-புதுமலர் பிரபாகரன்
“சுதந்திரமானது இன்னும் களத்தடி நெல்லாகவே இருக்கிறது. கருக்காய், கரும்புழுதி, இடையிடையே வைக்கோல், செத்தையெல்லாம் நிரம்பியதாகவே இருக்கிறது. இது அப்படியே களஞ்சியத்திற்கு போய் சேருமா? சேராது. சேரக்கூடாது. காலம் வரும்போது காற்றில் தூற்றி கழிக்க வேண்டியவற்றைத் தானாகவே கழித்து விட வேண்டும்.”
“சுதந்திரமானது இன்னும் களத்தடி நெல்லாகவே இருக்கிறது. கருக்காய், கரும்புழுதி, இடையிடையே வைக்கோல், செத்தையெல்லாம் நிரம்பியதாகவே இருக்கிறது. இது அப்படியே களஞ்சியத்திற்கு போய் சேருமா? சேராது. சேரக்கூடாது. காலம் வரும்போது காற்றில் தூற்றி கழிக்க வேண்டியவற்றைத் தானாகவே கழித்து விட வேண்டும்.”
-தேவர் திருமகனார்.
உலகின் மிகப்பெரிய
ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம் என்கிற பெருமிதங்களுக்கு மத்தியில் சுதந்திர
இந்தியாவில் பிறந்திருந்தும்,
மக்கள் செல்வாக்கு அமைந்திருந்தும் தம் வாழ்நாள் முடிவதற்குள் ஒருமுறையேனும்
சட்டமன்ற: நாடாளுமன்ற அவைகளுக்குள் நுழைந்து விட முடியாதா என்கிற ஏக்கத்துடன் தமது
அரசியல் சுதந்திரத்தின் எல்லை குறித்த
எவ்வித விவாதமுமின்றி கடந்து செல்லும் தலித்துகள் அல்லாத 83சதவிகித இந்திய
பிற்படுத்தபட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பெரும்பான்மை
மக்களும், கிருத்துவ, முஸ்லீம் சிறுபான்மை மக்களும் மிகக்சரியாக தமது எதிர்கால அரசியல் குறித்த
பார்வைகளை / உரிமைகளை மீட்டெடுக்க வேண்டிய தருணம் இது.
இந்திய அரசியலமைப்பை ஒருங்கிணைத்த அம்பேத்கார்கூட
தனித்தொகுதி ஒதுக்கீடுகள் பத்தாண்டுகளுக்கு இருந்தால் போதுமென்றுதான் கோரிக்கை
வைத்தார். அடிமை இந்தியாவில் முஸ்லீம்கள், கிருத்துவர்கள், ஐரோப்பியர்கள், ஆங்கிலோ இந்தியர்கள் மற்றும்
தலித்துகள் என அனைவருக்குமே இட ஒதுக்கீடுகள் கொடுக்கப்பட்டன. கால நீட்சியில் அவை
ஒவ்வொன்றாக நீக்கப்பட்டுவிட்டன. ஆனால், சுதந்திர இந்தியாவில் சகல
அறங்களையும் துடைத்துவிட்டு தலித்துகளுக்கு மட்டுமே இந்த சலுகை நீட்டிக்கப்பட்டு
வருகிறது.
தலித் என்கிற அடையாளத்தின் பிறிதொரு முகமாக
நிரந்தர வாய்ப்புகள் என்பது வலுவாக கட்டமைக்கப்பட்டு அனைத்து அரசு அலுவலகங்களும்
எஸ்.சி./எஸ்.டி ஊழியர்களால் நிரம்பி வழியும் இன்றைய சூழலிலும், அரசியலில் முழுமையான ஆதிக்கசக்தியாக தலித்துகள் மாறிவிட்ட நிலையிலும் தனித்தொகுதி அரசியல் நீக்கப்படாமல், காலநீட்டிப்பு செய்யப்பட்டு நூற்றாண்டுகளை
நிறைவு செய்ய உள்ளது. அதனினும் கொடுமையாக பல தொகுதிகள் தொடர்ந்து 53 வருடங்களுக்கும் மேலாக தனித்
தொகுதிகளாகவே இருந்து வருவதும், அவை மீண்டும் மீண்டும்
பொதுத்தொகுதிகளாக மாற்றப்படாமல் தனித்தொகுதிகளாகவே நீட்டித்து வரப்படுவதும்
வாடிக்கை ஆகிவிட்டது.
