சைவர்களும் வைணவர்களும் மோதிக்கொண்டதாக வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இல்லாவிடினும் ஏனோ அவர்களுக்குள் ஒரு ஒற்றுமையும் இருந்ததில்லை. சிவாலயங்களுக்கு வைணவர்கள் செல்வதில்லை. வைஷ்ணவ கோயில்களுக்கு சைவர்களும் தொழுவதில்லை. என்னத்தான் ‘ஹரியும் சிவனும் ஒண்ணு; அறியாதார் வாயில மண்ணு;’ என்று இருவரது ஒற்றுமையை வளர்க்க ஆயிரம் சொன்னாலும் அவர்களுக்குள் இருக்கும் பனிப்போர் மட்டும் தீர்வது இல்லை. ஆனால் சைவர்களும், வைணவர்களும் எந்த வேறுப்பாடும் இன்றி ஒற்றுமையாய் ஒரு ஸ்தலத்திற்கு சென்று வழிப்படுகிறார்கள் என்றால் அது ராமேஸ்வரமாகத் தான் இருக்கும்.
மகாவிஷ்ணுவின் அவதாரமான ராமபிரான் லிங்கம் அமைத்து சிவப்பெருமானை வழிப்பட்ட இடமாதலால் இங்கே சைவர்களையும், வைணவர்களையும் ஒருங்கே காணமுடிகிறது. இந்த புண்ணியத் தலத்தில் பர்வதவர்த்தினி அம்பாள் சமேத ராமநாதசுவாமி எழுந்தருளியிருக்கிறார்.
ஸ்தல வரலாறு: ராவணனை போரில் வதம் செய்து சீதையை மீட்டு இலங்கையிலிருந்து திரும்பிய ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி ராமேஸ்வரம் வந்தடைந்ததும் தனது பிரம்மகத்தி தோஷம் நீங்க பிராயச்சித்தம் செய்ய விரும்பி லிங்கம் அமைத்து சிவப்பூஜை செய்ய விரும்பினார். உடனே அனுமாரை கைலாசம் சென்று லிங்கம் எடுத்து வருமாறுக் கூறினார். நீண்ட நேரமாகியும் அனுமார் திரும்பவில்லை. பூஜை செய்வதற்கான நல்ல நேரம் கடந்துக் கொண்டிருந்தது. அதனால் சமயோசிதமாக சிந்தித்த சீதை கடற்கரை மணலிலேயே லிங்கம் போல செய்து கொடுத்தார்.
கைலாசத்திலிருந்து லிங்கத்துடன் திரும்பிய அனுமார் மணலால் செய்யப்பட்ட சாதாரண லிங்கத்திற்கு பூஜை செய்வதா என வெகுண்டெழுந்து அதை அகற்றிவிட்டு தான் கொண்டு வந்த லிங்கத்தை அங்கே வைக்க வேண்டும் என்ற ஆசையில் சீதை செய்த மணல் லிங்கத்தை தகர்த்த முனைந்தார். ஆனால் அவரால் இயலவில்லை. தனது பலம் முழுவதும் பிரயோகித்து அதை தகர்க்க பார்த்தாலும் இயலவில்லை. மனம் வருந்திய அனுமாரை ஆறுதல்படுத்துவதற்காக அவர் கொண்டு வந்த லிங்கத்திற்கே முதலில் பூஜை செய்ய வேண்டும் என ராமர் கட்டளையிட்டார். அதனால் இன்றும் ராமேஸ்வரம் கோயிலில் அனுமார் கொண்டு வந்த லிங்கத்திற்கே முதலில் பூஜை செய்யப்படுகிறது.
தலப் பெருமை: இந்தியாவில் மொத்தம் 12 ஜோதிர்லிங்கங்கள் உண்டு. அவற்றில் தென்னிந்தியாவில் இருக்கும் ஒரே ஜோதிர்லிங்கப் புண்ணியத்தலம்
ராமேஸ்வரமாகும். காசிக்கு இணையான ஸ்தலமாக இது கருதப்படுகிறது. புண்ணியம் தேடி காசி யாத்திரை செல்பவர்கள் ராமேஸ்வரத்திற்கு வந்து வங்காள விரிகுடாவும், இந்திய பெருங்கடலும் இணையும் தனுஷ்கோடியில் தீர்த்தமாடினால்தான் அவர்களது யாத்திரை முழுமைப்பெறுகிறது. இந்து மகான் ஆதிசங்கரர் 4 தலங்களை இந்தியாவின் மிக முக்கிய புண்ணிய க்ஷேத்திரங்களாக குறிப்பிடுகிறார். கிழக்கில் பூரியும், மேற்கில் துவாரகையும், வடக்கே பத்ரிநாத் கோயில் மற்றும் தெற்கே ராமேஸ்வரமுமே அவர் குறிப்பிட்ட அந்த முக்கிய ஆலயங்களாகும். எவர் ஒருவர் ஒரே யாத்திரையில் இந்த 4 ஸ்தலங்களுக்கும் சென்று வழிப்படுகிறாரோ அவர் சகல பாவங்களும் நீங்கி மீண்டும் ஜனனம், மீண்டும் மரணம் என்னும் சுழலில் இருந்து மீண்டு முக்திப் பெறுவர் என்பது நம்பிக்கை.
