குற்றப் பரம்பரைச் சட்டம் பற்றி நீங்கள் ஏற்கெனவே ஆய்வு செய்துஎழுதியுள்ளீர்கள். இச்சட்டத்தை மையமாக வைத்துப் பெரியதொரு நாவல்எழுதவேண்டும் எனும் மன உந்துதல் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?
குற்றப் பரம்பரைச் சட்டம் பற்றிய தேடல் நீண்டகாலம் என் மனசைச் சுற்றியே வந்தது. அதற்குக் காரணம் மதுரைக்குப் பக்கத்தில் இருக்கிற கீழக்குயில்குடிங்கிற ஒரு சின்ன கிராமம். நான் அரசியல் பணிகளுக்காகக் கிராமங்களுக்குப் போய் அங்கிருக்கிற தோழர்களோடும் மக்களோடும் பேசிப் பழகும்போது அந்தக் கிராமத்தில் 1910-20களிலேயே சாலை போடும் பணியும் பள்ளிக்கூடப் பணியும் நடைபெற்றிருந்ததை அறியமுடிந்தது. மேலும், அந்த ஊருக்குள் கோர்ட் மற்றும் ஜெயில் இருந்ததையும் அறிந்தேன். ஒருநாள் தோழர் ஒருவரின் வீட்டில் கூட்டம் நடைபெற்றபொழுது பழைய நோட் டொன்றைக் கொண்டுவந்து கொடுத்தார். அந்நோட்டில் பள்ளிக் கூடத்துக்கு வராத குழந்தைகளோட அப்பாவை ஜெயில்ல வைக்கச் சொல்லி போலீஸ் சூப்பிரண்ட்டுக்கு ஸ்கூல் டீச்சர் எழுதின லட்டர் இருந்தது. எனக்கு ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. இந்தக் கடிதத்தின் வழியேதான் என் பயணம் தொடங் கியது; CTA Act பற்றிய ஆய்வாக மூன்று வருடம் தொடர்ந்தது. இதைப் புனைவாக எழுதுவதா அல்லது ஆய்வாக எழுதுவதா எனும் குழப்பம் இருந்தது. பிறகு, முதலில் எல்லாவற்றையும் சேகரிப்போம்; அதன் பிறகு முடிவுசெய்து கொள்ளலாம் என்று சேகரிக்கத் தொடங்கினேன். அச்சேகரிப்பின் வழியாகத் துவங்கியதுதான் இப்பணி. குறிப்பாக அதனுடைய ஆழம்தான் என்னை ஒரு புனைவை நோக்கித் தள்ளியது. கண்டிப்பாக ஒரு ஆய்வு நூலாக மட்டும் இதனை முன்வைக்க முடியாது. முன்வைக்க முடியாது என்பதைவிட காலத்துக்கும் இது தன்னுடைய இடத்தை, உண்மையை நெருங்குவதற்குப் புனைவு வடிவமே ஏற்றது என உணர்ந்தேன். அந்த அடிப்படையில்தான் அதனைக் காவல்கோட்டம் நாவலாக எழுதத் தொடங்கினேன்.
காவல்கோட்டத்தையோ குற்றப்பரம்பரையையோ வாசிக்கும்போதுசுதந்திரமாகச் சுற்றித் திரிந்த உடலைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மக்களின்உளவியலையே கட்டுப்படுத்துவதின் வலியை உணர முடிகிறது. வாசிச்சஎங்களாலயே இரவுல தூங்க முடியல. எழுதும்போது உங்க மனநிலை எப்படிஇருந்தது?