சமூக நீதியின் பெயரால் 17
சதவிகிதத்திற்கும் கீழான தலித் மக்களுக்காக 83 சதவிகிதத்திற்கும் மேலான
பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் அடிப்படை அரசியல் உரிமைகளை தொடர்ந்து 100 ஆண்டு
காலத்திற்கும் மேலாக முடக்கி வைப்பது எப்படி நியாயம் ஆகும்?.
குறிப்பாக முக்குலத்து மக்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய தொகுதிகள் தொடர்ந்து
தனித்தொகுதிகளாகவே வைக்கப்பட்டு வருகிறது. தேவர் சமூக மக்கள் பெருந்திரளாக
வாழக்கூடிய சங்கரன் கோவில் தொகுதி நகராட்சி, சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகிய மூன்றுமே ‘ரிசர்வ்’ தொகுதிகளாக வைக்கப்பட்டு, இந்த தொகுதியில்
வாழக்கூடிய பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் அடிப்படை அரசியல் கனவுகளை தகர்த்தெறிந்து, ஜனநாயக உரிமைகளை பெற்றுவிடாமல் தடுத்து வருவதுதான் ஒருவேளை சமத்துவ சிந்தனையாகுமோ?.
சாதி
முரண்களும், தீண்டாமைகளும் தலைவிரித்து ஆடுவதாக தமது
சுயஅரசியல் லாபத்திற்காக காட்சிபடுத்தும் ‘கம்யூனிஸ்டு’கள் உள்ளிட்ட யாவரும் இதிலே ‘கள்ள மெளனம்’ காப்பது இயல்பே.
இந்திய அரசியலமைப்பு
சட்டப் பிரிவு 82,
தொகுதிகளின் எண்ணிக்கை, எல்லை மற்றும் தனித்தொகுதிகளின்
மறுசீரமைப்புக்கான வழி கோலுகிறது. இதன் அடைப்படையில் 1952 இல் தொகுதி
மறுசீரமைப்புச் சட்டம் முதன் முதலாக கொண்டுவரப்பட்டது. அதன்பிறகு 1962, 1972 ஆண்டுகளில் இதற்கென தனியே சட்டம் இயற்றப்பட்டது. முறையாக 10
ஆண்டுகளுக்கு ஒரு முறை சீரமைக்கப்பட்ட தொகுதிகள் முப்பது ஆண்டுகள் கழித்து 2001 ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில்
நாடாளுமன்ற- சட்டமன்ற தொகுதிகளின் எல்லைகளை வரையறை செய்வதற்காக, இந்திய நாடாளுமன்றத்தில் தொகுதிசீரமைப்பு சட்டம் 2002 (Delimitation
Act 2002), தொகுதி சீரமைப்பு (திருத்த)சட்டம் 2003, ஆகிய இரண்டு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு ஓய்வுபெற்ற உச்சநீதி மன்ற
நீதிபதி குல்தீப் சிங் தலைமையில் 4.7.2002 அன்று தொகுதி சீரமைப்பு ஆணையம் அமைக்கப்பட்டது.
மத்திய தலைமை தேர்தல்
ஆணையர், மாநில தலைமை தேர்தல் ஆணையர் உள்ளிட்ட ஒவ்வொரு
மாநிலத்தையும் சேர்ந்த ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும்,
ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஆணையத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி
தமிழ்நாட்டின் மக்கள் தொகை 6,24,05,679 ஆகும். இதனை தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்ற
தொகுதிகளான 234 ஆல் வகுத்து ஒவ்வொரு சட்டமன்றத்தின் சராசரி மக்கள் தொகை 2,66,690
என்று முடிவு செய்த அறிவு ஜீவிகள் நகர மக்களையும், கிராம மக்களையும் பிரித்தறிய முடியாமல் போனது வெட்கக்கேடு. ஆயினும்.
