இத்தனை நாட்கள் கழித்து இப்போது கூடங்குளத்தில் போராட வேண்டிய தேவை என்ன?
இதற்கு நேரடியாக விடை சொல்வதை விடக் கூடங்குளத்தில் பட்டினிப்போராட்டத்தில் பங்கேற்ற கவிஞர் மாலதி மைத்ரியின் விடையைச் சொல்கிறேன். ‘உங்கள் மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து, திருமணம் பண்ண முடிவு செய்துவிட்டீர்கள். திருமண நாள் குறித்தாகிவிட்டது; மண்டபத்திற்குப் பணம் கொடுத்தாகிவிட்டது; சொந்தக்காரர்கள் எல்லாருக்கும் அழைப்பிதழும் அனுப்பிவிட்டீர்கள். நாளை காலை திருமணம். இன்று இரவு தான் உங்களுக்கு அதிர்ச்சியான ஒரு செய்தி தெரிய வருகிறது – நீங்கள் பார்த்திருக்கும் மாப்பிள்ளைக்கு எயிட்சு நோய் இருக்கிறது என்று! இப்போது சொல்லுங்கள்! பல்லாயிரக்கணக்கான உரூபா செலவு பண்ணிட்டோம், திருமணம் நடக்கட்டும்னு விடுவீங்களா? இல்லை நிறுத்தி விடுவீர்களா?
உங்கள் எடுத்துக்காட்டு நல்லாத்தான் இருக்கு. அதற்காகப் பதிமூன்றாயிரம் கோடி உருபா போட்ட பிறகு இன்று வந்து போராடுவது என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது?
இந்தப் போராட்டம் ஒன்றும் இன்று தொடங்கியதில்லை. இப்போராட்டத்திற்கு இருபத்தைந்து ஆண்டு வரலாறு இருக்கிறது.
சொல்வதற்கு ஓர் அளவு வேண்டாமா? ஏதோ ஆறு மாதம், ஒரு வருடமாகப் போராடி வருகிறோம் என்றால் சரி! அதற்காக ஒரேயடியாக இருபத்தைந்து ஆண்டுகள் என்றால் யாராவது நம்புவார்களா?
நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் இருபத்தைந்து ஆண்டு வரலாறு இப்போராட்டத்திற்கு இருக்கிறது.
நீங்கள் சொல்லும் ‘இருபத்தைந்தாண்டு’க்கு ஏதாவது ஒரு சான்றாவது சொல்ல முடியுமா?
ஒன்றென்ன? நூறு சான்றுகள் காட்ட முடியும்.
vaiko_atomic_640
அ) 1986இல் தினமணி செய்தித்தாளில் அணு உலைகளின் பாதிப்புகள் பற்றி மிக விரிவான கட்டுரை வெளிவந்தது. அப்போதே அணு உலை எதிர்ப்பு என்பது தொடங்கிவிட்டது.
ஆ) அணு உலைக் கழிவுகள் பற்றித் தினமணியில் ஐராவதம் மகாதேவன் கட்டுரை எழுதியதன் அடிப்படையில் அன்றைய முதல்வர் ம.கோ. இராமச்சந்திரன் அணுமின் திட்டத்திற்கு ஒப்புக்கொள்ள முடியாது என்று அறிவித்தார்.
ஆ) 1987இல் மீனவக் கிராமங்களின் தலைவர்கள் கூட்டம் திருச்செந்தூரில் நடந்தது.
இ) 1987 செப்டம்பர் 22ஆம் நாள் இடிந்தகரையில் கூடங்குளம் அணு உலைத்திட்டத்தை எதிர்த்து மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடந்தது.
ஈ) 1988இல் திருநெல்வேலியில் மிகப்பெரிய ஊர்வலம் நடத்தப்பட்டது.
உ) 1988 நவம்பர் 21ஆம் நாள் பாராளுமன்றத்தில் அணு உலையை எதிர்த்து வைகோ உரை நிகழ்த்தினார்.
ஊ)1989இல் நாகர்கோவிலில் ஊர்வலம், 1989 மார்ச்சு இருபதாம் நாள் தூத்துக்குடியில் ஊர்வலம் என எல்லாவற்றிலும் மக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.
எ) தூத்துக்குடியில் நடந்த ஊர்வலத்தில் ஜார்ஜ் பெர்ணான்டசு, பாலபிராசாபதி அடிகள் போன்ற தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.
