பிரித்தானியக் காலனித்துவ
ஆட்சி இந்தியாவில் வலுவாக வேரூன்றிய பிறகு, கி.பி. 1800களில் சென்னை மாகாணம்
உருவாக்கப்பட்டது. மாகாணத்தை உருவாக்கியதுமே, காலனிய அரசு, கிழக்கிந்தியக் கம்பெனி
மற்றும் அரசின் நிதி நிலையை உயர்த்திட ரெவின்யூ போர்டு (Board
of Revenue), டிரேட்
போர்டு (Board of Trade & வணிகம்) ஆகியவற்றை நிறுவித் தங்களது நலன்களைப்
பெருக்குவதில் தனிக்கவனம் செலுத்தியது. இதே நேரத்தில் உதயமான ‘இந்தியத் தேசியக் காங்கிரஸ்’
(1885) கட்சியின்
செயல்பாட்டினால் கலக்கமுற்ற காலனிய அரசு, தன்னுடைய அதிகாரத்தை மேலும்
பலப்படுத்த எத்தனித்தது.- குறிப்பாக, ‘சூரத் மாநாட்டில் (1907) காங்கிரசாரிடையே ஏற்பட்ட
மிதவாத & தீவிரவாதப் பிளவின் காரணமாக உருவான திலகரின், தலைமையிலான தீவிரவாத
அமைப்பினரின் செயல்பாட்டினை எதிர் கொள்ள முடியாது அது திணறியது.
இத் தீவிரவாத அமைப்பை
ஒடுக்கி அடக்குவதற்காகச் சட்டவிடிவிலான பல்வேறு சதிகளைப் பிரிட்டிஷ் அரசு
தீட்டியது. இதன் மறு பகுதியாக, இங்குப் பரம்பரையாக உடல் வலிமை
கொண்டு செல்வாக்குச் செலுத்திவந்த சில தீரமான உள்நாட்டுக் குழுக்களையும் எதிர்
கொள்ளும் வகையில் & அவர்களையும் தம் ஆட்சிக்குக்கீழ் கொண்டு வந்து அடிமைப்படுத்தும்
நோக்கில் & பல குற்றவியல் சட்டங்கள் இயற்றப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் காலனிய
அரசு ‘குற்றவியல்
பரம்பரைச் சட்டம் & 1871’ (Criminal Tribes Act 1871) போன்ற சட்டங்கள், மேலும், உள்ளூர் பிரஜைகள் காங்கிரஸ்
இயக்கத்தில் சேர்வதைத் தடுத்து நிறுத்தவும், முஸ்லீம்களைக்
காங்கிரசிலிருந்து தனிமைப்படுத்தவும் பல்வேறு தந்திரோபாயங்களை மேற் கொண்டது.
(தமிழகத்தில், பிறமலைக்
கள்ளர்கள் காங்கிரசில் சேருவதைப் பெரும்பாலும் தடுத்து நிறுத்தியதற்காகக் ‘கள்ளர் சமூக அபிவிருத்தி’ அதிகாரியாகப் பணி புரிந்த
கி.ரி. இராஜா அய்யருக்கு வெள்ளைய அரசு ‘ராவ்பகதூர்’ பட்டம் வழங்கியது.
முஸ்லீம்களுக்குச் ‘சலுகைகள்’ அளித்துக்
காங்கிரசிலிருந்து பிரித்ததை, ‘மிண்டோ மார்லி’ சீர்திருத்தம் அம்பலப்
படுத்தியது. இவற்றையும் இங்குக் கவனத்தில் கொள்ள வேண்டும்.)
வட இந்தியாவில், பிரித்தாளும்
சூழ்ச்சியினால் முஸ்லீம்களைத் தனிமைப்படுத்தி வெற்றி கண்ட பிரிட்டிஷ் அரசு, அவ்வகை முயற்சிகளால்
தென்னிந்தியாவில் & குறிப்பாகச் சென்னை மாகாணத்தில் & வெற்றிபெற முடியவில்லை.
எனவே, அதற்கு
மாற்றாகப் ‘பிராமணர்
– பிராமணர்
அல்லாதோர்’ இயக்கங்களை
ஊக்குவித்தது. அதிலும் பிராமணர் அல்லாதோரிடையே இருந்த மூர்க்க குணம் மிக்க
சமூகத்தாரை மற்ற சமூகத்தாரிடமிருந்து தனிமைப்படுத்த விரும்பியது. இத்தகு
சூழலில்தான் சென்னை மாகாணத்தில், தமிழக மாவட்டங்களில் ஆதிகுடிகளாக
வாழ்ந்து வரக்கூடிய தோம்பர், குறவர், இருளர், பிச்சாரி, ஆதிதிராவிடர், கள்ளர், மறவர், படையாச்சி, காலாடி, சுங்காலி போன்ற
நூற்றுக்கும் மேற்பட்ட சமூகத்தார்மீது பிரிட்டிஷ் அரசு ‘குற்றவியல் பரம்பரைச்
சட்டம்&1911’ என்னும் கொடிய சட்டத்தைப் பாய்ச்சியது. (பாமர வழக்கில் இது
கைநாட்டுச் சட்டம், கைரேகைச்
சட்டம் என அழைக்கப்பட்டது).
குற்றவியல் பரம்பரைச்
சட்டத்தைச் சில பழங்குடிகள்மீது மட்டும் திணித்ததற்குக் காரணம், பல்வேறு சாதி, மதம், இனம், மொழி, பண்பாடு முதலியவற்றைக்
கொண்ட பரந்த பாரதத்தை ஆட்சியதிகாரத்துக்குள் கொண்டுவர ஈடுபட்ட பல போர்களில் சில
இனக் குழுக்கள் தங்களது நலனுக்கு எதிரானவர்கள் என்பதைப் பிரிட்டிஷார் கண்டு கொண்டதும், பல இனக்குழுக்கள் ஆயுதம்
தாங்கிப் போர் புரிந்து ஆங்கிலேயர்களை ஆட்டம் காண வைத்ததுமே என்கிறார் பாவெல்
பாரதி அவர்கள். 1885இல் சந்தால் இன மக்களின் ஆயுதம் தாங்கிய போராட்டம் வங்காளத்திலும், பீகாரிலும் பல பகுதிகளை
ஆங்கிலேயர்களின் நிர்வாகத்திலிருந்து இரண்டாண்டுகள் பின்வாங்கும் அளவுக்குப்
போர்க்குணத்துடன் நடைபெற்றதை, திலீப்&டி&சௌசாவின் ‘குற்றமுத்திரை’ நூல்வழி அவர்
எடுத்துக்காட்டியுள்ளார். மேலும், அக்காலத்தில் பெரும்
பணக்காரர்களாகவும் வெள்ளையர்களுக்கு அணுசரனையாகவும் இருந்துவந்த இந்திய விவசாயக்
குடிகளின் சொத்துக்களுக்கு ஆபத்தானவர்களாக உணரப்பட்ட நாடோடிகள், அலைந்து திரியும் உழவர்கள், வனவாசிகள், பழங்குடிகள் போன்றவர்களின்
நட மாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவையும் முன்னின்றது என்பர்.