சராசரியின் அடிப்படையில் வரையறை கொண்டுவரப்பட்டு, அதன்
அடிப்படையில் தொகுதிகள் சீரமைக்கப்பட்டன. தமிழகத்தில்
46 சட்டமன்ற தொகுதிகளும், 7 நாடாளுமன்ற தொகுதிகளும்
தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன. கடந்த
தேர்தலில் உள்ளாட்சிகள் சுழற்சி முறையில் மாற்றியமைக்கப்பட்டதைப் போல நாற்பது
நாற்பத்தி ஐந்து வருடங்களுக்கும் மேலாக
தனித்தொகுதிகளாக இருந்து வரும் 24 சட்டமன்ற தனித்தொகுதிகளும் சுழற்சி முறையில் பொதுத்தொகுதிகளாக
மாற்றப்படும் என நினைத்திருந்த வெகுமக்களின் அரசியல் எழுச்சிகளையும், உரிமைகளையும் முடக்கும்
விதத்திலேயே மாற்றப்படாமல் மீண்டும் ‘அப்படியே’ ஒதுக்கப்பட்டு உள்ளது.
கோவில்களிலும், குடியிருப்புகளிலும்,
குளத்தடிகளிலும், டீக்கடைகளிலும் எங்களை தனியாக
ஒதுக்காதீர்கள் என கோசமிடுபவர்கள் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு ‘தனித்தொகுதி’ கேட்கிறார்கள். அதுவும் நூற்றாண்டுகள் ஒரேதொகுதியை குத்தகை போல. 1920-இல்
நியமன உறுப்பினராக ஐந்து தலித்துகள் நியமிக்கப்பட்டதில் ஆரம்பித்து சுமார் 95 வருடங்களுக்கு மேலாகியும் ‘தனித்தொகுதி’ கண்ணாமூச்சி விளையாட்டு
முடிந்தபாடில்லை.
தொகுதி
சீரமைப்பு சட்டம் 2002 இன் உட்பிரிவு 9(1) (c) இன் படி மாநிலம் முழுவதும் ரிசர்வ் தொகுதிகள் எல்லா மாவட்டமும்
பிரதிநிதித்துவம் பெறும் வகையில் வரையறை செய்து, எந்த
தொகுதியில் தலித்துகள் அதிகமோ அந்த தொகுதியை அவர்களுக்கு தனித்தொகுதியாக வழங்க
வேண்டும் என்று கூறுகிறது. இது ஒரு தவறான
உட்பிரிவு ஆகும். இராமநாதபுரம், தேனி,
சிவகங்கை போன்ற நான்கு தொகுதிகள் கொண்ட மாவட்டங்களில் தலா ஒரு தொகுதியை
ஒதுக்கிவிட்டு, 16 தொகுதிகள் கொண்ட சென்னை, கோவை மாவட்டங்களில் வெறும் இரண்டு தொகுதிகளை மட்டுமே ஒதுக்கி உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அதுவும் இல்லை. இது எப்படி தலித் மக்களுக்கு அங்கீகாரம்
வழங்குவது ஆகும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில்
தலித் சமூகத்தினரின் மக்கள் தொகை சுமார் 68 ஆயிரம் மட்டுமே உள்ளது. சட்டமன்ற
தொகுதி சராசரியின் பாதிக்கு குறைவாக இருப்பதால் தனித்தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை
என்கிற காரணம் ஏற்கத்தக்கதா?. இது எப்படி பரவலான ‘தலித் முன்னேற்றத்திற்கு’ வழியமைக்கும் என்பது
குறித்த சிந்தனையற்ற தலித்தியவாதிகள் திராவிட கட்சிகளிடம் அணிசேர்வது பற்றிய
கவலைகளிலேயே தேய்ந்து போவது வருந்தத்தக்கது.
