சிவகங்கை மாவட்டம்
கரைக்குடியில் இருந்து தேவகோட்டை நோக்கி செல்லும் வழியில் முட்புதர்களுக்குள்
சிதைந்தபடி கம்பீரமாக காட்சியளிக்கிறது சங்கரபதி கோட்டை. இப்போது ஆள்
நடமாட்டமின்றி குடிமகன்களின் புகலிடமாக இருந்துவரக் கூடிய இக்கோட்டையானது, பல வரலாற்று வீரம் மிகுந்த
நிகழ்வுகளுக்கு சாட்சியாக நின்றுகொண்டிருப்பதை நாம் மறந்துவிட இயலாது.
பதினாராம் நூற்றாண்டைச்
சார்ந்த இக்கோட்டை மதுரை திருமலை நாயக்கர் மகாலைப் போன்ற அளவில் பெரிய தூண்களையும், கட்டிட அமைப்பையும்
கொண்டதாகும். கட்டிடம் மற்றும் தூண்கள் சுடாத செங்கற்கல்,
கருப்பட்டி, கடுக்காய் மற்றும் முட்டையின் வெள்ளை கருவை
கலந்து கட்டப்பட்டுள்ளன. சுமார் ஐம்பது ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்கோட்டைக்குள்
குளம்போல பெரிய பள்ளம் வெட்டப்பட்டு அதற்குள் போர்ப்பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.
இராமநாதபுரம் மன்னர்
சேதுபதிக்கு தொண்டியை சார்ந்த இஸ்லாமியர் ஒருவர் இருநூறு குதிரைகளைப் பரிசாகக்
கொடுத்துள்ளார். அந்த குதிரைகளை தமது படைப்பிரிவில் இணைத்து பராமரிக்க; பயிற்சி அளிக்க திறமையான ஆள்
தேடினார் சேதுபதி மன்னர். குதிரைகளை பராமரிக்க ஹைதர் அலி தமது தளபதிகளில் ஒருவரான
சங்கரபதியை அனுப்பி வைத்துள்ளார். அவரது நினைவாகவே அக்கோட்டையானது சங்கரபதிகோட்டை
என வழங்கலாயிற்று.
மன்னர் சேதுபதி தன்னுடைய
மகளான, வரலாற்று நாயகி வேலுநாச்சியார்
அவர்களை சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதத் தேவர் அவர்களுக்கு திருமணம் செய்து
வைத்தபொழுது சீதனமாக சங்கரபதிக் கோட்டையை வழங்கினார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக
திரண்ட சிவகங்கை வீரர்களுக்கு மருது சகோதரர்கள் இக்கோட்டையில் தான் வாள் பயிற்சி
அளித்து வந்துள்ளனர். பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் கெட்டிபொம்மு நாயக்கரின்
சகோதரர் ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுக்க இவ்விடத்தை பயன்படுத்தியதாகவும்
சொல்லப்படுகிறது.
இத்தகைய வரலாற்று
சிறப்புமிக்க சங்கரபதிக்கோட்டை தற்போது சிதிலமடைந்து இடியும் தருவாயில் இருந்து
வருகிறது. இக்கோட்டையை அரசு சீரமைத்து, சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டுமென பலதரப்பட்ட மக்களும் தமிழக
அரசிடம் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர்
குணசேகரன் அவர்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களிடம் கோரிக்கை வைத்தார்.
சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் 110 விதியின் கீழ் ‘சங்கரபதி கோட்டையை சீரமைப்பு செய்திடவும்,
சுற்றுலாத்தலமாக அறிவிக்கவும் அரசாணை வெளியிட்டு நிதி ஒதுக்கீடு செய்து’ அறிவிப்பு செய்தார்.
இந்நிலையில்
நான்காண்டுகளைக் கடந்தும் சங்கரபதி கோட்டை சீரமைக்கப்படாமல் முட்செடிகளுக்குள்
முழுமையாக அழியும் நிலையிலேயே இருந்து வருகிறது. தற்போது அறிவிப்பினை வெளியிட்ட
ஜெயலலிதா அவர்களும் மறைந்து விட்டார். மேலும், காலம் தாழ்த்தாமல் அறிவிக்கப்பட்ட நிதியினை ஒதுக்கீடு செய்ய
வலியுறுத்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு மறத்தமிழர் சேனை
மாநில அமைப்பாளர் சு.புதுமலர் பிரபாகரன் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் “சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இருந்து தேவகோட்டை செல்லும் வழியில் முட்புதர்களால்
மறைக்கப்பெற்று, பராமரிப்பின்றி அழியும் நிலையில் சங்கரபதிக்
கோட்டை இருந்து வருகிறது. இந்த கோட்டையானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது
ஆகும். இந்த கோட்டையானது 16-ஆம் நூற்றாண்டை சார்ந்ததாகும். மதுரை திருமலை நாயக்கர்
மகாலைப் போன்ற தூண்களோடு கட்டிட கலையின் அடையாளமாகவும் இருந்து வருகிறது. சேதுபதி
மற்றும் சிவகங்கை ஆட்சியாளர்களின் கீழ் போர்ப்பயிற்சி மேற்கொள்ளும் இடமாகவும், ஆயுத கிடங்காவும் இருந்து வந்திருக்கிறது. மருதுசகோதரர்கள் சிவகங்கை படை
வீரர்களுக்கு போர்பயிற்சி அளித்துவந்ததுடன், ஊமைத்துரைக்கு
அடைக்கலமும் கொடுத்த மிகப்பெரிய அரணாகும்.
தற்போது, சங்கரபதிக்கோட்டையானது
முற்றிலும் அழிந்து போகும் நிலையில் இருந்து வருகிறது. தேவர் சமூகத்தை
சார்ந்தவர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் இந்த கோட்டையை சீரமைக்க வலியுறுத்தி
தொடர்ந்து போராடி வருகிறார்கள். மறைந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களிடம்
அப்போதைய மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் அவர்கள் இந்த கோட்டையை சீரமைக்க
கோரிக்கை விடுத்தார்.
14.05.013 அன்று தமிழக
சட்டமன்றத்தில் மாண்புமிகு முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் 110 விதியின் கீழ் ‘சங்கரபதிக் கோட்டையை சீரமைக்க
மூன்று கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாகவும், சுற்றுலாத்தலமாக
அறிவிக்கப்படும்’ எனவும் அறிவிப்பு செய்து ‘ஆணை’ பிறப்பித்தார். இந்நிலையில் தற்போது வரை
வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோட்டையானது சீரமைக்கப்படாமல் சிதைந்துகொண்டே
வருகிறது.
ஆகவே, தாங்கள் இதனை கருத்தில் கொண்டு
அறிவிக்கப்பட்ட நிதியினை உடனே ஒதுக்கீடு செய்து கோட்டையை புனரமைப்பு செய்திடவும், சுற்றுலாத்தலமாக அறிவிப்பு செய்துடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென
அன்புடன் கோருகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.