தேவையானவை: தினை அரிசி - ஒரு குவளை, பனை வெல்லம் - இனிப்புக்கு ஏற்ப, ஏலக்காய்த் தூள் - ஒரு சிட்டிகை, எள் - ஒரு தேக்கரண்டி, நெய் - ஒரு மேசைக்கரண்டி, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: தினை அரிசியைக் கழுவி ஒரு மணி நேரம் ஊறவைத்து, பிறகு ஒரு வெள்ளைத் துணியில் உலர்த்தி பொடித்துக்கொள்ளவும். பனை வெல்லத்தை பாகு காய்ச்சவும். பிறகு தினை அரிசி மாவில் கொஞ்சம் எள், ஏலக்காய்த் தூளைப் போட்டு, அதில் இந்தப் பாகை ஊற்றி, மாவை மிருதுவாகப் பிசைந்துவைக்கவும். ஒரு நாள் விட்டு, மறுநாள் அதில் சிறிது நெய் விட்டு, சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, இலையில் வைத்துத் தட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். 'தினை அதிரசம்’ தயார்.
பலன்கள்: வளரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு; பெரியோருக்கும்தான். பூசிய உடல்வாகைக் கொண்டவர்கள், 'இனிப்பான’வர்கள் மருத்துவரிடம் இருந்து விலகி இருப்பதற்கான வழியும்கூட. அரிசி - வெல்ல அதிரசத்தைக் காட்டிலும், தினை அதிரசத்தில் சுவையும் அதிகம்; நலமும் ஏகம்.