★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Monday, March 26, 2012

தமிழக பட்ஜெட் : எண்ணெய் முதல் சரக்கு வரை விலை எகிறும்

சென்னை: தமிழக அரசின் 2012-13ம் ஆண்டுக்கான பட்ஜெட், சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் ரூ.1500 கோடிக்கு புதிய வரிகள்
விதிக்கப்பட்டுள்ளன. முதல்வர் தலைமையில் தமிழ்நாடு கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் அமைக்க சட்டம் கொண்டு வரப்படும் என்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். ஏழைகளுக்கு இந்த ஆண்டில் 1 லட்சம் வீட்டு மனை பட்டா, 60 ஆயிரம் பசுமை வீடுகள், குடிசைகளுக்கு  இலவச சிஎப்எல் பல்புகள் உள்பட புதிய திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.



தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாள் என்பதால் எம்எல்ஏக்கள் காலை 9 மணி
முதலே சபைக்கு வரத் தொடங்கினர். முதல்வர் ஜெயலலிதா, 9.45-க்கு அவைக்கு வந்தார். அப்போது அமைச்சர்கள், உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து
முதல்வருக்கு வணக்கம் தெரிவித்தனர். திமுக எம்எல்ஏக்கள், மு.க.ஸ்டாலின் தலைமையில் அவைக்குள் வந்தனர். அவர்களைத் தொடர்ந்து பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட தேமுதிகவினர் வந்தனர்.காலை 10 மணிக்கு சபாநாயகர் ஜெயக்குமார் திருக்குறள் சொல்லி அவையை தொடங்கி வைத்தார். பின்னர், பட்ஜெட் தாக்கல் செய்ய நிதி அமைச்சர்

ஓ.பன்னீர்செல்வத்தை சபாநாயகர் அழைத்தார். இதைத் தொடர்ந்து, 2012-13ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை ஓ.பன்னீர்செல்வம் சபையில் தாக்கல் செய்து படித்தார்.

முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு கடந்த ஆண்டு பொறுப்பேற்ற பிறகு 2011-12ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இது, பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் 2-வது பட்ஜெட் ஆகும்.

பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

* தானே புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் நிரந்தர சேதம் அடைந்த குடிசைகளுக்கு மாற்றாக ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட ரூ.1000 கோடி ஒதுக்கீடு.

* இயற்கை இடர்பாடுகளை சமாளிக்க விரைவாகவும் திறமையாகவும் செயல்படக்கூடிய மாநில பேரிடர் மீட்பு படை ஏற்படுத்தப்படும்.

* முதல்வர் தலைமையில் தமிழ்நாடு கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் அமைக்க விரைவில் சட்டம்.

* கட்டமைப்பு மேம்பாட்டுக்கு முதல்கட்டமாக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு.

* 100 பின்தங்கிய வட்டாரங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் கல்வி, சுகாதாரம், தனிநபர் வருமானத்தில் உள்ள குறைபாடுகளை போக்க ‘மாநில

சரிநிகர் வளர்ச்சி நிதி’ என்ற சிறப்பு நிதி உருவாக்கப்படும். இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* இந்த ஆண்டுக்கான திட்ட ஒதுக்கீடு ரூ.28 ஆயிரம் கோடி.

* பெண்கள், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் ‘தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார திட்டம்’ இந்த ஆண்டில்

தொடங்கப்படும். இதற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.

* தனியார் துறையில் வேலைவாய்ப்பை உருவாக்கித்தர 37 மாவட்ட அளவிலான உதவி மையங்கள் ரூ.1.93 கோடியில் அமைக்கப்படும்.

* வட்டாட்சியர் அலுவலகங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாவட்டந்தோறும் ரூ.50 லட்சம் ஒதுக்கீடு.

* இந்த ஆண்டில் ஏழைகளுக்கு ஒரு லட்சம் வீட்டு மனை பட்டா வழங்கப்படும்.

* சென்னை மாநகரப் பகுதியில் ரூ.150 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும்.