எனவே, தொடர்ச்சியான வலுவான
ஆட்சியை நிலைநிறுத்தச் சில தொல்குடிகளைச் ‘சட்டம்&ஒழுங்கு’ என்னும் அதிகாரத்துக்குள்
பிரிட்டிஷார் ஒடுக்கி வைத்தனர் எனலாம்.
நவீனக் குற்றவியல் சமூகமாக
இஸ்லாம் சமூகத்தையும், இன
ஒடுக்கத்தை எதிர்த்துப் போராடும் ஈழத் தமிழர்களைக் குற்றவியல் இனமாகவும்
அறிமுகப்படுத்தி உலகளவில் ஒருவிதக் கற்பிதத்தை ஆட்சியாளர்கள் உருவாக்கி
வைத்திருப்பதைப் போலவே, கள்ளர்களையும்
அன்றைய வெள்ளைய அரசு ‘குற்றவாளிகள்’ என்ற கண்ணோட்டத்துடனேயே
அறிமுகப்படுத்தியிருந்தது. எனவே, மற்ற இனக்குழுக்களைவிடக் கள்ளர்
சமூகத்தின் மீது & குறிப்பாகப் பிறமலைக்கள்ளர்கள் மீது & இக் கொடுஞ் சட்டத்தைப்
பிரயோகிக்க, அது
எல்லாவகையிலும் முயற்சித்தது.
இங்கிலாந்தில், குற்றப்பரம்பரையாக முத்திரை
குத்தப்பட்ட ‘ஜிப்ஸிகள்’ போன்றவர்களை ஒடுக்குவதற்காக
இயற்றப்பட்ட சட்டங்களை முன்மாதிரியாகக் கொண்டு, இந்தியாவில் முதன் முதலில்
தனிநபர்களை ஒடுக்கும் விதமாகப் ‘போக்கிரிகள் தடைச் சட்டம்’ (1836)
அறிமுகப்படுத்தப்பட்டது.
பின்பு ஒட்டுமொத்த இனத்தையே குற்றவாளிகளாக அறிவிக்கும் குற்றப் பரம்பரைச் சட்டம் (1871) கொண்டு வரப்பட்டது. 1911இல் இது மேலும் சில
திருத்தங்களைக் கண்டது. திருத்தப்பட்ட இச்சட்டம், பிற மாகாணங்களுக்கு 1914இல் விரிவுபடுத்தப்பட்டது.
அதன்படி, இதை
மதுரைப்பகுதியில் உடனடியாக அமல்படுத்துவதற்கான வாய்ப்புகள் நிறைய இருந்தன. அதாவது, ‘மதராஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர்
ஜெனரல், ஜில்லா
அதிகாரிகள் மூலம், ஜில்லாக்களில்
குற்றத் தொழில் புரிவோர் சங்கியைத் (பட்டியல்) தயாரித்து அனுப்பக் கோரினார்.
அதன்படியே அதிகாரிகள், தங்கள்
ஜில்லாக்களில் வழிப்பறி, மாடு
கடத்தல், கொள்ளை, கன்னக்களவு, கொலை முதலான
பெருங்குற்றங்களுக்கான விபரமும் அவற்றின் தன்மையும் குறித்து விளக்கத்துடன்
சேகரித்து அனுப்பினர். தஞ்சை, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய
ஜில்லாக்களில் குற்றத்தொழில் செய்தல் அதிகமாக இருப்பதாகப் புள்ளி விபரங்கள்
புலப்படுத்தின. குற்றத்தொழில் செய்து வந்தவர்களில் அதிகமானோர் கள்ளர், மறவர் ஆகிய வகுப்பார்
என்பதும் தெரிய வந்தது. அதிகாரிகள் எடுத்துக் காட்டியுள்ள குற்றப்பிரிவு புள்ளி
விவரங்கள், ‘ரேகைச்
சட்டம்’ அமல்படுத்துவதற்கு
ஆதாரமாகவே இருந்தது’ என்கிறார்
பெ. முத்துத் தேவர், தமது
மூவேந்தர் குல தேவர் சமூக வரலாறு என்னும் நூலில்.
குற்றப் பரம்பரைச் சட்டம் 1914இல் மாகாணங்களுக்கு
விரிவுபடுத்தப்பட்டபோது, மதுரை
மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளராக இருந்தவர் H.G. கிளின்ச் என்னும் வெள்ளையர்.
அவர், கீழக்குடி
கள்ளர்களை இச்சட்டத்தைப் பயன்படுத்தி ஒடுக்க வேண்டும் என 4.5.1914
அன்று
அரசுக்குப் பரிந்துரை ஒன்றை அனுப்பினார் என்றாலும், 1915இல்தான் மதுரைப்பகுதியில்
இது அமல்படுத்தப்பட்டது. சொல்லப்போனால், மதுரையிலிருந்து ஆறு
மைலுக்கு அப்பாலிருந்த மேல்நாட்டுக் கள்ளர்களின் தலைமை யிடமான
கீழக்குயில்குடியில்தான் & தற்போதைய பெயர் கீழக்குடி & முதன்முதலில்
அமல்படுத்தப்பட்டது-. இதன்படி வயது வந்த ஆண்கள் அனைவரும் ‘கேடிகள்’
(K.D. – Known Dacoits) என்னும் பட்டியலின் கீழ்ப் பதிவு செய்யப்பட்டனர். அப்போது மதுரை
கலெக்டராக இருந்தவர் ‘நேப்’ என்னும் வெள்ளையர். அவர், இச்சட்டத்தின்கீழ்
அனைவரையும் பதிவு செய்வதைவிடக் குற்றவாளிகளை மட்டும் பதிவு செய்து கவனிக்க
வேண்டியதன் அவசியத்தை அரசுக்கு எடுத்துரைத்ததோடு, இச்சட்டத்தின்கீழ்
வரவேண்டிய மேலும் மூன்று ஊர்களைப் பரிந்துரைத்தார். அவரது பரிந்துரையின் பேரில்
இச்சட்டம் சொரிக்கான்பட்டி, மேலஉரப்பனூர், பூசலப்புரம் ஆகிய
ஊர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. (G.O. No : 2233, Judical 16th
Sep. 1915).
‘கலெக்டர் நேம்’ கேட்டுக்கொண்டதற்கிணங்க, மேலே குறிப்பிட்ட இந்த
நான்கு ஊர்களில் வாழும் வயது வந்த பிறமலைக் கள்ளர்கள் எல்லோரையும் கு.ப.
