கொல்லப்பட்ட போது எடுக்கப்பட்ட இந்த வீடியோ ஆதாரம் உண்மையானது என சேனல்-4 தொலைக் காட்சி உறுதி பட தெரிவித்துள்ளது.
பாலச்சந்திரன் உடலில் குண்டு பாய்ந்த நிலையில் இறந்து கிடக்கும் காட்சியையும், அவரது அருகில் பிணமாக கிடக்கும் பாதுகாவலர்களின் புகைப்பட காட்சியையும், உடல் பிரேத பரிசோதனை நிபுணர் பேராசிரியர் டெர்ரிக் பவுண்டர் ஆய்வு செய்தார்.
அப்போது சரண் அடைய வந்த பாலச்சந்திரனை அருகில் நின்ற சிங்கள ராணுவ வீரர்கள் சுட்டு கொன்றுள்ளனர். அதே நேரத்தில், அவரது பாது காவலர்களின் கண்களை கட்டியும், கைகளை பின்புறம் கட்டியும் சுட்டு கொன்றுள்ளனர் என்பதையும் அவர் உறுதி செய்துள்ளார். இந்த தகவலை பிரபல எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான காலம் மாக்ரேயும் உறுதி செய்துள்ளனார்.