ஏ) எழுத்தாளர் நாகார்ச்சுனன் 1989இல் சூனியர் விகடனில் ‘கொல்ல வரும் கூடங்குளம்’ என்னும் தலைப்பில் கட்டுரைகள் எழுதினார்.
ஐ) அந்தச் சமயத்தில் இந்தியாவிற்கு வந்த சோவியத் அதிபர் மிகைல் கோர்பச்சேவிற்கு மும்பையிலும் தில்லியிலும் கருப்புக்கொடி காட்ட முயற்சி செய்யப்பட்டது.
ஒ) 1989 மே முதல் நாள், ‘Save Water Save Life’ என்னும் உறுதிமொழியுடன் தேசிய மீனவர் கூட்டமைப்பு தாமசு கோச்சேரியின் தலைமையில் கன்னியாகுமரியில் பத்தாயிரம் பேருக்கும் அதிகம் பேர் பங்கேற்ற பெரிய பேரணி நடத்தப்பட்டது. இப்பேரணியில் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது; பலர் காயமடைந்தனர்.
ஓ) 1989 சூன் 3 முதல் 13ஆம் நாள் வரை மருத்துவர் குமாரதாசு தலைமையில் திருநெல்வேலியிலும் அதைச் சுற்றி உள்ள சிற்றூர்களிலும் அணு உலைக்கு எதிராக வீதி நாடகங்கள் நடத்தப்பட்டன.
ஒள) 1989 சூன் பதின்மூன்றாம் நாள் கூடங்குளத்தில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
க) கூடங்குளம் அணு உலைக்குப் பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் எடுக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி 101 தொடர் பொதுக்கூட்டங்கள் நாகர்கோவிலிலும் அதைச் சுற்றியுள்ள ஊர்களிலும் நடத்தப்பட்டன.
உ) 1989இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பாலான கட்சிகள் தங்களுடைய தேர்தல் அறிக்கைகளில் கூடங்குளம் அணுமின் திட்டத்தைக் கைவிடும் கோரிக்கையைக் கொண்டிருந்தன.
ங) பேச்சிப்பாறை அணியில் இருந்து தண்ணீர்க்குழாய் அமைக்க நடப்பட்டிருந்த எல்லைக் கற்களைப் பிடுங்கி எறியும் போராட்டம் 1990 இல் நடத்தப்பட்டது.
ச) முன்னாள் தலைமையமைச்சர் இராசீவ்காந்தி, முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கடராமன், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோர் தலைமையில் நடக்கவிருந்த மூன்று வெவ்வேறு அடிக்கல் நாட்டு விழாக்கள் மக்களின் கடும் எதிர்ப்பின் காரணமாகக் கைவிடப்பட்டன.
* தமிழக ஆளுநர் முன்னிலையில் மதுரையில் நடந்த மிகப்பெரிய பொது நிகழ்ச்சி ஒன்றில் இசையமைப்பாளர் இளையராசா வெளிப்படையாக அணு உலையை எதிர்த்துப் பேசினார்.
* இயக்குநர் பாலச்சந்தர், நடிகர் நாசர் போன்ற திரைக்கலைஞர்கள் பலர் கூடங்குளம் திட்டத்தை எதிர்த்துக் கையொப்பம் இட்டுள்ளனர்.
தமிழில் கூடங்குளத்தைப் பற்றிப் பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன.
மருத்துவர் இரமேசு, பிரேமா நந்தகுமார், ஞாநி, ஊடகவியலாளர் A.S.பன்னீர்செல்வன், நீலகண்டன், குமாரசாமி, மருத்துவர் தெய்வநாயகம், எழுத்தாளர் செ.திவான், சுப.உதயகுமார் எனப் பலர் கூடங்குளம் அணுமின்திட்டத்தை எதிர்த்துப் போராடி வருகிறார்கள்.
‘பிராண்ட்லைன்’ இதழில் மார்க்சிய சூழலியலாளர் பிரபுல் பித்வாய் இருபத்தைந்து ஆண்டுகளாகக் கூடங்குளம் அணுமின் திட்டத்தை எதிர்த்தும் அணு உலைகளின் ஆபத்துகளை விளக்கியும் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.