அரசியல் பொருளாதார
நிலைகளில் அரிசன மக்கள் உயர்வடைய வேண்டும்
என்கிற நோக்கில் கொண்டுவரப்பட்டதாக சொல்லப்படும்
தனித்தொகுதிகள் சலுகையின் மூலமாக கிருஷ்ணராயபுரம்,
பரமக்குடி, மானாமதுரை, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் உள்ளிட்ட தனித்தொகுதிகளில் குறிப்பிட்ட ஒருசிலர் மட்டும்
மூன்றுக்கும் மேற்பட்ட முறை எம்.எல்.ஏ
ஆவதைத் தவிர வேறு எந்த நன்மையும் நடக்கவில்லை என்பதுதான் நடைமுறை உண்மையாக இருக்கிறது. பெரும் செல்வந்தர்களாக
விளங்கக்கூடிய ‘சிலர்’ திராவிட / தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளாக ‘மாறிமாறி’ தனித்தொகுதிகளை கைப்பற்றுவது எப்படி அனைத்து தலித் மக்களுக்கும் பிரதிநிதித்துவம்
வழங்குவதாக அமையும்.
குறிப்பாக, பரமக்குடி தனித்தொகுதியில் சிறைமீட்டான் ஐந்து முறை போட்டியிடும்
வாய்ப்பு பெற்று இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார். டாக்டர் சுந்தரராஜ் ஐந்து முறை
போட்டியிட்டு மூன்று முறையும், உக்கிரபாண்டியன் நான்கு முறை
போட்டியிட்டு ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளனர். கே.வி.ராக்கன் இரண்டு முறை
போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார். அவரது மகன் கே.வி.ஆர்.ராம்பிரபு மூன்று முறை
போட்டியிட்டு இரண்டு முறை வெற்றி அடைந்திருக்கிறார்.
அதைப்போல, மானாமதுரை தனித்தொகுதியில் கே.பாரமலை ஆறு முறையும்,
கடலாடியில் ஒரு முறையும் போட்டியிடும் வாய்ப்பை பெற்று மூன்று முறை
தேர்வாகியுள்ளார். வி.எம்.சுப்பிரமணியன் நான்கு முறை போட்டியிட்டு மூன்று முறை
வெற்றி பெற்றுள்ளார். தற்போது எம்.குணசேகரன் தொடர்ந்து அதிமுகவால் போட்டியிடும்
வாய்ப்பை பெற்றுவருகிறார். 1996 தேர்தலில் தோல்வியை தழுவியவர் தற்போது இரண்டாவது
முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஆகியுள்ளார்.
வாசுதேவநல்லூர் தனித்தொகுதியில்
ஆர்.கிருஷ்ணன் ஆறு முறை போட்டியிட்டு இரண்டு முறையும், ஆர்.ஈஸ்வரன் ஆறு முறை போட்டியிட்டு ஐந்து
முறையும் வெற்றி அடைந்துள்ளனர். சங்கரன் கோவில் சட்டமன்ற தனித்தொகுதியில் எஸ்.தங்கவேலு
ஐந்து முறை போட்டியிட்டு ஒருமுறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். மறைந்த முன்னாள்
அமைச்சர் சொ.கருப்பசாமி தொடர்ந்து நான்கு முறை அதிமுகவால் வாய்ப்பளிக்கப்பட்டு
நான்கு முறை வெற்றி பெற்றுள்ளார். ஆக அரசியல் கட்சிகள் தங்களுக்கு விசுவாசமிக்க ‘நபர்களை’ மட்டுமே தேர்தல்களில் முன்னிறுத்தி
வந்திருப்பது ‘தலித் சமூக முன்னேற்றம்’
சார்ந்து அல்ல என்பது உறுதியாக்கப்பட்டிருக்கிறது.