சட்டத்தின்கீழ்ப் பதிவுசெய்வதை நிறுத்திவைக்க, அரசு இடைக்காலத் தடை
விதித்தது-. இப்படிச் செய்தது நன்நோக்கத்தில் அல்ல. மாறாகக் கள்ளர் சமூகத்தில்
குற்றவாளிகளைத் தவிரக் குற்றம் செய்யாதவர்களையும் சேர்த்துப் பதிவு செய்வதற்காகச்
சட்டத் திருத்தம் வேண்டியிருந்தது. அதற்காகவே இந்த இடைக்காலத் தடை என்பர். (C.T.
Act G.O. No : 1023, Judical dt. 4-5-1914. G.O. 2233 Judical dt 16-9-1915
declaring Keelakkudi, Sorikkanpatti, Melaurappanur and Poosalapuram kallars as
criminal tribes. Amendment to C.T. Act manual proposal Negatived criminal
tribes Act of 1911) கு.ப. சட்டத்தை எப்படியும் கள்ளர்கள்மீது திணித்துவிடப் பிரயாசை
கொண்டிருந்த வெள்ளைய அரசு சட்டத் திருத்தத்திற்குப் பிறகு மதுரைக்
கலெக்டரிடமிருந்து மீண்டும் அறிக்கையைக் கோரியது. அப்போது கலக்டெர், நாட்டு மக்களின் உண்மையான
நிலையை உணர்ந்து தேவையான ஆதாரங்களை எடுத்துக்காட்டுவதற்கு மாறாக, கள்ளர்கள்
திருட்டுப்பழக்கமுடையவர்கள், துப்புக்கூலி
வாங்குபவர்கள், குடிக்காவல்
வசூலிப்பவர்கள், ஜல்லிக்கட்டு
என்னும் முரட்டுத்தனமான மாட்டு விளையாட்டைக் கொண்டு சண்டை சச்சரவுகளை உண்டு
பண்ணுபவர்கள், நிலமில்லாதவர்கள், நிலமிருந்தாலும் உழைத்துப்
பிழைக்கும் ஊக்கமில்லாதவர்கள் எனக் காரணங்களை காட்டி, மேலே குறிப்பிட்ட
குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை மதுரை மாவட்ட கெசட்டியர், எட்கர் தர்ஸ்டனின் Caste
and Tribes of Southern India நூலில் உள்ள செய்திகள் முதலியவற்றிலிருந்து எடுத்து
ஆதாரங்களை வைத்தார். அதன் பிறகு, பதிவு செய்யும் இந்த வேலை 1919களில் துரிதமானது.
பிறமலை நாட்டில்
குற்றப்பரம்பரைச் சட்டம் பிரயோகிக்கப் படுவதற்கு, முதலில் புள்ளி விபரங்கள்
சேகரிக்கப்பட்டன. பிறமலை நாட்டிலிருந்த மிகப்பெரிய
குறை யாதெனில், ஆரம்பத்திலேயே
கு.ப.சட்டத்தின் பாதகத்தை அரசுக்கு விவரமாக எடுத்துக்கூறத் தகுதிவாய்ந்த நபர்கள்
இல்லாததேயாகும். ஆனால், மேலஉரப்பனூர்
மக்கள் இச்சட்டம் அமலுக்கு வந்தவுடனேயே, திரு. ஜார்ஜ் ஜோசப்
(பின்னாளில் ரோசாப்பூ தேவர்) B.A., பாரட்&லா அவர்களை அணுகினர். அவர்
கைரேகையைப் பதிப்பது மற்றும் பதிவு செய்வது என்னும் உத்தரவைச் சத்தியாகிரக
முறையில் எதிர்க்குமாறு அறிவுறுத்தினார். அதோடு தென்னாப்பிரிக்காவில் இந்தியர்கள்
நடத்திய கைரேகைப் பதிப்புப் போராட்டத்தையும் எடுத்துரைத்து, இருக்கின்ற ஒரே தீர்வு ஜனநாயக
முறையில் ஒத்துழைக்க மறுப்பதுதான் என்றார். அதன் பிறகு, மேலஉரப்பனூர் கள்ளர்களின்
மனுவை மாவட்ட உரிமையியல் நீதிபதி பாடிஸனிடம் சமர்ப்பித்தார்.
இதோடு கள்ளர்கள் சார்பில்
வெள்ளையத் தேவர் என்பவர், 6——&7&1915இல் மதுரையிலிருந்து சென்னை அரசாங்க பிரதான காரியதரிசிக்குத்
தந்தி ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதன் விபரம்:& ‘மதுரை ஜில்லா திருமங்கலம்
தாலுக்கா உரப்பனூர் தேவமார்கள் ரூ.3500க்குக் கிஸ்தி
செலுத்தக்கூடிய பட்டாதாரர்கள். எனவே குற்றப் பரம்பரைச் சட்டம் இவர்கள்மீது
பிரயோகிக்கும் முன் விசாரனை செய்யவும்’.
இந்தத் தந்திக்கு நடவடிக்கை
என்ன என்பது தெரியவில்லை. இதன் பிரதி ஒன்று மதுரை ஜில்லா போலீஸ் ஆபீஸ் பைலில்
உள்ளதாக பெ. முத்துத்தேவர் குறிப்பிடுகிறார். ஆனால் இதற்கு எவ்வித விளைவும்
ஏற்படவில்லை. விடயம் கிடப்பில் போடப் பட்டதை, இந்த நூல் கூறுகிறது.
இப்படி மேலஉரப்பனூர்
கள்ளர்களுக்கு இருந்த துடிப்புணர்வு, மற்ற நாட்டுக் கள்ளர்களிடம்
இருந்ததா என்பதற்கும் ஆதாரம் இல்லை. எனினும், சுயமரியாதைக்குப் பங்கம்
விளைவிக்கக்கூடிய இந்தக் கொடிய சட்டத்தைப் பிறமலைக் கள்ளர்கள் எதிர்க்காமலில்லை.
அவர்கள் போதிய கல்வியறிவு இல்லாதவர்களாக இருக்கலாம். ஆனால் சுதந்திர உணர்வும், வீரமும் அற்றவர்களாக
இருந்தார்கள் என்று சொல்வதற்கில்லை. திருமலை நாயக்கர் காலத்திலிருந்தே &
அதற்கு
முன்பும் & தன்னரசு நாடுகளை அமைத்துக் கொண்டு, ‘காடுகட்டி நாடாண்ட’ பரம்பரையினரான அவர்கள், இச்சட்டத்தின்கீழ்த்
தங்களைப் பதிவு செய்ய மறுத்தனர். மேலும், மதுரை மாவட்டம் முழுவதிலும்
உள்ள கள்ளர்களில் ஒரு பகுதியினரை மட்டும் ‘குற்றம் புரியும் சமூகம்’ எனப் பிரித்து
அடக்குமுறையைப் பிரயோகிப்பதில் அதிகாரிகளுக்கும் சிக்கல் இருந்தது. ஒரு ஊரில்
உள்ளவர்கள் குற்றவாளிகள் எனக் கண்காணிக்கப்படுவதும், அடுத்த ஊரில் உள்ளவர்கள்
அப்படிக் கண்காணிக்கப்படாமலிருப்பதும் குறித்த ‘மாற்றாந்தாய் மனப்பான்மை’யைப் பற்றிக் கள்ளர்கள்
எழுப்பிய கேள்விகளுக்கு அதிகாரிகள் வாயடங்கிப் போயினர். எனவே, இந்தச் சட்டத்தை முழுவதும்
அமல்படுத்துவதில் ஒருவிதத் தொய்வு நிலை ஏற்பட்டது.