கூடங்குளம் அணுமின் எதிர்ப்புப் போராட்டத்தைப் பற்றி உங்களுக்கு இவ்வளவு போதுமா? இன்னும் எதிர்பார்க்கிறீர்களா?
உங்களுக்கு என்ன சிக்கல்? கூடங்குளத்தில் அணு உலை அமைக்கக்கூடாது என்கிறீர்கள் அவ்வளவு தானே!
ஆமாம்! உறுதியாக அதைத்தான் சொல்கிறோம்.
ஏன் அவ்வளவு உறுதியாக வேண்டாம் என்கிறீர்கள்?
கூடங்குளம் அணு உலை அமைந்துள்ள இடம் எரிமலைக் குழம்புகளால் ஆனது. 1990களில் கேரளப் பல்கலைக்கழகத்தில் நில இயல் துறையைச் சேர்ந்த டாக்டர் பிஜி, சென்னை ஐ.ஐ.டி.யைச் சேர்ந்த இராம் சருமா ஆகியோர் இந்த எரிமலைக் குழம்புகள் பற்றித் தங்கள் ஆய்வுகளில் கூறியிருக்கிறார்கள். 2004 நவம்பர் மாதம் வந்த ‘கரண்டு சைன்சு’ இதழில் இவ்வாய்வுக்கட்டுரைகள் வெளிவந்துள்ளன. கூடங்குளத்தில் இருக்கும் ‘உருகிய பாறைப் பிதுங்கல்கள்’ நேரடியாக அணு உலையின் நிலைத்த தன்மையைக் குலைத்து விடும் வாய்ப்பு மிக அதிகம்.
சரி! அப்படியானால் வேறு இடங்களில் அணுமின் நிலையங்கள் அமைப்பதில் உங்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை அப்படித்தானே?
இல்லை. அணுமின் நிலையங்களை எங்கு அமைப்பதையும் எதிர்க்கிறோம்.
எங்கு அமைப்பதையும் எதிர்க்கிறீர்களா? அணுமின் திட்டம் என்பது ஒரு தொழில்நுட்பம். அதை எதிர்ப்பது என்பது நம்மைப் பழைய காலத்திற்குத் தள்ளிவிடாதா?
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி! ஒரு தொழில்நுட்பத்தையே எதிர்ப்பது என்பது நம்மைப் பழைய காலத்திற்குத் தள்ளிவிடும் தான்! அதே வேளை அத்தொழில்நுட்பத்தால் ஏற்படும் பின்விளைவுகள் மனித குலத்தையே அழித்து விடும் என்றால் அப்படி ஒரு தொழில்நுட்பம் நமக்குத் தேவையா எனச் சிந்திக்க வேண்டும் அல்லவா? எனவே, அத்தொழில்நுட்பத்தால் ஏற்படும் பின்விளைவுகளை எதிர்கொண்டு மக்களைக் காப்பாற்றுவது எப்படி என்பதைக் கண்டறிந்த பிறகு அதைப் பயன்படுத்தலாம் என்று தான் சொல்கிறோம்.
அதனால் தான், மக்கள் நடமாட்டம் குறைவான கூடங்குளம் பகுதியில் அணு உலைகளை அரசு நிறுவியிருக்கிறது. அதையும் வேண்டாம் என்றால் என்ன சொல்வது?
மக்கள் நடமாட்டம் குறைவான பகுதியில் இல்லை; மக்கள் நடமாட்டமே இல்லாத பகுதியில் தான் அணு உலைகள் நிறுவப்பட வேண்டும். இதை நாம் சொல்லவில்லை; தமிழக அரசின் அரசின் அரசாணை எண் 828 (29.4.1991 – பொதுப்பணித்துறை) சொல்கிறது.
இவை தவிர்த்து உலகம் முழுக்கப் பின்பற்றப்பட்டு வரும் கீழ்க்காணும் விதிகளும் கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டத்தில் முறையாகப் பின்பற்றப்படவில்லை.
அ) AERB எனும் அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தின் விதிமுறைகள் படி ஐந்து கி.மீ. சுற்றளவுக்குள் இருபதாயிரம் பேருக்கு மேல் வசிக்கக்கூடாது. ஆனால் அணுமின் நிலையத்திலிருந்து பத்து கி.மீ தொலைவிற்குள்ளேயே கூடங்குளம் கிராமத்தில் இருபதாயிரம் மக்களும், இடிந்தகரை கிராமத்தில் பன்னிரண்டாயிரம் பேரும் காசா நகரில் நானூற்று ஐம்பது குடும்பங்களும் வசிக்கிறார்கள்.