தனித்தொகுதிகளில் முதல்
தலைமுறை வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட வேண்டும். வெற்றி பெற்றவர்கள் மீண்டும்
தேர்தலில் நிற்க ‘பொதுத்தொகுதி’களை நாட வேண்டும் என்கிற
நிலையை சட்டப் பாதுகாப்பாக தலித்துகளுக்கு வழங்கிட அரசும், தேர்தல் ஆணையமும் தயாராக உள்ளதா? இது போன்ற ஏற்பாடுகள் தான் ஏழை, எளிய தலித் மக்கள்
வாழ்க்கைக்கு உண்மையான உயர்வை வழங்குவதாக
அமையும். இல்லையெனில் திராவிட கட்சிகளுக்கு ‘மேஜை தட்டும்’ ஆட்களை உற்பத்தி செய்யும் சந்தையாகவே தனித் தொகுதிகள் கருதப்படும்.
அதைப்போல, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தன்னிச்சையானது என்பது பலநேரங்களில் சந்தேகத்திற்கு உள்ளாகிறது. குறிப்பாக முக்குலத்து
மக்கள் பெரும்பான்மையாக வாழும் பரமக்குடி மானாமதுரை அதைப்போல வாசுதேவநல்லூர்
சங்கரன்கோவில் ஆகிய அருகருகே உள்ள தொகுதிகள் தனித்தொகுதிகள் ஆக்கப்பட்டு, நீண்டகாலமாக அப்படியே வைக்கப்பட்டு உள்ளன. தேவர் சமூக அரசியல் எழுச்சியை
ஒடுக்கவேண்டும் என்கிற கருத்தியல் கொண்ட ‘வந்தேறி’ தலைமைகளின் விருப்பபடியே அனைத்தும் மாற்றியமைக்கப் படுகின்றன.
தொகுதி சீரமைப்பு ஆணையத்தின்
ஒருங்கிணைப்பு உறுப்பினர்களாக இடம்பெற்றிருக்கும் அரசியல் கட்சிகளின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம்தான்
தமிழகத்தின் ஆளும் சக்திகளாக இருக்கிறவர்கள்
தங்களுக்கு சாதகமான வகையில் தொகுதிகளை சீரமைத்துக் கொள்ளவும், நீக்கிக் கொள்ளவும் செய்கிறார்கள்.
தற்போதைய சீரமைப்பிலும் எந்த சமூகமும்
வாக்கு பெரும்பான்மை அடைந்துவிடாதபடி தொகுதிகள் சீரமைக்கப்பட்டு உள்ளன. திருவாடானை
கே.ஆர்.ராமசாமி போன்ற மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர்கள் கூட தொகுதி சீரமைப்பால் வாக்குகள்
துண்டாடப்பட்டு தோல்வி
அடைந்துள்ளனர். தொடர்ந்து 47 ஆண்டுகளாக
பரமக்குடி தனித்தொகுதியாக வைக்கப்பட்டிருப்பதால் முக்கிய பிரமுகரான சுப.தங்கவேலன்
சொந்த தொகுதியில் போட்டியிட இயலாமல் கடலாடியிலும், திருவாடானையிலும் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது
கடலாடி தொகுதியும் நீக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சி சார்புடையவர்கள் அந்தந்த
கட்சிகளின் ‘பண பலம்’ ‘படை பலம்’ சார்ந்து தொகுதிகள் மாறி நிற்க இயலும்.
அரசியல் கட்சிசாராத சமூக சேவகர்கள், பொதுநலவாதிகள் தேர்தல் பங்களிப்பு செய்வதை ஆணையம் மறைமுகமாக
தடுத்து, சுயேட்சை வேட்பாளர்கள்
வெற்றிபெறுவதை முற்றிலுமாக அப்புறப்படுத்தியுள்ளது.
