★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Tuesday, April 17, 2012

தமிழ்நாட்டில் கல்வித்துறை சீர்கேடு அடைந்துள்ளது

தமிழ்நாட்டில் கல்வித்துறை எந்த அளவுக்குச் சீர்கேடு அடைந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ள திருவண்ணாமலையில் ஒரு தனியார் பள்ளியில் எஸ்எஸ்எல்சி தேர்வுக்கூடத்தில் நடத்தப்பட்ட சோதனையும் அதில் கிடைத்துள்ள சான்றுகளுமே போதுமானவை. ஒரு தனியார் பள்ளியில், பொதுத் தேர்வில் பலரும் முறைகேடாகத் தேர்வு எழுதி வருவதாக மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ராவுக்கு மின்அஞ்சல் வந்ததையடுத்து, அவர் திடீர் ஆய்வு நடத்தியதில் கிடைத்த சான்றுகள் அதிர்ச்சி தருபவை. 


                            கணிதத் தேர்வு வினாக்களுக்கான விடைகளை அலுவலகத்தில் ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டிருக்கிறார் ஒருவர். 20 பிரதிகளை ஆட்சியர் கைப்பற்றுகிறார்.  8 தேர்வு அறைகளின் கண்காணிப்பாளர்களிடம் கணித வினாக்களுக்குரிய விடைகளின் துண்டுத்தாள் (பிட்) இருக்கிறது. எப்படி வந்தது? பதில் இல்லை. எந்த மாணவர்களிடமிருந்து பறிமுதல் செய்தீர்கள்? பதில் இல்லை.  8 ஆசிரிய-ஆசிரியைகளின் செல்போன்களிலும் தேர்வு நேரத்தில் ஏராளமான அழைப்புகள் பதிவாகியிருந்தன.  ஓர் ஆசிரியரின் சட்டைப்பையில் மாணவரின் பெயர், தேர்வு எண், ரூ.200 பணம் இருந்துள்ளது.  அதிர்ச்சி அளிக்கும் இந்தச் சம்பவத்தில் இந்தத் தனியார் பள்ளிக்குத் துணை போய் இருப்பவர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்!

                            இத்தகைய முறைகேடுகள் முதலில் அரசுப் பள்ளிகளில்தான் மிகச் சிறிய அளவில், யாருக்கும் பாதிப்பில்லை என்ற அளவில் தொடங்கின. கிராமப்புறப் பள்ளிகளில் ஆசிரியர்கள் வகுப்புக்கே வராமலும், (எஸ்எம்எஸ் வருகைப் பதிவு என்பது இன்னொரு மோசடி) பாடம் நடத்தாமலும், பேருந்து நேரத்துக்கு ஏற்ப வகுப்புகளை ஆசிரியர்கள் "கட்' அடித்துவிட்டுப் போவதும் நடந்துகொண்டிருக்கின்றன.  கற்பித்தல் பணியில் ஆசிரியர்களின் உழைப்பு இல்லாவிட்டால், மாணவர்கள் மட்டும் எப்படி மதிப்பெண் பெற முடியும்? மாணவர்கள் தேர்ச்சி பெறாவிட்டால், எந்தப் பாடத்தில் தேர்ச்சி குறைந்துள்ளதோ அந்த ஆசிரியருக்கு இடமாற்றம் வரும். ஆகவே, ஒரு மதிப்பெண் வினாக்களுக்கான விடைகளை மட்டும் ஆசிரியர்களே சொல்லிக் கொடுத்துவிடுவது வழக்கமாக இருந்தது. இந்த விடைகளில்கூட எது சரி என்று தெரியாமல், செல்போன் மூலமாக வேறொரு ஊரில் தேர்வு அறையில் உள்ள ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து, சொல்லும் வழக்கமும் இங்கேதான் தொடங்கியது.  செல்போனில் ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண் வினாக்களுக்கு மட்டுமே விடை கேட்டு வாங்கி, மாணவர்கள் 40 விழுக்காடு பெற்று தேர்ச்சி பெறச் செய்வதால், இவர்கள் சிறந்த மாணவர்களுக்குப் போட்டியே இல்லை என்பதால், இதனை மாவட்டக் கல்வி அலுவலர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள் தங்களுக்குத் தெரிந்திருந்தாலும் அவற்றைக் கண்டும் காணாமல் இருந்தார்கள். 