குற்றப் பரம்பரைச்
சட்டத்தைக் கள்ளர்களிடையே நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் இருந்தபோதிலும், அதனை எப்படியும்
பிரயோகித்து வெற்றி பெற வேண்டும் எனக் கங்கனம் கட்டிய வெள்ளைய அரசு, 1919இல் ‘லவ்லக்’ என்னும் போலீஸ்
சூப்பிரண்டென்டை மதுரை மாவட்டத்தில் பணியமர்த்தியது. கடும் உழைப்பாளியும்
சீர்திருத்தவாதியுமான லவ்லக் வட இந்தியாவிலும், தென் தமிழகத்திலும், பல்வேறு இடங்களில் குற்றப்
பரம்பரைச் செட்டில்மெண்டுகளிலும், குற்றவாளிகளின் புனர்வாழ்வுத்
தொழில் துறையிலும் பணிபுரிந்தவர். எனவே, அவரைக் கொண்டு இச்சட்டத்தை
அமல்படுத்த அரசு எத்தனித்தது, முழுச் சுதந்திரம் அளித்தது. அதன்
அடிப்படையில் கள்ளர்கள் பற்றிய ஓர் அறிக்கையை லவ்லக், அரசுக்குச் சமர்ப்பித்தார்.
அதன் முக்கிய பகுதிகள்
வருமாறு :
‘கள்ளர் நாட்டில்
குற்றத்தொழில் செய்த கிரிமினல் வாரண்டியர்கள் இருக்கிறார்கள். ஆனாலும், இவர்களைத் திருடர்கள் என்று
சொல்வதற்கில்லை. ஸ்காட்லாந்து தேசமாகிய என்னுடைய நாட்டிலும், சோசலிசச் சமுதாய அமைப்பை
விரும்பும் மலைநாட்டினர் இருந்தார்கள்.’
‘கள்ளர்களின் மத
நம்பிக்கையைக் கவனித்தால், இவர்கள்
உலகில் அதிகமாகச் செல்வம் குவித்து வைத்திருப்பதைப் பிரித்து இல்லாதவர்களுக்கு
விநியோகம் செய்யப் படைக்கப் பட்டவர்கள் என்று தங்களைக் கருதுகிறார்கள்.
கீழ்நாட்டுச் சோஷலிஸ்டுகள் போலவும், ஏகபோக உரிமையோடு சண்டை
போடுவதில் தீவிர விருப்பமுள்ள சமதர்மவாதிகள் வழியிலும் செல்கிறார்கள் என்று
கருதப்பட வேண்டியிருக்கிறது.’
‘இப்போது எடுத்துவரும்
குற்றத்தொழில் தடுப்புமுறையும், இவ்வினத்தாரைப் பதிவு செய்து
கண்காணித்து வருவதும் சரி என்று நான் கருதுவதற்கில்லை. இதனால் நல்ல பலன்
கிடைக்காது….. ஒரே பிரதேசத்தில் பதிவான குற்றவாளிகளும் பதிவாகாத இதரரும்
இருக்கும் போது, பாகுபாடு
செய்து அடக்குவது சிரமம். இந்தச் சட்டம் சரியாக செயல்பட வேண்டுமானால், திருமங்கலம் தாலுகாவில்
வாழ்ந்து வரும் பிரான்மலைக் கள்ளர்களை மாத்திரமல்லாமல், இவ்வினத்தைச் சேர்ந்த
எவரானாலும், இந்த
ஜில்லாவிலும், இராமநாதபுரம்
ஜில்லாவிலும் வாழ்ந்து வரும் யாவரையும், குற்றத் தொழில்
செய்தவரானாலும் செய்யாதவரானாலும் வயது வந்த அத்தனை பேரையும் பதிவு செய்திட
வேண்டும்….. சட்டப் பிரயோகம் செய்து அடக்கு முறையை மட்டும் கையாண்டால், அது பெரும் ஆபத்தில் போய்
முடியும். அடக்குமுறைச் சட்டம் கையாளப்படும்போதே, கள்ளர் சமூகச் சீர்திருத்த
நடவடிக்கைகளையும் அமல்படுத்தத் தவறக்கூடாது.’
இப்படி லவ்லக்கின்
ரிப்போர்ட், கலக்டெர்
நேப்பின் ரிப்போர்ட், மாகாண
போலீஸ் இன்ஸ்பெக்டரின் ரிப்போர்ட் ஆகியவற்றைக் கொண்டு சென்னை சர்க்கார் ஒரு
உத்தரவைப் பிறப்பித்தது. அது: ‘பிறமலை நாட்டில் வயது வந்த எல்லாப்
பிறமலைநாட்டுக் கள்ளர்களையும் குற்றத்தொழில் செய்யும் நபர்களாகப் பதிவு செய்யும் 10&1&கி பதிவேட்டில் பதிவு
செய்து கண்காணிக்கவும்.’ இந்த
உத்தரவு, 1918களின் இறுதியில் மதுரை கலக்டெருக்குக் கிடைத்தபின் இதற்கான ஒரு தனி
அலுவலகம் மதுரையில் உருவானது. இதில் 1. முதல் வகுப்பு மாஜிஸ்ட்ரேட்
(கைரேகைச் சட்டக் கலக்டெர்) 2. ஸ்பெஷல் போலீஸ் இன்ஸ்பெக்டர் 3. ஸ்பெஷல் போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் 4. ஏட்டுகள் 5. கான்ஸ்டேபில்கள் ஆகியோர்
இந்தக் குழுவில் இருந்தனர். மதுரை மாவட்ட உரிமையியல் நீதிபதி ‘க்னப்’ கள்ளர்கள் பதிவுசெய்தலைத்
தொடங்கி வைத்தார்.