பரமக்குடி தொகுதியில் 1957 ல் கே.ராமசந்திரன் என்பவர் சுயேட்சையாக
போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்து வெற்றிபெற்றார் என்பது
குறிப்பிடத்தக்கது. 1996 சட்டமன்ற பொதுத்தேர்தலில் பரமக்குடி தனித்தொகுதியை
பொதுத்தொகுதியாக மாற்ற வலியுறுத்தி, கடுமையான எதிர்ப்பை
பதிவு செய்திட குறிப்பிட்ட சில சமூகங்கள் ஒன்றிணைந்து முனியசாமி என்பவரை ‘பொது
சுயேட்சை வேட்பாளராக’ களமிறக்கின. அந்த தேர்தலில் தொடர்ந்து
இரண்டு முறை தொகுதியை தக்கவைத்திருந்த அன்றைய ஆளும்கட்சி எம்.எல்.ஏ,
டாக்டர் சுந்தரராசை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை சுயேட்சை கைபற்றினார். சுந்தரராஜ்
தோல்வியடைந்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். அன்றிலிருந்து இன்றுவரை
பரமக்குடி தொகுதியை ‘பொதுதொகுதியாக’
மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை பலமாக எழுப்பப்பட்டு வருகிறது.
வெகுஜன விரோதத்தை வளர்க்கும் முகமாகவே
தொகுதிகளின் நீக்கமும்,
சீரமைப்பும் பல தருணங்களில் நடந்தேறியுள்ளது. பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர்
அவர்கள் தேர்தல் களத்தில் தோல்வியை சந்தித்திராத ‘உண்மை
வெற்றியாளர்’ ஆவார். அவரின் நாடாளுமன்ற, வீரியமிக்க செயல்பாடுகளை தவிர்த்திட, தேவரை வெற்றி
பெறாமல் செய்திட, 1957 ஆம் ஆண்டில் ஆறு சட்டமன்ற தொகுதிகளை
உள்ளடக்கிய அருப்புக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி ஒன்பது தொகுதிகளை உள்ளடக்கிய
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியாக விரிவாக்கப்பட்டது.
1962 ல் பா.பிளாக் வேட்பாளர் பெருமாள்
வெற்றிபெற்ற திருச்சுழி தொகுதியும், தேவரின் திருத்தொண்டர் ஏ.ஆர்.பெருமாள் 1967,1971 ஆகிய
தேர்தல்களில் வெற்றிபெற்ற காரியாபட்டி தொகுதியும்,
அதைப்போலவே,
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் திமுக சார்பில் 1967,1971 இல் வெற்றிபெற்ற ‘பரங்கிமலை’
தொகுதியும் கலைக்கப்பட்டுள்ளன. இப்போதும்
கூட முன்னணித்தலைவர்கள், மக்கள் செல்வாக்குள்ளவர்கள்
போட்டியிடாதபடி தொகுதிகள் அமைக்கப்பட்டே வருகிறது.
‘நாங்கள்
தாழ்த்தப்பட்டவர்கள் அல்ல’ என்கிற முழக்கத்தை ‘பள்ளர்’ சமூக மக்கள் பரவலாக எழுப்பி வருகையில்
தாழ்த்தப்பட்டவர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் அவர்களுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு
வருவது முறையற்றது ஆகும்.
“நீயும் உடன்படாவிடில், நீ தாழ்ந்தவன் என்ற உணர்வை உன்மேல்
எவராலும், எங்கும், எப்படியும்
சுமத்தமுடியாது." என்கிற எலினார்
ரூஸ்வெல்ட் கூற்றுக்கு மாறாக
காலந்தோறும் பெயர் மாற்றத்திற்கு உட்பட்டுவந்த அட்டவணை சாதியினர் தற்போது
அப்பட்டியலில் இருந்து நீக்க வலியுறுத்தி வருவது வரவேற்கத்தக்கது. மேலும், பரவலான எதிர்ப்புக்கு உள்ளாக்கப்பட்டு வரும் தனித்தொகுதிகளை நீக்குவது
குறித்த ஆய்வினையும், கருத்து கேட்புகளையும் நாடு முழுவதும்
அரசு உடனடியாக நடத்திட வேண்டும் என்கிற வெகுமக்களின் குரலுக்கு மதிப்பளித்து பொது
வாக்கெடுப்பு நடத்திட வேண்டும்.