கோயில் அமைப்பு மற்றும் வரலாறு: இக்கோயில் இராமாயணக் காலத்துடன் தொடர்புடையதாக இருந்தாலும் 12ம் நூற்றாண்டு வரை ஒரு முனிவரின் கட்டுப்பாட்டில் சிறுக் கொட்டகையுடன் இருந்தது. பின்னர் கிபி 12ம் நூற்றாண்டில் இலங்கை மன்னர் பராக்கிராமபாகு இக்கோயிலின் கர்ப்பகிரகத்தைக் கட்டினார். 15ம் நூற்றாண்டில் ராமநாதபுரம் அரசர் உடையான் சேதுபதி மற்றும் நாகூரை சேர்ந்த வைசியர் ஒருவரும் மேற்கு கோபுரத்தையும் , மதில் சுவர்களையும் கட்டினார்கள். பல்வேறு காலகட்டங்களில் பல மன்னர்களும், செல்வந்தர்களும் இக்கோயிலுக்கு பல திருப்பணிகளை செய்துள்ளனர். 1905ம் ஆண்டு தேவக்கோட்டை ஜமீன்தார் ஏ.எல்.ஏ.ஆர். குடும்பத்தினர் 126 அடி உயர கிழக்கு கோபுரத்தைக் கட்டினர். இக்கோயிலில் உள்ள 1212 தூண்களும் 2250 அடி சுற்றளவும் கொண்ட மூன்றாம் பிரகாரம் உலகிலேயே மிக நீளமானது என்ற பெருமைக்குரியது. அதுப்போலவே இத்திருக்கோயிலில் உள்ள நந்தியும் மிக பிரமாண்டமாய் 22 அடி நீளம், 12 அடி அகலம், 17 அடி உயரத்தில் மிக கம்பீரமாய் இருக்கிறது.
ராமேஸ்வரம் கோயிலின் உட்புறத்தில் 22 தீர்த்தங்களும், கோயிலுக்கு வெளியே அக்னிதீர்த்தம், தேவிபட்டிணம் (நவபாஷாணம்), திருப்புல்லாணி (தர்ப்பசயனம்), மண்டபம், பாம்பன், தங்கச்சி மடம் போன்ற இடங்களில் 31 தீர்த்தங்களும் உள்ளன. இவையனைத்துமே பாவம் போக்கும் மகிமைப் பெற்றவை. இத்திருக்கோயிலில் உள்ளேயுள்ள மூன்று திருகுளங்களும் ( மகாலெட்சுமி தீர்த்தம்,சேதுமாதவர் தீர்த்தம் மற்றும் சிவதீர்த்தம் ) நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
பூஜை மற்றும் உற்சவங்கள்: காலை 5 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், மீண்டும் மாலை 3 மணியிலிருந்து இரவு 9 மணி வரை நடைத் திறந்திருக்கும். தினமும் 6 கால பூஜைகளும் சிறப்பாக நடைபெறுகின்றன. மகா சிவராத்திரி, ராமலிங்க பிரதிஷ்டை விழா, ஆடித் திருக்கல்யாணம், நவராத்திரி, கந்த சஷ்டி, ஆருத்ரா தரிசனம் போன்ற விழாக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. வைகாசி மாதம் பௌர்ணமியை முன்னிட்டு 10 நாட்களுக்கு வசந்தோற்சவமும் நடைப்பெறுகிறது.
எங்கே இருக்கிறது, எப்படி செல்வது? மதுரையிலிருந்து 164கிமி தொலைவில் இருக்கிறது. ராமேஸ்வரம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு தீவு, இது பாம்பன் தீவு என்றும் அழைக்கப்படுகிறது. நான்கு புறமும் கடலால் சூழப்பட்ட இத்தீவை பாம்பன் பாலமே ஊருடன் இணைக்கிறது. சென்னை, மதுரையில் இருந்து ரயில் வசதி இருக்கிறது. மதுரையிலிருந்து பேருந்துகளும் இருக்கிறது. ராமேஸ்வரத்தில் தங்குவதற்கு கோயில் நிர்வாகத்தை சேர்ந்த காட்டேஜ்களும் நிறைய இருக்கின்றன. தனியார் ஓட்டல்களிலும் தங்கிக் கொள்ளலாம்.
