திருநெல்வேலி, ஜன.31: திருநெல்வேலியில் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டது.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மத்திய அரசுக் குழுவுடன் 4-ம் கட்டப் பேச்சு நடத்துவதற்காக வந்தவர்கள் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.இந்த தாக்குதலைக் கண்டித்து அணுஉலை எதிர்ப்பாளர்கள் ஆட்சியர் அலுவலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் கூறுகையில், யாருக்காகவும் நாங்கள் போராடவில்லை. எங்களது போராட்டம் வாழ்வாதார போராட்டம். இந்த போராட்டம் ஓயாது எனத் தெரிவித்தனர். மத்தியக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த வந்தவர்களுடன் 50-க்கும் மேற்பட்ட பெண்களும் வந்தனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, பேச்சுவார்த்தை நடத்த வந்தவர்களுக்கு பாதுகாப்பாக வந்தோம் எனத் தெரிவித்தனர்.தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு இந்து முன்னணியினரும், காங்கிரஸ் கட்சியினரும்தான் காரணம் என அவர்கள் குற்றம்சாட்டினர்.இருதரப்பினரும் மாறி மாறி கோஷங்கள் எழுப்பியதால் இப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான பேச்சுவார்த்தையில் பங்கேற்க மாட்டோம் என்று தெரிவித்துவிட்டு உதயக்குமார் ஆதரவாளர்கள் அங்கிருந்து கிளம்பினர்.