அது மறக்கமுடியாத காலம்தான். இப்பகூட காவல்கோட்டத்தின் இரண்டாம் பதிப்பில் சின்னக் குறிப்பொன்றை எழுதியிருக்கேன். மனநிலை பிறழ்ந்து பித்தாகித் திரிந்த காலம்னுதான் அத எழுதியிருக்கேன். ஏனெனில் உச்சபட்சமான ஒரு கொடூரம் 1910இல் ஆரம்பித்து 1920 - 25 வரை நடந்தது. பதினைந்து ஆண்டு காலம் அந்த மொத்த சமூகத்தையுமே கசக்கிப் பிழிந்த காலம். 1925க்குப் பிறகு அந்தக் கொடுமையை ஏத்துக்கிட்ட அல்லது இனி ஒன்றும் செய்யமுடியாது எனும் நிலைக்கு வந்தார்கள். குறிப்பிட்ட இனத்தை ஒரு குறிப்பிட்ட இடத்துக்குள், நேரத்துக்குள் கட்டுப்படுத்துறதுதான் குற்றப் பரம்பரைச் சட்டம். ஒருவனுடைய இருப்பு, நேரம், காலம் அனைத்தையும் கண்காணிப்புக்குட்படுத்துவதுதான் அதனுடைய தன்மை. அதே சமயம் விவசாயம் உள்ளிட்ட தொழில்களைச் செய்துகொள்ளலாம் எனப் பேருக்கு ஒரு ஜனநாயக முகமும் இருக்கும். ஆனால் தோட்டத்துக்குப் போய் விவசாயம் செய்பவனோ அல்லது மாடு மேய்க்கின்றவனோ எப்படி 6 மணிக்குள் வீட்டுக்கு வரமுடியும்? பக்கத்து ஊருக்குச் சென்றாலும் சீட்டு வாங்கிச் செல்லவேண்டும். அந்தப் பொழுதுக்குள் வராவிட்டால் ஜெயிலுக்குப் போகவேண்டும். அவ்வளவு பெரிய கண்காணிப்பு. ஒரு பக்கம் கண்காணிப்பு; இன்னொரு பக்கம் கட்டாயக் குடியேற்ற முகாம். இது ஹிட்லருடைய இராணுவ கேம்ப் அளவுக்கு சொல்ல முடியாவிட்டாலும் அந்தத் தன்மையானதுதான்.
கீழக் கூடலூரில் உருவாக்கப்பட்ட அந்த முகாம் குறித்து நாவலுடைய கடைசிப் பகுதியில் வரும். அந்த முகாமில் மொத்த ஜனத்தொகை 34. குழந்தைகளையும் சிறார்களையும் கழித்துவிட்டுப் பார்த்தால் 24 பேர். போலீஸாரின் எண்ணிக்கை 18 பேர். ஏறக்குறைய ஒருத்தருக்கொருத்தர். 18 பேரில் 7பேர் வரை வெள்ளை அதிகாரிகள். அவ்வளவு பெரிய உச்ச கண்காணிப்பு. பிறகு இவர்களைத் தேயிலைத் தோட்டங்கள், இராணுவம் மற்றும் அஸாம் காடுகளுக்கு அனுப்பிக் கொடுமை செய்தனர். உண்மையைச் சொல்லப் போனால் அந்தப் பகுதியை என்னால் எழுதவே முடியவில்லை. நாவலை எழுதுவதற்குக் காரண மான பகுதி அதுதான். அதைமட்டும் 500 பக்கங்கள் எழுதுவதற்கான தரவுகளும் குறிப்புகளும் என்னிடம் இருந்தன. ஆனால் நான்கு நாட்களில் நான் அந்தப் பகுதியை எழுதினேன். அதற்கு மேல் எழுத என்னால் முடியவில்லை. எப்படியாவது எழுதி வெளியே வரவேண்டும் எனும் மனநிலைதான் இருந்தது. மிகப் பெரிய வலி. மொத்த நாவலையும் எழுதவைத்தது அந்த வலிதான். இது வரலாறாக, அரசியலாக, இலக்கியமாக வேறெங்கும் பதிவாக்கப்படவேயில்லை.
காவல்கோட்டத்தில் கள்ளர்கள் மட்டுமல்லாமல் குறவர், வலையர், மறவர்முதலானோரும் காவல் காத்தனர்; அவர்களின் காவல்முறைகுலைக்கப்படும்போது களவாடினர் எனப் பதிவு செய்துள்ளீர்கள். குறிப்பாக,செம்பூர்காரர்கள் பற்றிய புனைவு முக்கியமானது. இவை இதுவரை பதிவுசெய்யப்படாதவை. இவற்றை எங்கிருந்து கண்டெடுத்தீர்கள்?