* தலா ரூ.1 கோடி செலவில் 13 மாவட்டங்களில் புதிதாக ஓட்டுனர் பயிற்சி பள்ளி ஏற்படுத்தப்படும்.

* நீதித்துறைக்கு பட்ஜெட்டில் ரூ.736.15 கோடி ஒதுக்கீடு.

* வேளாண் துறைக்கு ரூ.3,805 கோடி ஒதுக்கீடு.

* திருச்சியில் வேளாண் வர்த்தக மேம்பாட்டு மையம்.

* கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பயிர்க்கடன் வழங்க இந்த ஆண்டில் ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

* 20 கால்நடை மருந்தகங்கள், 50 கால்நடை துணை மையங்கள் அமைக்கப்படும்.

* நீர்வள மேலாண்மை பணிகளுக்கு ரூ.3,624.73 கோடி ஒதுக்கீடு.

* அணைகளை மேம்படுத்த ரூ.745.49 கோடியில் அணைகள் புனரமைப்பு - மேம்பாட்டு திட்டம்.

* பிளாஸ்டிக் சாலைகள் அமைக்க ரூ.100 கோடி.

* 2012-13ம் ஆண்டுக்கான உணவு மானியம் ரூ.4,900 கோடி.

* இந்த நிதியாண்டில் ரூ.740 கோடி செலவில் 1,500 கி.மீ. சாலைகள் அகலப்படுத்தப்படும்.

* சாலை பராமரிப்பு பணிகளுக்கு ரூ.1180.95 கோடி நிதி ஒதுக்கீடு.

* ரூ.548 கோடி செலவில் புதிதாக 3 ஆயிரம் பஸ்கள் வாங்கப்படும்.

* மெட்ரோ ரயில் திட்டத்துக்கு இந்த ஆண்டில் ரூ.750 கோடி ஒதுக்கீடு.

* தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் நிதி நெருக்கடியை சமாளிக்க ரூ.3,068 கோடி நிதி ஒதுக்கீடு.

* 14.62 லட்சம் குடிசைகளுக்கு ரூ.14.62 கோடி செலவில் இலவசமாக சிஎப்எல் விளக்குகள் வழங்கப்படும்.

* 60 ஆயிரம் வீடுகளுக்கு ரூ.180 கோடியில் சூரிய மின் விளக்குகள் அளிக்கப்படும்.

* மேலும் 50 கோயில்களில் அன்னதான திட்டம் விரிவுபடுத்தப்படும்.

* ஸ்ரீரங்கம் ரங்கநாதர், பழநி தண்டாயுதபாணி கோயில்களில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும்.

* மகப்பேறு நிதியுதவி திட்டத்துக்கு ரூ.720 கோடி ஒதுக்கீடு.

* பள்ளி மாணவர்களுக்கான சீருடையில் ஆண்களுக்கு முழுக்கால் சட்டையும், மாணவிகளுக்கு சல்வார் கமீசும் வழங்கப்படும். இதற்காக ரூ.329.89 கோடி நிதி
ஒதுக்கீடு.

* பசுமை வீடு திட்டத்தின்கீழ் இந்த ஆண்டு ரூ.1080 கோடியில் மேலும் 60 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படும்.

* எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதிக்கு இந்த ஆண்டில் ரூ.470 கோடி ஒதுக்கீடு.

* சென்னை நகரில் உள்ள நீர்வழித்தடங்களில் கழிவு நீர் கலப்பதை தடுக்க 337 இடங்களில் ரூ.300 கோடியில் சுத்திகரிப்பு செய்ய திட்டம்.

* ஏழைப் பெண்கள் திருமண உதவி திட்டத்துக்கு ரூ.748.39 கோடி ஒதுக்கீடு.

* மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் பயனாளிகளின் தகுதி 60 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாக குறைக்கப்படும்.

* இலங்கை அகதிகளுக்கு 2,500 வீடுகள் கட்டித் தர ரூ.25 கோடி ஒதுக்கீடு.