                           இத்தகைய முறைகேடுகள் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள், அரசியல்வாதிகளின் பினாமிகள் நடத்தும் தனியார் பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே நடக்கத் தொடங்கிவிட்டன.  பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளிலும் இதே முறைகேடுகள்தான். கண்காணிப்பாளருக்கு பிரியாணி மற்றும் கவர் உண்டு. இதில் தனியார் பள்ளிகளில் சிறப்பாகக் கவனித்தால், அரசுப் பள்ளிகளில் அதன் தரத்துக்கேற்ப கவனிக்கிறார்கள். எங்கே நேர்மையும் ஒழுக்கமும் கற்றுத் தரப்பட வேண்டுமோ, அங்கே ஊழலும் முறைகேடுகளும் அரங்கேற்றப்பட்டன.  வேதியியல் செய்முறைத் தேர்வில், பாக்கெட்டைத் திறந்தால் ஆய்வு செய்ய வேண்டிய உப்பின் பெயர் எழுதியிருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

                          எல்லா மாணவர்களுக்கும் செய்முறைத் தேர்வில் 40-க்கு மேல்தான் இருக்க வேண்டும் என்பதில் கவனமாகச் செயல்படுகிறார்கள். தனியார் பள்ளிகளில் 50-க்கு 50 கொடுத்து, எழுத்துத் தேர்வில் இன்னும் கூடுதல் மதிப்பெண் காட்டப் பார்க்கிறார்கள்.  இதிலும்கூட, ""மாணவர்கள் பாவம், இதில் மதிப்பெண் வாங்கியாகிலும், எழுத்துத்தேர்வில் குறையும் மதிப்பெண்ணை ஈடுசெய்துகொள்ளட்டும்'' என்று கல்வி அதிகாரிகளும் இரக்கம் காட்டுகிறார்கள். இதிலெல்லாமா கருணை காட்டுவது? பிறகு கல்வியின் தரத்தைப் பற்றி பேச முடியுமா?

                                 இப்போது மாணவர்கள் தேர்ச்சி மட்டுமே பள்ளிகளின் குறிக்கோளாக இல்லை. 100 விழுக்காடு பெற்று, தலைசிறந்த பள்ளி என்பதைக் காட்டிக் கொள்வதற்கான முறைகேடாக இது தனியார் பள்ளிகளில் நுழைந்திருக்கிறது. காரணம் என்ன? தங்கள் புகழைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும், கணிதப் பாடத்தில் தமிழக மாணவர்கள் அனைவரும் திணறியபோது எங்கள் பள்ளி மாணவர்கள் 100-க்கு 100 வாங்கிவிட்டார்கள் என்று பெருமை பேச வேண்டும். அதற்காக எந்தவித முறைகேடுக்கும் தனியார் பள்ளிகள் தயாராகிவிட்டன. கல்விக் கட்டணத்தை மிக மிக அதிகமாக உயர்த்தவும் அதை நியாயப்படுத்தவும் இவை அவர்களுக்குத் தேவையாக இருக்கின்றன.  

                       அப்படியானால், உண்மையாகவே படித்து தேர்வு எழுதும் மாணவர்கள் கணிதத் தேர்வில் 100 மதிப்பெண் பெறமுடியாதவர்களாக இருக்க, யார், யாரோ 100 விழுக்காடு மதிப்பெண் பெறுவார்கள். இது எத்தகைய கீழ்த்தரமானது என்பதைக் கல்வி நிறுவனங்களோ அல்லது கல்வித் துறையோ சிந்திக்கவே இல்லை. 

                    இவர்களது வியாபாரப் போட்டியில் இவர்களது பந்தயக் குதிரை வெற்றி பெற எந்த முறைகேட்டிலும் ஈடுபடுவார்கள். இதற்கு கல்வித் துறை அதிகாரிகளின் அலட்சியமும், அரசியல்வாதிகளின் ஆதரவும்தான் காரணம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

                         இந்த முறைகேட்டுக்குத் துணைபோயிருக்கும் 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், இவர்களுக்காக ஆசிரியர் உலகம் போராடும் என்பதுதான் அதைவிடக் கேவலமான அவலம். ஆசிரியர் தொழிலுக்கே இழுக்குத் தேடித் தந்திருப்பவர்களைத் தங்களது சக ஆசிரியர்கள் என்று சகதாபத்துடன் பார்ப்பவர்கள்தான் அதனினும் இழிந்தவர்கள் என்று யார் அவர்களுக்குப் புத்தி புகட்டுவது?  

                              ஆசிரியர்களும் அவர்களது குடும்பங்களும் தமிழ்ச் சமூகத்தின் அங்கமல்லாமல் போய் விடுவார்களா? இப்படியே போனால், தமிழ்ச் சமூகம் என்ன ஆகும்? வினை விதைத்தவன் வினை அறுப்பான், வேறென்ன?
                      
-நன்றி-தின மணி , maraththamizhar senai