ஸ்ரீவைகுண்டம், செப்-18-017. விவசாயத்திற்கும்
குடிநீருக்கும் மக்கள் திண்டாடி வரும் சூழலில் பணமுதலைகளின் தொழிற்சாலைகளுக்கு
கட்டுப்பாடின்றி நிலத்தடி நீரை எடுத்துக்கொள்ள அனுமதித்து,
ஆடு மாடுகளுக்கு கூட நீர் இல்லாதபடி விற்பனை செய்வதைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்தில் ஆடு, மாடு, கோழிகளுடன் குடிபுகும்
போராட்டத்தை அறிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்க
ஒருங்கிணைப்பாளர் புதுக்குடி இராஜா தலைமையில் 18-09-17 அன்று ஸ்ரீவைகுண்டம் நகரில்
இருந்து தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். காவல்துறை
அனுமதி மறுத்துவிட காவல்துறையையும், மாவட்ட நிர்வாகத்தையும்
கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில்
மறத்தமிழர் சேனை துணைப் பொதுச்செயலாளர் மு.முத்துக்குமார பாண்டியன், எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில
தலைவர் தெஹ்லான் பாகவி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க
ஒருங்கிணைப்பாளர் முகிலன், பச்சை தமிழன் இயக்க மாநில தலைவர்
சுப.உதயகுமார், விவசாய சங்கத் தலைவர் அலங்காரம், பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா மாவட்டத் தலைவர் பாகல் சமீர், ஆம் ஆத்மி கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குணசீலன்,
பசும்பொன் ரத்ததான கழக மாவட்ட செயலாளர் சுப்பையா, மக்கள்
தேசிய தீ கட்சி மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், நாம் உழவர்
பாதுகாப்பு அணி பொதுச்செயலாளர் மாணிக்கசாமி, மனித உரிமைக்கான
குடிமக்கள் இயக்கம் மாநில அமைப்பாளர் இசக்கிமுத்து, திராவிட
தேசம் கட்சி மாநில துணைப் பொதுச்செயலாளர் திருநாவுக்கரசு உள்ளிட்ட பல்வேறு இயக்க
நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
முன்னதாக, நிலத்தடி நீர் திருட்டுக்கு
எதிராக கண்டன குரல் எழுப்பியபடி பத்துக்கும் மேற்பட்ட நாய்,
ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுடன் ஆட்சியர் அலுவலகத்தை
நோக்கி ஊர்வலமாக செல்ல போராட்டக்காரர்கள் முயன்றனர். அப்போது அனுமதியின்றி
ஊர்வலமாக செல்வதாக கூறி துணை கண்காணிப்பாளர் திபு தலைமையில் காவல் ஆய்வாளர்
வெங்கடேசன், சார்பு – ஆய்வாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட
காவல்துறையினர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்ட 165 பேரை கைது செய்தனர்.
போராட்டம் குறித்து
நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் புதுக்குடி ராஜா
செய்தியாளர்களிடம் பேசும் போது “தாமிரபரணி ஆற்றின் நீர்வரத்தைக் கொண்டு தூத்துக்குடி
மாவட்டத்தில் கார், பிசானம், முன்கார் என மூன்று போக சாகுபடிகள் இருந்த
நிலைமாறி தற்போது ஒரு போக விவசாயத்திற்கு கூட தண்ணீரை பெற முடியாத அவல நிலையில்
விவசாயிகள் போராடி வருகின்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள்
காலி குடங்களுடன் பல மைல் தூரம் நடந்து சென்று தண்ணீருக்காக காத்திருக்கும்
நிலையும், குடிநீருக்காக போராட்டம் நடத்துவதும் அதிகரித்து
வருகிறது.
இந்நிலையில்
தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்குவதற்காக நடைபெற்று வரும் நிலத்தடி நீர் திருட்டை
நிரந்தரமாக தடுக்க எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காத மாவட்ட ஆட்சியரை நேரில்
சந்தித்து பலமுறை மனு அளித்துப் பார்த்தோம். போராட்டங்களும் செய்து பார்த்து
விட்டோம். இதனைத் தொடர்ந்தே கால்நடைகளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் குடிபுகும்
முடிவிற்கு வந்தோம். தற்போது காவல்துறை திருட்டை தடுக்காமல் எங்களை கைது
செய்திருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும். எங்கள் மீது போராட்டத்தில் கலந்து கொண்ட
தோழமை இயக்கத்தினர்கள் மீதும் வழக்கு போட்டிருக்கின்றனர். ஆயினும் எங்கள்
போராட்டம் தொடரும்” என்று கூறினார்.