* ஓய்வூதியதாரர்கள் இறக்கும்போது வழங்கப்படும் நிதியுதவி, ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

* கோதுமை, ஓட்ஸ், ஹெல்மெட், இன்சுலின் மீதான மதிப்பு கூட்டு வரி முழுமையாக ரத்து.

* எலக்ட்ரிக் பைக்குகள், காம்பக்ட் புளோரசன்ட் குழல் விளக்குகள், மரக் குச்சிகள், மரப்பட்டைகள், சானிடரி நாப்கின், டயாபர்களுக்கு மதிப்பு கூட்டு வரி 14.5
சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பு.

ரூ.1500 கோடிக்கு வரி உயர்வு

* வெளிமாநிலங்களில் இருந்து வாங்கியோ, கொள்முதல் செய்தோ விற்கப்படும் அனைத்து மது வகைகளுக்கும் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட விற்பனை நிலையில் 14.5 சதவீத விற்பனை வரி விதிக்கப்படும்.

* ஆண்டுக்கு 5 கோடி ரூபாய்க்கு குறைவாக தாவர எண்ணெய்களின் விற்பனை அளவு இருந்தால், அதற்கு அளிக்கப்பட்டு வந்த மதிப்பு கூட்டு வரி விலக்கு நீக்கப்பட்டு, அந்த விற்பனைக்கும் 5 சதவீத மதிப்பு கூட்டு வரி விதிக்கப்படும்.

* சுற்றுலா, மேக்ஸி மற்றும் தனியார் சேவை வாகனங்கள், ஸ்பேர் பஸ், கட்டுமானத்துக்கு பயன்படும் வாகனங்கள், பிற மாநில ஒப்பந்த வாகனங்கள் மீதான வரிகள் சீரமைக்கப்படும்.

* முன்னுரிமையில் விருப்ப எண்களை பதிவு செய்வதற்கான கட்டணம் இரு மடங்காக உயர்த்தி சில மாற்றங்கள் செய்யப்படும். இந்த மாற்றங்கள் இரு சக்கர
வாகனங்களுக்கு பொருந்தாது.

* திருத்தி அமைக்கப்பட்ட சொத்து வழிகாட்டி மதிப்பு (கைடு லைன் வேல்யூ) ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும்.

* விற்பனை ஆவணங்கள் மற்றும் அதே நிலையில் முத்திரை தீர்வை விதிக்கப்படும் ஆவணங்களுக்கு தற்போது விதிக்கப்படும் 6 சதவீத முத்திரை தீர்வை,
ஏப்ரல் 1-ம் தேதி முதல் 5 சதவீதமாக குறைக்கப்படும்.

* உள்ளூர் திட்ட அமைப்புகள் மூலம் வசூலிக்கப்பட்டு வரும் கட்டமைப்பு மற்றும் அடிப்படை கட்டணம் 50 சதவீதம் உயர்த்தி நிர்ணயிக்கப்படும்.
இந்த நடவடிக்கைகள் மூலம் அரசுக்கு சுமார் 1,500 கோடி ரூபாய் கூடுதலாக கிடைக்கும்.

முதல்வர் புகழ் பாடிய நிதியமைச்சர்

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் பட்ஜெட் உரையை வாசித்த நிதியமைச்சர் பன்னீர் செல்வம் வழக்கம் போல தொடக்கத்தில் ஜெயலலிதா சாதனைகளை புகழ்ந்து பேசினார். எடுத்த காரியம் யாவினும் வெற்றி என்ற பாரதியின் பாடல் வரியுடன் பட்ஜெட் உரையை தொடங்கியவர், அறிவின் ஊற்றுக்கண், மாபெரும்

வெற்றியை மக்களுக்கு அர்ப்பணித்த தலைவி, இந்திய தேசத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகும் மக்கள் சக்தி, உலக வல்லரசு நாடுகள் வரிசையில் இந்தியாவை நிறுத்தப்போகும் மகா சக்தி என்றெல்லாம் புகழ்ந்து தள்ளினார். அவரது புகழ் பாடலுக்கு அதிமுக  உறுப்பினர்களும் அசராமல் வரிக்கு வரி மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர்.