செம்பூர்காரர்கள் புனைவுதான். அதற்குள் இருக்கின்ற குணாம்ச ரீதியாப் பார்த்தால் அது ஒரு குறிப்பிட்ட சமூகம் என யூகிக்கலாம். மங்கம்மா உருவாக்கிய சாலையைக் காவல் காக்கும் செம்பூர்காரர்கள் ஒட்டுமொத்த காவல்முறையின் சின்னக் குறியீடு. செம்பூர்காரர்கள் எப்படி சாலையைப் பாதுகாக்க முடியாமல் பிரிட்டிஷாரால் கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளையர்களாக மாற்றப்படுகிறார்களோ அதேமாதிரி தான் இங்கும் நடக்கிறது. மற்றபடி பண்டுக் கலவரத்தைப் பேசுகிறபொழுது வலையர்களையும் குறவர்களையும் பற்றி பேசவேண்டி யிருக்கிறது. என்னுடைய நாவலின் மையத்திலிருந்து நான் ரொம்ப விலகிப் போவதற்கு எனக்கு அனுமதி இல்ல இல்லையா? அதனால் அது சார்ந்து அவசியமாக இருப்பதனை மட்டும் எவ்வளவு தூரம் சொல்ல முடியுமோ அவ்வளவு தூரம் சொல்லி இருக்கிறேன். நாவலைப் பொருத்த வரைக்கும் வரலாற்றின்மீது கட்டப்பட்ட புனைவும் புனைவின்மீது கட்டப்பட்ட வரலாறுமாக இருக்கிறது. இல்லையா?
நிச்சயமா. பண்டுக் கலவரம் என்பதே கள்ளர்களுக்கு எதிராக உயர் சாதியினர்அம்மையப்பக் கோனாரைத் தூண்டிவிட்ட நிகழ்வுதான் என்றுகுறிப்பிட்டுள்ளீர்கள். மேலும் கள்ளர் - கோனார்களுக்கு இடையிலான நீண்டஉறவு, வணிகத்தில் வளர்ந்துவரும் நாடார்களுக்கு பாது காப்பளிக்கும் கள்ளர்கள்முதலான வரலாற்று நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளீர்கள். அதேசமயம்கிடைகளில் களவு கொடுத்த கோனார்களின் வலி, ரௌத்திரம் மற்றும் சிவகாசிகலவரத்தில் மேலூர் கள்ளர்களின் பங்கு ஆகியன பதிவு செய்யப்படாததுதற்செயலானதா?
சிவகாசி கலவரம் ஒரு பெரும் நாவலுக்குரியது. பண்டுக் கலவரம் அதைவிடப் பெரியது. சிவகாசிக் கலவரம் ஒரு நகரத்தினுடைய சம்பவம். பண்டுக் கலவரம் ஏறக்குறைய இன்றைய திண்டுக்கல் மாவட்டம் முழுக்க கிராமக் காவலர்கள் தாக்கப்பட்டு பூர்வீகக் கிராமங்களுக்கு விரட்டப்பட்டனர்; அது கொடுமை. நீங்கள் கேட்ட இந்த ரெண்டு கேள்விகளுமே ஏற்கனவே சிலரால் விமர்சனமாகவும் முன்வைக்கப் பட்டன. இப்படிப் பார்த்தால் இதே காலத்தில் கமுதிக் கோயிலில் நாடார்கள் நுழைய முயன்றதும், அங்கிருந்து வெளியேற்றப் பட்டதுமான நிகழ்வுகள் நடந்துள்ளன. இது மாதிரி மதுரையைச் சுற்றி பல சமூக நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கு. இது தற்செயலானதா என்றால் என்னுடைய நோக்கமும் பணியும் இதை மையமிட்டுதான் இருந்தது. நான் எழுதப் போற Non fiction புத்தகத்துல பண்டுக் கலவரத்தைப் பற்றி தனியா ஒரு அத்தியாயமாக எழுதப்போறேன். பண்டு கலவரம் பற்றிய அரசு ஆணை மட்டும் 436 பக்கங்கள். அது ஒரு தனி ஆய்வு. அதற்கே நிறைய செலவு செய்து நிறைய குறிப்புகளைச் சேகரித்து வைத்திருக்கேன். அதையெல்லாம் நாவலுக்குள் கொண்டுபோனா எங்கேயோ போயிருக்கும். அம்மையப்பக் கோனார் என்கிற ஒரு சின்ன பாத்திரத்தை வைத்து நாவலில் அது எப்படி ஒரு தாக்கத்த ஏற்படுத்தி இருக்கும் என்கிற உண்மையைப் புனைவின் மூலம் கண்டறிகிற முயற்சியைச் செய்திருக்கிறேன்.
