தமிழக அரசியல் களம், ஆட்சி அதிகாரம், வர்த்தகம், கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அடகு தொழில்
என வெளி மாநிலத்தவர்களின் கோரப்பிடிக்குள்
தமிழகம் சிக்கித்திணறி வருகிற இன்றைய சூழல்களில் மேலும் தமிழர்களின் வாழ்வியலை முடக்கும்
விதமாக தமிழ்நாடு அரசுப்பணி தேர்வாணையம் வெளி மாநிலத்தவர்களுக்கு அரசுப்பணிகளை திறந்து
விட்டிருக்கிறது. பணியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழ் தேர்வில் வென்றால்
போதும் என்கிறது.
தமிழகம் தவிர்த்த மற்ற மாநில
அரசுகள் அனைத்தும் மொழிவழி தேசிய கருத்தியலோடு தனது இனம், தனது மொழி, தனது மக்கள், தனது நாடு என மிகச் சரியாக செயல்படுவதோடு, தமது மாநில எல்லைகளுக்குள் இருக்கக்கூடிய மத்திய, மாநில
அரசுகளின் வேலைகளோடு தனியார் துறைகளின் வேலைவாய்ப்புகளிலும் மண்ணின் மைந்தர்களுக்கே
முக்கியத்துவம் அளித்து வருகின்றன. மீதமாகி கடலிலே கலந்துகொண்டிருக்கும் நீரைக்கூட
தருவதற்கு தயாராக இல்லை.
இத்தகைய சூழலில், தமிழகம் மாற்று மொழியினர்களின்
வேட்டைக்காடாக தொடர்ந்து நீடித்து வருவதும், தமிழர்களுக்கு அரசுப்பணி
வழங்க வேண்டிய தேர்வாணையமே உடன்போவதும் கண்டனத்துக்குரியதாகும். ஏழை எளிய மக்களை எல்லாவற்றிற்கும்
‘வங்கிகளுக்கு இழுக்கும்’ நிலையில், படிப்பறிவு இல்லாத பாமர மக்களுக்கு சேவை செய்வதற்கென்றே தேசிய வங்கிகளில்
தமிழறியாத அலுவலர்களின் கூட்டம் நிரம்பி வழிவதும், ஆட்சிப்பணி, காவல்பணி போன்ற உயர்பதவிகளில் மாற்று மொழியினர்கள் அதிகரித்து வருவதும் கண்டு
வருகிறோம். எஞ்சி மிஞ்சி நிற்கும் ஒன்றிரண்டு அரசுப்பணிகளுக்கும் ஓட்டுமொத்த தமிழ்ச்
சாதியினர்களும் போராடி வருகின்றனர். இந்நிலையில், இதுபோன்ற அறிவிப்புகளால்
ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் ‘அரசுப்பணி’ என்பது பெருங்கனவாய் ஆக்கப்பட்டிருக்கிறது.
தமிழர்களுக்கு பெருங்கேடு
விளைவிக்கவிருக்கும் இந்த அறிவிப்பினை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென தமிழ்நாடு அரசுப்பணி
தேர்வாணையத்தை மறத்தமிழர் சேனை சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.