1915இல் மாவட்ட உரிமையியல்
நீதிபதி பாடிசன் கு.ப. சட்டம் 1911, பிரிவு&
5இன்படி, மேல உரப்பனூர்
கள்ளர்களுக்கு ரேகைப் பதிவிலிருந்து விலக்கு அளித்தார் என்பர். எனினும், பிறமலைக் கள்ளர்களின்
குற்றப் பரம்பரையினர் ஒவ்வொருவரும் அருகிலுள்ள காவல் நிலையத்திலோ, பரிசோதனை மையத்திலோ, தன் இருப்பிடத்திலிருந்து 5 மைல் தூரத்திலுள்ள
புறக்காவல் நிலையத்திலோ பிற்பகல் 11.00 மணி முதல் மாலை 4.00 மணிக்குள் ஆஜராக வேண்டும்
என உத்தரவிட்டார். ஒருக்கால் 5 மைலுக்குள் இவை இல்லாது போனால், அருகிலுள்ள கிராம
உரிமையியல் நீதிபதியிடம் குறிப்பிட்ட நேரத்தில் ஆஜராக வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மதுரை மாவட்டத்தில்
இவ்விலக்கினை மக்கள் ஏற்றுக் கொண்டாலும், ஆஜராவதற்கான நேரம்
கேள்விக்குள்ளானது. பல நேரங்களில் அவர்கள் காவல் நிலையத்தில் தூங்குமாறும், அருகே இருக்குமாறும்
கட்டாயப்படுத்தப்பட்டனர். எந்த ஒரு விஷயமாகவும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச்
செல்ல நேர்ந்தால், ‘ராதாரி
சீட்டு’ (Rathari Chit) என்னும் ‘பாஸ்போர்ட்’டினைப் பெற்றுச் செல்லவும்
கட்டாயப்படுத்தப்பட்டனர். (இந்தச் சீட்டில் வ.எண், பெயர், குற்றப்பதிவு எண், குற்றப் புலனாய்வுத் துறை, குழு எண், வெளியே போவதற்கான காரணம், செல்லும் வழித்தடம், நேரம், திரும்பும் நேரம், பெருவிரல் ரேகைப் பதிவு
ஆகியவை இருந்தன). மூன்று பிரதிகளைக் கொண்ட இந்த ராதாரிச் சீட்டின் முதல் படி
உள்ளூர் காவல் நிலையத்திலும், இரண்டாவது படி அந்த நபர் செல்ல
இருக்கும் காவல் நிலையத்துக்கும், மூன்றாவது படி அந்த நபரிடமும்
தரப்பட்டது-. வழியில் எங்காவது இரவு தங்க நேர்ந்தால், அந்தக் கிராமத்தின் தலைவனது
கையொப்பம் பெறப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குற்றப்பரம்பரைச்
சட்டத்தின் கீழ் 10&1&A&B இல் எல்லோரையும் பதிவு செய்வதைக் கண்டு வெகுண்டெழுந்த
பிறமலைக் கள்ளர்கள் அனைவரும், நும்மகுண்டு நாட்டில் கூடி, மற்றவர்களுக்கும் ‘ஓலை’ மூலம் செய்தி அனுப்பினர்.
இச்சட்டத்திற்குத் தாங்கள் அடிபணியக்கூடாது எனப் பேசி முடிவெடுத்த தருணத்தில், பிறமலைக் கள்ளர்கள் அதிகமாக
வாழ்ந்து வரும் பெருங்காம நல்லூரில் இச்சட்டத்தை அமல்படுத்த அரசு தீவிரமாக
முயற்சித்தது.
‘29.3.1920
அன்று
மதுரை மாவட்ட உரிமையியல் நீதிபதி, பெருங்காம நல்லூரில் வசிக்கின்ற 7 வயதுக்கு மேற்பட்ட
கள்ளர்கள், 03.04.1920 அன்று காலை 11.00 மணிக்குப் பதிவு
பெறுவதற்காகப் போத்தம்பட்டியிலுள்ள தனித்துணை ஆட்சியர் முன் ஆஜராக வேண்டுமென
அறிவித்தார்’. இந்த
அறிவிப்பு கிராம முன்சீப்புகள் மூலம் சுற்றுக்கு விடப்பட்டது. ஆனால், அன்றைய நாள் பதிவு
தோல்வியில் முடிந்தது. எனினும், போலீஸ் படையுடன் 3.4.1920
அன்று
பெருங்காமநல்லூரில் ஏற்பட்ட கலவரத்திற்குப் பிறகு பதிவு விறுவிறுப்படைந்தது.
மாயக்காள் என்னும் பெண் உட்பட, இந்தக் கலவரத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.
பிறமலைக் கள்ளர்களின்
விடாப்பிடியான தன்மை, பெருங்காம
நல்லூர் கலவரத்தில் எதிரொலித்ததால் சற்று நெகிழ்வுத்தன்மையைக் காட்ட வேண்டிய
அவசியத்தை அரசு உணர்ந்தது. சட்டத்தின் மூலம் உறுப்பினர்களைப் பதிவு செய்யும்
அதேநேரத்தில், நிர்வாக
அமைப்புகள் மூலமாக அவர்களது சமூகப் பொருளாதார நிலையை மேம்படுத்தவும் அரசு
முன்வந்தது. அதன்படி கள்ளர் பஞ்சாயத்து அமைப்பு, கள்ளர் சீர்திருத்தப் பள்ளி, கள்ளர் கூட்டுறவு சங்கங்கள்
முதலிய நலத்திட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதில் கள்ளர் பஞ்சாயத்துக்கு முக்கிய இடம்
தரப்பட்டது. ‘தன்
கையைக் கொண்டே தன் கண்ணைக் குத்துவது’ என்பதற்கேற்பக் கள்ளர்
ஒருவரையே பஞ்சாயத்துத் தலைவராக நியமித்து, அவர் மூலமாகவே எல்லா
நடவடிக்கைகளும் நடைமுறைப்படுத்தப்பட்டன.
கள்ளர் நாடு என்பது, கள்ளர் சமூகத்தினர்
பெரும்பான்மையாக வசிக்கின்ற நிலப்பரப்பைக் குறிக்கும். இவர்கள் இராஜதானி & எட்டு நாடுகள் & இருபத்து நான்கு
உபகிராமங்கள் என்னும் அமைப்பின் கீழ் வாழ்ந்து வருகின்றனர். கள்ளர் என்ற பொது
அடையாளத்திற்குள் பிறமலைக் கள்ளர், கீழ்நாட்டுக் கள்ளர், மேல்நாட்டுக் கள்ளர், ஈசநாட்டு கள்ளர், கந்தவர்வக் கோட்டைக் கள்ளர், நாட்டாக் கள்ளர், தெக்கத்திக் கள்ளர், கூட்டப்பல் கள்ளர், பெரிய சூரியூர் கள்ளர், தொண்டைமான் எனப் பல
பிரிவுகள் உள்ளனர். ஆனால், இந்தக்
கள்ளர்களின் பூர்வ வரலாறு குறித்து உறுதியான தகவல்கள் இல்லை; பல்வேறு கதைகள் மட்டும்
உள்ளன.