ராமேஸ்வரம் சுற்றுப்புறம்: இத்தீவு கோயில்களுக்காகவே கடவுளால் உருவாக்கப்பட்ட தீவுப் போலிருக்கிறது. அதனால் இங்கே ஏகப்பட்ட கோயில்கள் இருக்கின்றது.
தனுஷ்கோடி: ராமேஸ்வரத்திலிருந்து 8 கிமி தொலைவில் இருக்கும் இந்த இடத்திற்கு ராமர் கையில் இருக்கும் ’தனுசு’வை குறிப்பதற்காக தனுஷ்கோடி என்ற பெயர் வந்தது. இங்கே இருந்த கோயில் 1964ல் அடித்த புயலில் ஊரே அழிந்தப் போது கோயிலும் அழிந்து விட்டது. இன்று இவ்வூர் பாழடைந்த கட்டடங்களுடன் கடல் மற்றும் மணற்பரப்போடு காணப்படுகிறது.
கோதண்டராமசுவாமி திருக்கோயில்: ராவணனின் சகோதரன் விபிஷ்ணன் இவ்விடத்தில்தான் ராமரிடம் வந்து சரணடைந்தார்.
மேலும் ராமர் பாதம், ஹனுமார் கோயில், பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில், மிதவை கல், உத்திரகோச மங்கை, திருப்புல்லாணி, தேவிப்பட்டிணம் என ஏராளமான கோயில்கள் நிறைந்திருக்கிறது.
பாம்பன் பாலம்: ராமேஸ்வரம் தீவை இந்தியாவுடன் இணைக்கும் மிக நீண்ட பாலம். இது கடலின் மீது 2.3 கிமீ நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. ரயில் பாலம், தரைப்பாலம் இரண்டுமே இருந்தாலும் ரயில் பாலத்தையே பாம்பன் பாலம் என்று குறிப்பிடுகின்றனர். பாம்பன் ரயில் பாலம் 6,776 அடி நீளமானது. 1914 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இப்பாலத்தின் கீழே கப்பல்கள் செல்வதற்கு வசதியாக பாலத்தின் நடுப்பகுதியை உயரத் தூக்குவதற்கு ஏற்றவாறு வடிவமைத்துள்ளனர்.
ராமேஸ்வரத்தின் கடலழகையும் குறிப்பிட்டாக வேண்டும். இங்கே அலைகளே கிடையாது. இங்குள்ள அலைகள் 3செமி உயரத்திற்கு மட்டுமே எழும்பும். இதுப் போல இயற்கை எழில் மிகுந்த கோயில்களால் சூழ்ந்த அழகிய ராமேஸ்வரத்திற்கு நாமும் ஒருமுறை சென்று வரலாமே.
கோதண்டராமசுவாமி திருக்கோயில்: ராவணனின் சகோதரன் விபிஷ்ணன் இவ்விடத்தில்தான் ராமரிடம் வந்து சரணடைந்தார்.
மேலும் ராமர் பாதம், ஹனுமார் கோயில், பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில், மிதவை கல், உத்திரகோச மங்கை, திருப்புல்லாணி, தேவிப்பட்டிணம் என ஏராளமான கோயில்கள் நிறைந்திருக்கிறது.
பாம்பன் பாலம்: ராமேஸ்வரம் தீவை இந்தியாவுடன் இணைக்கும் மிக நீண்ட பாலம். இது கடலின் மீது 2.3 கிமீ நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. ரயில் பாலம், தரைப்பாலம் இரண்டுமே இருந்தாலும் ரயில் பாலத்தையே பாம்பன் பாலம் என்று குறிப்பிடுகின்றனர். பாம்பன் ரயில் பாலம் 6,776 அடி நீளமானது. 1914 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இப்பாலத்தின் கீழே கப்பல்கள் செல்வதற்கு வசதியாக பாலத்தின் நடுப்பகுதியை உயரத் தூக்குவதற்கு ஏற்றவாறு வடிவமைத்துள்ளனர்.
ராமேஸ்வரத்தின் கடலழகையும் குறிப்பிட்டாக வேண்டும். இங்கே அலைகளே கிடையாது. இங்குள்ள அலைகள் 3செமி உயரத்திற்கு மட்டுமே எழும்பும். இதுப் போல இயற்கை எழில் மிகுந்த கோயில்களால் சூழ்ந்த அழகிய ராமேஸ்வரத்திற்கு நாமும் ஒருமுறை சென்று வரலாமே.
- maraththamilar senai