அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திருமதி ந.சசிகலா அவர்களுக்கு மறத்தமிழர்
சேனை மாநில அமைப்பாளர் சு.புதுமலர் பிரபாகரன் அவர்கள் இன்று (30-12-2016) கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில் “தமிழக
அரசியல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தருணம் இது. மக்களாட்சி
மலர்ந்துவிட்டதாக சொல்லப்பட்ட இத்தனை ஆண்டு காலங்களில் தமிழர்களின் நலன் சார்ந்து
இயங்க வேண்டிய அனைத்து தமிழக அரசியல் கட்சிகளின் தலைமைகளும் தமிழர் அல்லாதோர் தலைமைகளில்
தான் இருந்திருக்கிறது. முதல்முறையாக நேரடித் தமிழ்ச்சாதியை சார்ந்த தங்களது
கைகளில் அதிகவாக்கு செல்வாக்குள்ள; சட்டமன்ற; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய அரசியல் கட்சியின் பொதுச்செயலாளர்
பொறுப்பு, அனைத்து அதிமுக தொண்டர்களின் ஒட்டுமொத்த ஆதரவோடு
வந்திருப்பது வரவேற்கத்தகுந்த நிகழ்வாகும்.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் தமிழகத்தை அரசாட்சி செய்த காமராஜர்
அவர்களின் 1954 – 1963 ஆண்டு வரையிலான ஒன்பது ஆண்டுகால தமிழர்
ஆட்சியும்கூட ‘இந்தி’ய தலைவர்களின் மேலாதிக்கத்தின் கீழ் தான் நடந்துள்ளது. ஆனால், தற்போது தங்களது மேலான வழிகாட்டுதலின் கீழ் செயல்படவிருக்கும் ஆட்சியானது
‘அனைத்து தமிழ்ச்சாதியினர்களும்’ ‘தமிழ்த் தேசிய அமைப்பினர்களும்’ விரும்பிய வகையில்
அமைந்திருப்பது எங்களைப் போன்றவர்களுக்கு மிகுந்த மன நிறைவை தருவதாக; எழுச்சி அளிப்பதாக அமைந்திருக்கிறது.
இந்நிலைக்கு கடுமையான உழைப்பு, தியாகத்தின் மூலமாக உயர்ந்த தங்களுக்கு ‘மறத்தமிழர்
சேனை’ சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். அதே
சமயத்தில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு,
நதிநீர் பங்கீடு, கச்சத்தீவு,
தமிழ்மொழிக் கல்வி, எழுவர் விடுதலை,
மீனவர் நலன், தமிழ் ஆட்சி மொழி,
கூடங்குளம் அணு உலை என அனைத்திலுமே தமிழர்களுக்கு எதிரான செயல்பாட்டினை மத்திய
அரசு கொண்டுள்ளது. இவை போன்ற பல்வேறு
வகையான மத்திய அரசின் ‘தமிழர் விரோத’ நிலைப்பாட்டிற்கு
எதிராக போராடி தமிழர்களின் அரசியல் உரிமையை நிலைநாட்டிட வேண்டும். மேலும், தங்களது எதிர்கால அரசியல் என்பது மிகக்கடுமை நிறைந்ததாக தங்கள்முன்
நிறுத்தப்பட்டுள்ளது என்பதையும், மிகுந்த மனத்திடத்தோடும், நுட்பத்தோடும் அவற்றை அணுகி தமிழர்களின் நலன்களுக்கு; உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென்பதையும் கோருகிறோம்.
தமிழக அரசின் சார்பில் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்திடவும், பாதிப்படைந்த விவசாயிகளுக்கு இழப்பீடுகள்
வழங்கிடவும், தமிழகத்தின் நீர் வளங்களை பாதுகாத்து தூர்வாரவும், தமிழக இயற்கை வளங்களை சுரண்டுவோர் – கடத்துவோர் மீது கடுமையான சட்ட
நடவடிக்கைகள் எடுக்கவும் ‘தமிழக முதல்வர்’ அவர்களுக்கு பரிந்துரைக்கும்படி பணிவோடு வேண்டுகிறோம்.” என தெரிவித்துள்ளார்.