உங்களுடைய நாவல்ல கதைசொல்லல் மரபைப் போலவே பெண்களின்ஆளுமையும் வீரியம் மிக்கதாக உள்ளது. அதை எப்படி எழுத்தில்கொண்டுவந்தீர்கள்?
நான் கொல்லவாருகள், பிரமலைக் கள்ளர்கள் என்ற இரண்டு இனக்குழுக்களைப் பற்றி இந்த நாவல்ல பேசியிருக்கேன். நாவலில் அவர்களுடைய ஒட்டுமொத்த விஸ்வரூபத்தையும் என்னால முழுசா பதிவு செய்திருக்க முடிஞ்சிதா அல்லது நான் நினைத்த அளவுக்கு வந்தி ருக்கா என்ற கேள்வி இருக்கு. ஆனால் படித்தவரைக்கும் அதனுடைய பிரம்மாண்டத்தை எல்லோராலும் உணர முடிகிறது. கங்காதேவி ஆரம்பித்து கழுவாயி வரைக்கும் இரத்தமும் சதையுமான பெண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உணர்கிறேன். ஆனால் இந்த இரண்டு இனக் குழுக்களிலும் பெண்களுடைய இடம் பிரம்மாண்டமானது. அதை யெல்லாம் சாதாரணமாகக் கடந்து போய்விட முடியாது. ஆண்களப் பார்த்தா வெளியில்போய் காவல் காத்துட்டு வருவான்; பெரிய வீரனா இருப்பான்; ஆனா ஊருக்குள்ளப் போவதற்கு பயப்படுவான். ஏனா அங்கதான் அடி வாங்குவான். அங்க அவன் பொம்பளைங்கள எதிர்கொள்றது ரொம்ப கஷ்டம். அவங்களுக்குதான் உண்மை என்னன்னு தெரியும். நாவலே சடச்சி, கங்காதேவி என்ற இரண்டு பெண்களுடைய வழித்தோன்றகளைப் பற்றித்தான். கடைசி வரைக்கும் சடச்சி மாதிரி ஒருத்தியா அப்படின்னுதான் ஏக்கத்துடனும் பிரம்மாண்டத்துடனும் பேசியிருந்தேன். அதேமாதிரி நாவலுடைய மிகப் பெரிய கதாபாத்திரம் மாயாண்டி பெரியாம்பள. அவனை கொடிக்காபட்டி கிழவி சாதாரணமாக நீயெல்லாம் ஒரு ஆளான்னுவா. நாவலின் பிரம்மாண்டமான கதாபாத்திரத்தை அடிச்சி தூக்கிப்போட்டு போயிட்டே இருப்பா.
காவல்கோட்டத்தில் மேலூர் கள்ளர்கள் ஐந்தாயிரம் பேரைப் பிரிட்டிஷார்கொன்ற வன்மத்தை எப்படி உங்களால் எட்டு வரி செய்தியாக மட்டுமே பதிவுசெய்ய முடிந்தது. அது எவ்வளவு வலிகளும் வன்மமும் நிறைந்தது?