ஆ) பத்து கி.மீ சுற்றளவுக்குள் மாநிலத்தின் சராசரி மக்கள் அடர்த்தியின் மூன்றில் இரண்டு பங்குக்குக் குறைவாகவே மக்கள் இருக்க வேண்டும். ஆனால் மாநில சராசரியை விட மிக அதிகமான மக்கள் இந்தப் பகுதியில் நெருக்கமாக வாழ்கிறார்கள்.
இ) முப்பது கி.மீ சுற்றளவுக்குள் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழும் நகரங்கள் இருக்கக்கூடாது. ஆனால் இரண்டு இலட்சம் பேர் வாழும் நாகர்கோவில் நகரம் இருபத்தெட்டு கி.மீ தொலைவிற்குள் இருக்கிறது.
ஈ) இருபது கி.மீ சுற்றளவுக்குள் சுற்றுலாத் தலங்களோ வரலாற்றுப் புகழ் பெற்ற இடங்களோ இருக்கக்கூடாது என்று AERB சொன்னாலும் உலகப்புகழ் பெற்ற கன்னியாகுமரி பதினைந்து கி.மீ சுற்றளவுக்குள் இருக்கிறது.
இப்படிக் கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து முப்பது கி.மீ சுற்றளவுக்குள் பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வரும் நிலையில் அம்மக்களை வெளியேற்றுவதோ, பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவதோ, அவர்களுக்குத் தேவையான இருப்பிட வசதிகளை செய்வதோ, மருத்துவ வசதிகள் செய்து தருவதோ, பள்ளிகள் அமைத்து தருவதோ, மாற்று வேலைகள் ஏற்படுத்திக் கொடுப்பதோ நடைமுறையில் சிறிதும் இயலாத காரியமாகும்.
இவை தவிர,
உலைகளுக்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை மக்களிடம் பகிர்ந்து கொள்ளப்படவில்லை. கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படவில்லை.
உலைகள் அமைக்கப்பட்டிருக்கும் தலங்கள் பற்றிய இரசிய அறிவியலாளர்களின் வருத்தங்கள் மூடி மறைக்கப்பட்டதோடு, தல ஆய்வறிக்கை (’Site Evaluation Study’) மக்களுக்குத் தரப்படவில்லை. பாதுகாப்பு ஆய்வறிக்கையும் (’Safety Analysis Report’) பொதுமக்களுக்கு, மக்கள் பிரதிநிதிகளுக்கு, செய்தியாளர்களுக்கு என யாருக்கும் அளிக்கப்படவில்லை.
நீங்கள் சொல்வது போல் இருந்தால் உலகில் தொழில்நுட்பத்தில் வளர்ந்த நாடுகள் பல, அணுமின் நிலையங்களை வைத்திருக்கக் கூடாது அல்லவா? ஆனால் அமெரிக்கா, இரசியா, பிரான்சு, சப்பான், செர்மனி எனப் பல நாடுகள் அணு மின் நிலையங்களை வைத்திருக்கின்றன என்று படிக்கிறோமே!
எங்கே இதையெல்லாம் படித்தீர்கள்?
என்ன இப்படிக் கேட்கிறீர்கள்? இரசியாவின் செர்னோபில் அணு விபத்து (நேர்ச்சி) பற்றிப் பாடப் புத்தகங்களிலேயே படித்திருக்கிறோம். கொஞ்ச நாட்களுக்கு முன் சப்பான் நாட்டில் புகுசிமாவில் அணு மின் நிலையம் நில நடுக்கம் வந்த போது பாதிக்கப்பட்டது எனச் செய்தித்தாள்களில் வந்தது.
அங்கெல்லாம் நடந்தது போல் இங்கு நடந்து விடக்கூடாது என்பதால் தான் அணு உலைகளே வேண்டாம் என்கிறோம்.
நீங்கள் சொல்வதைப் பார்த்தால் உலகில் செர்நோபில் விபத்திற்குப் பிறகு எல்லா நாடுகளும் அணு உலைகளை மூடியிருக்க வேண்டுமல்லவா?