கள்ளர்கள், தீபகற்பத்தின் தெற்கில்
முதலாவதாக ஊடுருவிய திராவிட இனக்குழுக்கள் என்று H.A. ஸ்டூவர்ட்ஸ் போன்றோர்
கருத்துத் தெரிவித்தாலும், அவர்களைப்
பற்றிய பொதுவான கருத்து, கள்ளர்கள்
தொண்டை மண்டலமான காஞ்சிபுரத்திலிருந்து தெற்கு நோக்கி வந்து புதுக்கோட்டை, நத்தம், மேலூர் பகுதிகளில்
குடியேறியவர்கள் என்பதே. மேலும், இவர்கள் நாக வம்சத்தைச்
சார்ந்தவர்கள், களப்பிரர்களின்
படைப்பிரிவினர், பல்லவர்களின்
வழித்தோன்றல்கள், சோழர்களின்
வாரிசுகள், என்றெல்லாம்
கருதப்படுகின்றனர். இனி, பிறமலைக்
கள்ளர்கள் பற்றி மட்டும், சற்றுத்
தனித்துப் பார்ப்போம்.
தனி அரசை நிறுவித்
தன்னாட்சி புரிந்து வந்த பிறமலைக் கள்ளர்களின் நாட்டு எல்லைகளைப் பார்த்தோமேயானால், மேற்கில் மதுரை நகரமும்
திருபரங்குன்ற மலைகளும், தெற்கில்
நாகமலையும், கிழக்கில்
மேற்குமலைத்தொடரும், வடக்கில்
குண்டாறும் உள்ளன. இந்த எல்லைகளுக்குள்தான் பிறமலைக் கள்ளர்கள், ‘அம்பலம்’ என்ற பட்டத்தோடு (அம்பலம் &
தலைவர்)
நாட்டை ஆண்டனர்.
மேலும் கள்ளர்களின் நகர
எல்லைகளாக இராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்கள் ஆகியன
இருந்தாலும் இவர்கள் ஒருபோதும் அந்த ஆட்சியாளர்களுக்கு அடங்கியதில்லை. மாறாக
அவர்களது ஆட்சி அதிகாரத்தைச் சீர் குலைப்போராகவே இருந்தனர். தம்மை இரண்டாம்
பிரஜைகள் ஆக்கும் அதிகார அமைப்புக்கு எதிரான தம்ஆளுமைச் செயல்பாடுகள் காரணமாக
கள்ளர்கள் தமக்கென்று சட்டம் & ஒழுங்கு மற்றும் வருவாய்
அமைப்புகளைக் கொண்டு தன்னாட்சியை அனுபவித்து வந்தனர் என்பது உறுதியாகிறது.
கள்ளர்கள் என்றாலே
திருடர்கள் என்னும் அழுத்தமான பதிவு, சமூகத்தின்
பொதுப்புத்தியில் உறைந்துபோய்க் கிடக்கிறது. இப்பொதுப்புத்தியின்
கருத்துப்பிடிப்புக்கு ஆட்பட்டுதான், லூயிஸ் டூமண்ட் பிறமலைக்
கள்ளர்கள் பற்றி மேற்கொண்ட ஆய்வுக்காகச் சென்னைப் பல்லைக்கழகத்தின் அன்றைய
துணைவேந்தர் திரு.
கி.லி. முதலியார் அவர்களைத் தொடர்பு கொண்டபோது, கள்ளர்கள் பற்றி அவர்
விவாதிக்க மறுத்ததாக அறியமுடிகிறது. இவ்வாறு கள்ளர்கள் பொதுச் சமூகத்தால்
ஒதுக்கப்பட்டதற்கான அடிப்படைக் காரணம், அவர்கள் ஆநிரைகளைக்
கவர்ந்ததேயாம். சங்க காலத்திலும் ஆநிரைகளைக் கவர்ந்து செல்லும் கூட்டம் ஒன்று
இருந்தது. அவர்கள் (ஆநிரைக்) கள்வர் எனப்பட்டனர். எனவே, கள்ளர்கள் கள்வர்
ஆக்கப்பட்டனர். ஆனால் ‘கள்ளர்’ என்னும் சொல்லுக்குக்
கரியவர், பகைவர்
என்று பொருள் உண்டு என நிறுவியுள்ளார் கோபாலசாமி ரகுநாத ராசாளியார். வீரர் என்னும்
பொருள் பற்றியே ‘கள்ளர்’ என்னும் குலப்பெயர்
தோன்றியிருக்கிறது என்று பொருள் எழுதுகிறார் ந.மு. வேங்கடசாமி நாட்டார். மேலும், கள்வர் என்பதே உயர்ந்த
பொருள்தான் என்பதைச் சங்க இலக்கியங்களில் பயின்று வரும் ‘கள்வர் கோமான் புல்லி’, ‘கள்வர் பெருமகன் தென்னன்’ என்று மன்னர்களை
அழைத்திருப்பதை எடுத்துக்காட்டியுள்ளார். ந.மு.வே. நாட்டார்.
எனவே ‘கள்ளர்’ என்ற சொல்லுக்குத் ‘திருடர்’ என்னும் பொருள், இங்குப் பொருந்தாது.
கள்ளர்களைப் பொறுத்தவரை, ‘திருட்டு’ என்பது சமூகக் குற்றமாகக்
கருதப்படவில்லை. மாறாக, முதன்மையான
பொழுதுபோக்காகவே இருந்து வந்துள்ளது. எனவேதான், ‘கள்ளர் நாட்டில் குற்றத்
தொழில் செய்த கிரிமினல்கள் இருந்தார்கள் என்றாலும், இவர்களைத் திருடர்கள் என்று
சொல்வதற்கில்லை’ என்கிறது
லவ்லக் ரிப்போர்ட். (ஆனால் 1899இல் நாடார் மக்களுக்கு எதிராக நடந்த சிவகாசிக் கொள்ளையில், மேலநாட்டுக் கள்ளர்கள், முக்கிய பங்காற்றினார்கள்.
அது அந்தக் காலகட்டத்தைப் பின்புலமாகக் கொண்டு தனித்து ஆராயப்பட வேண்டும்.)
கள்ளர்கள் வேளாண்மை மூலமாகத் தமது வருவாயின் ஒரு பகுதியைப் பெற்றிருந்தாலும், துப்புக்கூலி
(திருட்டுப்போன கால்நடைகளைத் துப்புத்துலக்கிக் கண்டறிவதற்குப் பெறும் கூலி), குடிக் கூலி (குடிமக்களைக்
காப்பதற்காகப் பெறும் கூலி) என்னும் இரு வழிகள் மூலமாகவும் தங்களது வருவாயைப்
பெருக்கிக் கொண்டனர். இந்த இரு கூலிகளில் குடிக்கூலியான காவல்கூலி, வெள்ளைய அரசின் வருவாயைப்
பெரிதும் பாதித்தது.- ஒவ்வொரு கள்ளர் கிராமத்திலும், ‘காவல்காரர்கள்’ அரசுக்கு இணையானதொரு காவல்
நிலையத்தை நடத்திக் கொண்டிருந்தனர். மக்களும் கள்ளர் காவலையே ஏற்று நடக்க வேண்டிய
நிலையில் இருந்தனர்.