சரிதான். இது உச்சமான சோக நிகழ்வு. ஒருமுறை மேலூர் கள்ளர்கள் 5000 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். இன்னொருமுறை 2000 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். மற்றுமொருமுறை பல ஆயிரக்கணக் கான பேர்னு சொல்றாங்க. இவை எல்லாமே பிரிட்டிஷார் எழுதிவைத்த ஆவணங்களில் இருக்கு. இது எங்கு நடந்தது, எப்படி நடந்தது, இதைப் பற்றிய கதைகள் ஏதாவது இருக்கா என்று நான் இந்த நாவல் எழுதிய ஆண்டுகள் முழுக்கத் தேடி இருக்கிறேன். என்னுடைய பிரதானமான கதைக்களனாகவும் கவனமும் இருந்தது மேற்குநாடும் பிரமலைக் கள்ளர்களும்தான். எனவே மேலூர் கள்ளர் படுகொலையில் அதிகக் கவனம் செலுத்தமுடியவில்லை. ஆனா இப்ப வரைக்கும் நான் படுகொலை நடந்த இடத்தைத் தேடிகிட்டு இருக்கேன். பிரிட்டிஷ்காரங்க இரண்டு இடங்களைக் குறிப்பிடுகிறார்கள். திருப்பூர் கோயில்குடி என்ற ஊர் சொல்லப்படுகிறது. ஆனால் அப்படி ஓர் ஊர் இன்றில்லை. ஒருவேளை படுகொலைக்குப் பிறகு அந்த ஊர் அழிந்திருக்கலாம். மதுரையில் கோவில்பட்டி, கோயிலாங்குடி என்ற ஊர்கள் இருக்கு. இதெல்லாம் மருவி வந்திருக்கலாம், வெள்ளளூர் நாடு பற்றியும் குழப்பம் இருக்கிறது. எது எப்படியோ மேலூர் கள்ளர்கள் மீது நிகழ்த்தப்பட்டது மிகப்பெரும் படுகொலை.
இந்திய சரித்திரத்தில் இவ்வளவு பெரிய படுகொலைகள் வேறு எங்கும் நிகழ்ந்திருக்காது. ஆனால் அதனை இந்த நாவலில் attend பண்ண முடியாது. அது நாவலாகவோ, Non fiction ஆகவோ தனியே எழுதப்படவேண்டிய பெரிய விஷயம். காவல்கோட்டத்தின் கதைத்தளத்தில் இருந்து ரொம்ப தள்ளி நடக்கின்ற ஒரு நிகழ்வு இது. ஆனாலும் ஒரு குறிப்பாகவாவது அதனைப் பதிவு செய்யவேண்டும் என்பதால்தான் நாவலில் பதிவு செய்திருக்கிறேன். அதைக் கடந்து அந்தச் செய்தி சார்ந்து கடந்த ஆறு, ஏழு வருடங்களாக நான் ஆய்வு செய்துகொண்டு இருக்கிறேன். ரூம்ளே என்ற ஒரு சாமி இருக்கிறது என்று முல்லர் என்கிற பிரிட்டிஷ்காரன் எழுதியிருக்கான். அப்படி ஒரு சாமி இருக்கான்னு நான் தேடிக்கிட்டு இருக்கேன். ஏனா இந்தச் சம்பவம் நடந்து சுமார் 270 வருடங்கள் ஆகிறது. தடயத்தைக் கதை களின் மூலமாகத்தான் கண்டு பிடிக்கமுடியும். இருந்தும், உறுதியாக அவர்கள் பிரிட்ஷாரை எதிர்த்ததும் இந்தப் படுகொலைக்குக் காரணமாயிருக்கலாம். மருது சகோதரர்கள், ஊமைத்துரை எனப் போராட்டக்காரர்களின் புகலிடமாக மேலூர் காடுகள்தான் இருந்தன. அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த அழிவு நடந்திருக்கலாம். மருது சகோதரர்கள் காலம் ஆரம்பித்து பெரியாற்று நீர்ப்பாசனம் கொடுக்கும் வரைக்கும் முந்நூறு வருடங்கள் மேலூர் காடுகளும் மக்களும் பிரிட்டிஷாருடைய கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு இருந்தனர். மேலூர் கள்ளர்கள் பற்றி கண்டிப்பாக, புனைகதையாகவோ அல்லது ஆய்வாகவோ பதிவு செய்யப்பட வேண்டியது அவசியம்.
உரையாடியவர்கள்: ஜ. சிவகுமார் மற்றும் மு. காமாட்சி, தமிழ் இலக்கியத்துறை முனைவர்பட்ட ஆய்வாளர்கள்
By--- keetru maraththamizhar senai