இலங்கை இறுதிக்கட்ட போரில் மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றம் தொடர்பான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா தாக்கல் செய்தது.
இதன் மீதான விவாதம் தொடங்கியது. அப்போது ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், நார்வே, கனடா, பெல்ஜியம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகள் இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டினை முன் வைத்து பேசின.அந்த நாட்டு பிரதிநிதிகள் இலங்கையை கண்டித்து பேசினார்கள்.
இதனால் கூட்டத்தில் இலங்கை பிரதிநிதி பதிலளிக்க முடியாமல் திணறினார். கனடா பிரதிநிதி பேசுகையில், இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். போர்க் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க இலங்கை தவறி விட்டது. இதில் ஐ.நா. நிபுணர்கள் குழுவின் அறிக்கையை கவனிக்கவும் இலங்கை தவறி விட்டது.
சர்வதேச சட்டங்களுக்கு புறம்பாக இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள், குற்றங்கள் குறித்து சுதந்திரமான விசாரணை தேவை என்றார். இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் தீர்மானத்தை ஆதரிப்பதாக இங்கிலாந்து பிரதிநிதி தனது விவாதத்தின்போது குறிப்பிட்டார்.
அவர் பேசுகையில், மனித உரிமைகள் மீறல் தொடர்பான குற்றச்சாட்டுகளை களைய இலங்கை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றார்.
நார்வே பிரதிநிதி பேசுகையில், இலங்கை தீவில் நடந்த சர்வதேச சட்ட மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை காலதாமதமின்றி பதிலளிக்க வேண்டும்.அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானத்தை நாங்கள் முழுமனதுடன் ஆதரிக்கிறோம் என்றார்.
இதேபோல டென்மார்க், பிரான்ஸ், ஆஸ்திரேலியா நாட்டு பிரதிநிதிகளும் இலங்கைக்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.
சர்வதேச நீதியாளர் ஆணையம் என்ற அமைப்பு இதில் வார்த்தைஜாலம் வேண்டாம், செயல்தான் முக்கியம், காலவிரயம் செய்யாமல் சுதந்திரமான சர்வதேச விசாரணை தேவை, ராஜபக்சே கடந்த 3 ஆண்டுகளாக தனது பொறுப்பில் இருந்து தவறி விட்டார்.
சர்வதேச மனிதாபிமான சட்டங்கள், சர்வதேச சட்டங்கள் ஆகிய வற்றுக்கு புறம்பாக அவர் செயல்பட்டுள்ளார். என்று குற்றம் சாட்டியது.இதற்கு பதில் அளித்த இலங்கை பிரதிநிதி, இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீடு தேவையில்லை. எங்கள் நாட்டு விவகாரத்தை நாங்களே கவனித்துக் கொள்வோம் என்றார்.