1955ல் பம்பாயில் கூடிய தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பின் செயற்குழு தேர்தல் முறையில் உள்ள இடஒதுக்கீட்டை இரத்து செய்ய வேண்டும் என தீர்மானம் இயற்றியது.
விடுதலைச் சிறுத்தைகள் தனித்தொகுதி முறை தேவையில்லை என்று போராடி வருகிறார்கள்
இந்தியாவின் தலைமைப் பதவியில் தலித் சமூகத்தவர்
அமர்ந்துவிட்டால் தனித்தொகுதி முறைகள் நீட்டிக்கப்படாது என்பது போன்ற தகவல்களும்
முந்தைய காலங்களில் பரப்பப்பட்டன. கே.ஆர்.நாராயணன் குடியரசுத்தலைவராக நியமிக்கப்பட்டதும் ‘தனித்தொகுதி ஒதுக்கீட்டு சலுகைகள்’ முற்றுப்பெற்றுவிடும் என்பதான கருத்துகளும் வெகுவாக பேசப்பட்டது.
ரிசர்வ் தொகுதிகளை எதிர்ப்பது எங்கள்
நோக்கம் அல்ல. அந்த மக்கள் எத்தனை ஆண்டுகள் நீடிக்க வேண்டும் என்று
விரும்புகிறார்களோ அத்தனை ஆண்டுகாலம் இருந்துவிட்டுக்கூடப் போகிறது. ஆனால் அவைகள்
பத்தாண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி அடிப்படையிலாவது மாற்றியமைக்கப்பட வேண்டும்
அல்லவா?
பெருமிதம் கொள்ளத்தக்க
பண்டைய போர்மரபினர் சுதந்திரத்தின் பெயரால் அடிமையாக்கப்பட்டு, ஆட்சியும்,
சொத்துகளும் பறிக்கப்பட்டு அனைத்து துறைகளிலும் ஒதுக்கப்பட்டவர்களாக மாறிய
பின்பும் ‘ஆதிக்க சாதியினர்’ என்கிற
போலி முத்திரையோடு வரலாற்று பக்கங்களிலிருந்து துடைத்தெறியப் பட்டுக்
கொண்டிருக்கும் அவல சதியை ‘வந்தேறி ஆட்சியாளர்கள்’ மிகவும் தந்திரமாக நிறைவேற்றி வருகின்றனர்.
தமிழர் என்கிற இன உணர்ச்சி
எழுந்து விடாதபடி தனித்தொகுதிகள் பகை உணர்ச்சியை வளர்த்து வருகிறது.
தேர்வுச்சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு. ஆனால்,
தேர்ந்தெடுக்கப்படுவதற்கான சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது.
நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில்
தொகுதிகள் மாற்றியமைக்கப்பட இப்போதே மத்திய அரசு துரித நடவடிக்கை எடுத்தாக
வேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்டம் எத்தனையோ முறை திருத்தி அமைக்கப்பட்டு
உள்ளது. இப்போதைய அரசேனும் வெகுமக்களின் நலனில் அக்கறை செலுத்துமா? அல்லது தலித் வாக்குவங்கி கணக்குகளில்
மூழ்கி விடுமா?
1947 க்குப் பிறகு சுதந்திர இந்தியாவில் பிறந்த எந்த
பிற்படுத்தப்பட்ட,
சிறுபான்மை மக்களும் எம்.எல்.ஏ ஆகி விடாதபடி தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக
தனித்தொகுதியாகவே நீடித்து வரும் 24 தொகுதிகளையும் சுழற்சி முறையில் மாற்றியமைத்து
சிறிது, பெரிது என்கிற இலக்கு இல்லாமல் அனைத்து
தொகுதிகளிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவம் பெறுகிற வகையில் தனித்தொகுதிகள் அமைந்தால்
மட்டுமே உண்மையான வளர்ச்சியாக அது அமையும்.
“நல்ல காலம் பிறக்கும் என்ற நம்பிக்கை தவிர நலிவோர்க்கு
வேறு மருந்து கிடையாது.
-ஷேக்ஸ்பியர்