ஆட்சிமுறை மாறும்போது
ஆளுவோரின் தன்மையும் மாறுகிறது. மன்னர்களின் ஆட்சி நிலவியபோது பிறகுடிகளிடமிருந்து
தம்மைக் காக்கும் பொறுப்பை கள்ளர் சமூகத்தாரிடம் ஆட்சி யாளர்கள் ஒப்படைத்தனர்.
ஆனால் அதிகாரத்தை எல்லாவிதமாகப் பயன்படுத்திய பிரிட்டிஷ் அரசு ஆட்சிக்கு வந்தபோது, ஆட்சி அதிகாரத்திற்கு
வெளியில் இருக்கும் ‘கள்ளர்
காவல்’ போன்ற
குறுக்கீடுகளை விரும்பவில்லை. மேலும், ஆட்சியாளர்களிடமிருந்தே
காவல் கூலியைக் கள்ளர்கள் பெற்றதை மதுரை மாவட்ட எஸ்.பி. திரு. பவுண்டி (Baudry)
தனது
மேல்அதிகரிக்கு எழுதிய கடிதத்தால் தெரியவருகிறது. அது :
”காவல் என்ற பெயரில்
மக்களிடமிருந்து மிரட்டி பணம் பறிக்கின்ற முறை இங்கு இன்றும் நடைமுறையில் உள்ளது. சாதாரண
குடிகள் மட்டுமல்லாது ஐரோப்பிர்களும், மேஜிஸ்ட் ரேட்டுகளும் கூட
காவல் கூலி கொடுத்து வருகின்றனர். நான் இங்கு எஸ்.பி.யாக முதன் முறை பதவியேற்ற
பொழுது ஒரு கள்ளர் இனத்துக் காவல்காரன் என்னிடம் வந்து காவல் கூலி கேட்டான். நான்
தர மறுத்தால் எனது உடமைகளைக் கொள்ளையடித்து விடுவேன் என்று மிரட்டினான். நானும்
அவனுக்குக் காவல்கூலி கொடுத்தேன். அவன் கேட்ட அளவிற்கு இல்லாமல் சிறிது பணம்
கொடுத்தேன். அன்று என் வாழ்க்கையில் முதன்முறையாக நான் மிகவும் அவமதிக்கப்பட்டதாக
உணர்ந்தேன். அதனால் இவ்வகையில் காவல் என்ற பெயரில் மிரட்டிப் பணம் பறிக்கின்ற
வழக்கத்திற்கு நாம் உடனடியாக முடிவு கட்டவேண்டும்”. எனவே, இந்தக் காவல் முறையை
ஒழிப்பதற்காக அரசு, முயற்சித்தவைகளுள்
ஒன்றுதான் உசிலம்பட்டி நாட்டாண்மை அம்மையப்பக் கோனாரைத் தூண்டிவிட்டுக்
கள்ளர்களைக் காவல் காக்கும் பணியிலிருந்து நீக்கியதாகும். இதற்காகக் கோனார்கள் ஒரு
‘பொது
நல நிதியை’ (fund) வசூலித்து, தங்களுக்குள்
ஒருவரைக் காவலாளியாய் நியமித்துக் கொண்டனர். இந்தக் கலகம் ‘பண்டு கலகம்’ என்றே அழைக்கப்பட்டது.
பண்டு கலகத்தினால் கள்ளர்கள் எல்லோரும் சமூகப் புறக்கணிப்புக்கு ஆளானார்கள்
என்பதும் குறிப்பிடத்தக்கது.
கள்ளர்கள் குடிக்கூலியும், துப்புக்கூலியும் பெற்றது
கூட ஏதோ ரௌடித்தனம் செய்யவேண்டும் என்பதற்காக அல்ல; தங்களது அதிகாரத்தை
நிலைநிறுத்திக் கொள்வதற்காகவே என்பது வரலாறு நெடுகிலும் காணப்படுகிறது.
குறிப்பாகத் திருமலை நாயக்கர் காலத்தில் (கி.பி.15 ஆம் நூற்றாண்டு), அவர் பாளையங்களை உருவாக்கி &
பாளையம்
என்பது ‘பாலிகாடு’ என்னும் தெலுங்குச்
சொல்லின் மறுவடிவம், இதற்கு
இராணுவக் குவியல் தங்கியிருக்கும் இடம் என்பது பொருள் &
அரசாட்சி
புரிந்து வந்தபோதும், இவர்கள்
தன்னரசு ஆட்சி புரிந்து வந்துள்ளனர். திருமலை நாயக்கரால் கள்ளர்களை ஒடுக்குவதற்காக
எடுக்கப்பட்ட எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. எனவே, அவர்களோடு நாயக்கர் சமாதான
மாகவே போக வேண்டியிருந்தது என்பது, சமூக&வரலாற்றின் மூலம் அறிய
முடிகிறது.
ஆக, அதிகார மையத்தின்கீழ்
அரசாட்சி புரிந்த கள்ளர்கள் தான், நாளடைவில் சமூகத்தின் விளிம்பு
நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். குற்றப் பரம்பரைச் சட்டம் என்னும் கைரேகைச்
சட்டம் மூலமாக அவர்களை ஓர் எல்லைக்குள் முடக்கிவைத்து, அவர்களது அசைவுகள்
கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. தனூர் வேதத்தைக் கற்றுத் தன் கைவிரலை
இழந்த ஏகலைவனைப் போலவே, இவர்களும்
தன்னரசு வேதத்தால் தங்களது கைரேகையை இழந்தார்கள். ஏகலைவனின் பெருவிரல் அவன் கற்ற
வில் வித்தையின் குறியீடு மட்டுமன்று; அவனது ஆண்மையின் குறியீடு.
அதைப் போலவே, கள்ளர்
சமூகத்து ஆண்களின் பெருவிரலும் அவர்களின் ஆண்மையின் குறியீடு எனப் பேரா.இ.
முத்தையா குறிப்பிட்டிருப்பது முற்றிலும் பொருத்தமானது.
இப்படிச் சட்டத்தின்
பெயரால் நடந்த இக்கொடுமைகளை எதிர்த்து, 1930களில் பல விவாதங்கள்
நடந்தன. 1936களில் பண்டித ஜவஹர்லால் நேரு, ‘சட்டப் புத்தகத்திலிருந்து
இந்தச் சட்டம் நீக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்’ என்றார். இதே போல, சென்னை உயர்நீதிமன்ற
முன்னாள் நீதிபதி திரு சுப்பராவ், ஹரிஜன சேவா சங்கத் தலைவர் கி.க்ஷி.
தக்கா, ப.
ஜீவானந்தம், பி.
ராமமூர்த்தி, உ.
முத்துராமலிங்கத் தேவர் போன்றோர் இக்கொடுஞ்சட்டம் நீக்கப்படுவதன் அவசியம்
குறித்துப் பேசி வந்தனர்.
இந்த விடயத்தில் உ.
முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பணி, தனித்து மதிப்பிட வேண்டிய
ஒன்று. தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒருசேரப் புலமை பெற்ற அவரது சாதுர்யமான பேச்சு, கள்ளர்களை ஒன்று
திரட்டியதோடு அன்றைய அரசையும் முடக்கிப் போட்டது. அதன் விளைவால், 1947இல் போலீஸ்துறை அமைச்சராக
இருந்த பி. சுப்பாராவ், இந்தச்
சட்டத்தை வாபஸ் வாங்குவதற்கான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார். பேகம் சுல்தான்
அம்ருதீன் போன்றவர்களால் இதற்கு முட்டுக்கட்டை போடப்பட்டபோதும், தீர்மானம் நிறைவேறியது; சுதந்திரத்திற்குப் பிறகு
தானாகவே காலாவதியானது.
வெள்ளைய அரசின் கீழ்தான்
கள்ளர்கள் கொடுந்துன்பத்திற்கு ஆளானார்கள் என்றால், சுதந்திர இந்தியாவிலும் அது
நீண்டு கொண்டுதான் இருக்கிறது. காங்கிரசின் நடவடிக்கையில் அதிருப்தியடைந்து
முத்துராமலிங்கத் தேவர் அவர்கள், ‘பார்வர்டு பிளாக்’ என்னும் கட்சியை நிறுவியது
நாம் அறிந்ததே. தேவரின் இறப்பிற்கு முன்னும் பின்னும் பார்வர்டு பிளாக்கை எவராலும்
வீழ்த்த முடியவில்லை என்பது வரலாறு. அவரது சுட்டுவிரலுக்கு ஒட்டுமொத்தக் கள்ளர்
சமூகமும் கட்டுப்பட்டது. அதன் காரணமாகவே கள்ளர் சமூகம், பின்னாளில் கஷ்டப்பட்டது.
உதாரணமாக 1952இல் ‘பெரியகுளம்’ சட்டமன்ற தேர்தலில்
போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் என். ஆர். தியாகராஜனை, பி.கே. மூக்கையா தேவர்
தோற்கடித்தற்காகவே காங்கிரஸ், வைகை அணையைக் கட்டுவதற்குப்
பிறமலைக் கள்ளர்களது குடியிருப்பு களைக் காலி செய்து வஞ்சம் தீர்த்துக் கொண்டது.
(அணை கட்டுவதற்கு மாற்றிடம் இருந்தபோதும், காங்கிரஸ் அதை
நிராகரித்தது). சோழ வந்தான் வேளாளர்களுக்கும், மானாமதுரை
பார்ப்பனர்களுக்கும் சாதகமாக வைகை அணை அமைந்தது.
அதே போல, மதுரைக்கு அருகே பிறமலைக்
கள்ளர்களது பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைத் தாண்டிக் காங்கிரசின் முக்கிய
தலைவராக இருந்த திருப்பரங்குன்றம் சின்ன கருப்பன் அம்பலத்திற்கு, நீர்ப்பாசன வசதியைக்
காங்கிரஸ் செய்து தந்தது. காங்கிரசின் அமைச்சராயிருந்த ராஜாராம் நாயுடு
அவர்களுக்கு மட்டும், நீர்ப்பாசனக்
கால்வாய்கள் அமைத்துத் தந்ததும் கவனிக்கத்தக்கது.
ஆக, வரலாறு நெடுகிலும் பிறரிடம்
உயர்ந்தபட்ச மரியாதையையும் கண்காணிப்புக்கு எதிரான அச்சுறுத்தலையும் தொடர்ந்து
பெற்றுவந்த கள்ளர் சமூகத்தின் அடையாளங்களைப் பதிவு செய்யும் முகத்தான், காலனிய காலத்து
எதிர்ப்புரட்சியையும் தொகுத்தளிக்கும் இனவரைவியலாக இந்நூல் விரிந்திருக்கிறது.
இதற்காக உழைத்திருக்கும் நூலாசிரியர் திரு. சுந்தரவந்தியத்தேவன் பற்றியும் கொஞ்சம்
பேசியே ஆகவேண்டும்.
புத்தக மூட்டையையும்
வாழ்க்கை மூட்டையையும் சுமக்க வேண்டிய தருணத்தில், நாளெல்லாம் ‘கூன்’ பொதியைச் சுமந்து அலையும்
மாற்றுத்திறனாளி, வந்தியத்தேவன்.
இந்தப் பொதியோடே ஊர் ஊராக அலைந்து திரிந்து, தனது இனத்தாரின் வரலாற்றைச்
சேகரித்திருக்கிறார். ‘உத்தியோகம்
புருஷ லட்சணம்’ என்பதையும்
மறந்து, தன்
இனத்தாருக்காகவே வாழ்க்கையைத் தொலைத் திருக்கிறார். புத்தகங்களிலும், நூலகங்களிலும் மட்டும்
குறிப்புகளை எடுக்காமல் களஆய்வின் மூலமாகவும் தரவுகளைச் சேகரித்திருக்கிறார் (மக்கள்
வரலாறு என்பது, வளாகம்
சாராத படிப்புக்கு வெளியே தானே இருக்கிறது!) அதன் விளைவாகக் கள்ளர்களது சமூக
அமைப்பு, நாட்டு
அமைப்பு, குடும்ப
உறவுகள், குலதெய்வ
வழிபாடு, கள்ளர்களது
அரசியல் பங்களிப்பு முதலியவற்றை எல்லாம் இந்நூலில் விரிவாகக் காணமுடிகிறது.
குறிப்பாகப் பின்னிணைப்பில் அவர் கொடுத்திருக்கக்கூடிய ஆவணங்கள் மதிப்புமிக்கவை.
கள்ளர்கள் பற்றிய ஆய்வில் இனிவரும் தலைமுறை இதனூடே பயணிக்காமல் செல்லவே முடியாது
என்னும் அளவிற்கு, ஆதாரங்கள்
கொட்டிக் கிடக்கின்றன.
இந்தக் கடுமையான
உழைப்பிற்காகவும் விடாப்பிடியான முயற்சிக்காவும், அவரை எவ்வளவு
பாராட்டினாலும் தகும். தரமறிந்து வரிசையிடக்கூடிய வகையில் இந்நூலும் அமையும்
என்பதை உரக்கக் கூறலாம். இறுதியாக….
‘சாதிப்பெருமை பேசும்
தமிழ்ச் சமூகத்தில் சாதிப்பெயரைச் சொல்லிச் சொல்லியே பொதுவாழ்வின் மையத்திலிருந்து
விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட பூர்வகுடிகளின் எழுச்சிமிக்க வரலாற்றைப் பேசும்
இந்நூல் பொய்களை ஆராதிக்கவில்லை; உண்மைகளைத் தேடச் செய்கிறது; பொதுவாசகரிடம்
புரிந்துணர்வைக் கோருகிறது.’
நன்றி
; எழுதியவர்க்கு.