இந்திய சுதந்திர போராட்ட வீரரும், இராமநாதபுரம் சீமையை அரசாண்ட மாமன்னரும்,
ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை கடுமையாக எதிர்த்து தொடர்ந்து 24 ஆண்டுகள் திருச்சி, சென்னை சிறைகளில் அடைக்கப்பட்டு 1809 ஜனவரி 23 அன்று செயிண்ட் ஜார்ஜ்
கோட்டை சிறையிலேயே உயிர் நீத்தவருமான ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின்
புகழைப் போற்றும் விதமாக தமிழக அரசு அவரது பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடி
வருகிறது. மேலும், கடந்த 21.12.2012 அன்று வெளியிட்ட அரசாணை
(அ.எண்:683) மூலம் ரூ.4,51,620/- ஒதுக்கீடு
செய்யப்பட்டு இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாக புல எண்.320-ல்
எட்டு அடி உயரமுள்ள வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
மறத்தமிழர் சேனை சார்பாக சிலை அமைப்பதற்கே பலதரப்பட்ட
போராட்டங்களை நடத்திவந்த நிலையில் தற்போது சிலை அமைக்கப்பட்டு இரண்டு வருடங்கள்
கடந்துவிட்ட பின்பும் ‘ரிபெல்’ அவர்களது சிலை திறக்கப்படாமல்
காலந்தாழ்த்தப்பட்டு வருகிறது. தேச விடுதலைக்காக போராடியவரின் சிலையை உடனே திறக்க
வேண்டுமென கடந்த இரண்டு வருடங்களாக பொதுமக்கள், சமூக
சேவகர்கள், வியாபாரிகள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து
வருகின்றனர். இந்நிலையில், சிலை திறப்பு விழாவினை
தள்ளிப்போடாமல், உடனே திறந்திட ஆவண செய்திடுமாறு தமிழக
முதல்வர் அவர்களுக்கு மறத்தமிழர் சேனை சார்பாக மாநில அமைப்பாளர் புதுமலர்
பிரபாகரன் அவர்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளார் ஆயினும் சிலை திறக்கப்படவில்லை.
இந்நிலையில் கடந்த 27.08.2015
அன்று இராமநாதபுரம் ஆட்சியர் அவர்களிடமிருந்து மறத்தமிழர் சேனை தலைவர் புதுமலர் பிரபாகரன்
அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள பதிலில் உச்சநீதிமன்ற வழக்கு எண்: 8519/2006 சார்பாக
நீதிமன்றம் இடைக்கால உத்தரவு தீர்ப்புரையில் ‘மத்திய மாநில அரசுகள் பொது மற்றும் தனியார் இடங்களில் எந்த ஒரு
நபருக்கும் சிலை நிறுவுதல் மற்றும் சிலை திறக்க அனுமதி அளித்தல் கூடாது’ என்று உத்தரவிட்டுள்ளதால் இப்போது சிலை சிறக்க வாய்ப்பில்லை என அனுப்பியிருந்தனர்.
இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்ட
18.01.2013 க்குப்பிறகு மத்திய, மாநில அரசுகளும், அமைச்சர்களும், சபாநாயகர்களும் இந்தியா முழுவதும் புதிதாக சிலைகளை அமைத்து, திறந்துள்ளனர். குறிப்பாக தமிழகத்தில்
திருவள்ளுவர், சி.பா.ஆதித்தனார், சிவந்தி
ஆதித்தன், ஜான் சலீவன், அன்னை தெரசா, காமராசர், அப்துல் கலாம், மேஜர்
முகுந்த் வரதராஜன், தீரர் சத்தியமூர்த்தி, காந்தி, வ.உ.சி சிலைகள் திறக்கப்பட்டுள்ளன.
2014 ஆம் வருடம் பிப்ரவரி-
24 அன்று தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் வீடியோ கான்பரசிங் மூலம் தென்னிந்திய
திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் சுப்ரமணியம் பிள்ளை, டி.ஆர்.பந்தலு, எல்.வி.பிரசாத், ராமானுஜம், டி.வி.எஸ்.ராஜு, நாகி ரெட்டி, கே.சுப்ரமணியம் ஆகியோர்களின் சிலைகளை திறந்து
வைத்துள்ளார்.
சினிமாக்காரர்களுக்கு சிலை
திறக்க முடிகிற தமிழகத்தில், இந்த மண்ணின் சுதந்திரத்திற்காக மரணத்தை முத்தமிட்ட மாமறவன், இராமநாதபுரம் சீமையின் மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின்
சிலையை திறக்க அரசிடம் கெஞ்ச வேண்டிய நிலை. மேற்கண்டவர்களின் புதிய சிலை அமைப்பை/ திறப்பை
தடுக்காத ‘உச்சநீதிமன்ற இடைக்கால தடை’ , 2010 ஆம் ஆண்டிலேயே அனுமதி வழங்கி, பணம் ஒதுக்கப்பட்ட
ரிபெல் சிலைக்கு மட்டும் காட்டப்படுவது ஆட்சியரின் ‘உள் நோக்கம்’ காரணமாகவே!
ஆகவே மாவட்ட ஆட்சியரின் முறையற்ற
பதிலை எதிர்த்து மறத்தமிழர் சேனை தலைவர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் சென்னை உயர்நீதிமன்ற
மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். (வழக்கு எண்; W.P.(MD) 17195/2015) ரிபெல் அவர்களது சிலையை உடனே திறக்க வலியுறுத்தும்
வழக்கானது 23.09.2015 அன்று நீதியரசர் சுப்பையா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை
விசாரித்த நீதிபதி இந்த வழக்கு சம்பந்தமாக தமிழக வருவாய் துறை செயலாளர், தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர், இராமநாதபுரம் ஆட்சியர்
ஆகியோர் இரண்டு வார காலத்திற்குள் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.