கண்டிப்பாக. செர்நோபில் நேர்ச்சிக்குப் பிறகு இரசிய அரசு அணு உலைகள் அமைப்பதை நிறுத்திவிட்டது. அன்றைய சோவியத்து குடியரசுத் தலைவர் மிகைல் கார்ப்பசேவ், “செர்நோபிலில் நடந்ததை ஒரு குறிப்பிட்ட நாட்டில் நடந்த பேரழிவாகக் கொள்ள முடியாது. மாறாக, இது மொத்த உலகத்தையே பாதித்துள்ள விடயம்” என்று சொன்னார்.
திரும்பத் திரும்ப இரசியாவையே சொல்லாதீர்கள். அமெரிக்கா முதலிய பிற நாடுகள் அணு உலைகள் அமைப்பதில் என்ன செய்கின்றன? அதைச் சொல்லுங்கள்.
அமெரிக்காவில் 1979ஆம் ஆண்டிலிருந்தே எந்தப் புதிய அணு உலைகளும் கட்டப்படவில்லை.
புகுசிமா அணு உலை நேர்ச்சி நடந்த சப்பானில் மொத்தம் இருந்த 54 அணு உலைகளில் 37 உலைகளை மூடப்பட்டுள்ளன.
சுவிட்சர்லாந்து புது உலைகளைக் கட்டுவதையும் புதுப்பிப்பதையும் நிறுத்தி வைத்துள்ளது.
இத்தாலியிலும் அணுஉலைகள் மூடப்பட அந்நாட்டின் அரசு முடிவெடுத்துள்ளது.
செர்மனி 17 உலைகளைக் கலைப்பதை ஒத்திவைக்கலாம் என்று நினைத்திருந்தது. இப்போது அம்முடிவை உடனே எடுக்கலாம் என முடிவெடுத்திருக்கிறது.
சீனத்தில் புதிய அணு உலைகளுக்கான ஒப்புதல் நீக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் மக்களுள் அறுபத்திரண்டு விழுக்காட்டுப் பேர் அணு உலைகளை மூட வேண்டும் என்று வாக்களித்திருந்தனர். பதினைந்து விழுக்காட்டு மக்கள் உடனடியாக மூட வேண்டும் என்று தெரிவித்திருத்திருந்தனர்.
எதில் தான் நேர்ச்சிகள் (விபத்துகள்) இல்லை? ஒரு பேருந்தில் போனால் கூடத்தான் அடிபடுகிறது; உயிரிழப்பு ஏற்படுகிறது. இப்படி நேர்ச்சிகளைப் பற்றிப் பேசிக்கொண்டே இருந்தால் எப்படி முன்னேறுவது?
ஒரு பேருந்து நேர்ச்சி என்றால் அதிக அளவு நூறு பேர் இறந்து போவார்கள். அத்துடன் பாதிப்பு முடிந்து விடும். ஆனால் அணு நேர்ச்சி என்பது அப்படி இல்லை. செர்நோபில் உலை வெடித்தவுடன் ஒன்பதாயிரம் பேர் தாம் இறந்து போனார்கள். ஆனால் அதன் தொடர்ச்சியாகக் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் ஏறத்தாழப் பத்து இலட்சம் பேர் இறந்து போயிருக்கிறார்கள். அதாவது நேரடியாக இறப்போர் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில்! தலைமுறை தலைமுறையாக இறப்போர் இலட்சக்கணக்கில்! இப்போது சொல்லுங்கள் – அணு உலை என்பது உயிருக்கு உலை தானே?
அப்படியே விபத்து என்றாலும் ஆழிப்பேரலை (சுனாமி)யோ நிலநடுக்கமோ வரும்போது தானே!
அப்படியெல்லாம் சொல்லிவிட முடியாது. அமெரிக்காவின் மூன்று மைல் அணு நேர்ச்சியும் செர்நோபிள் அணு நேர்ச்சியும் நேரக் காரணம் இயக்கத்தில் நடந்த கோளாறும் மனிதத்தவறுகளும் தாம்! அங்கு ஆழிப்பேரலையும் வரவில்லை; நிலநடுக்கமும் வரவில்லை.
ஏற்கெனவே ஒரு நாளைக்குக் குறைந்தது இரண்டு மணி நேரம் மின்வெட்டு இருக்கிறது. இப்போது இந்தத் திட்டத்தின் மூலம் மலிவான விலையில் மின்சாரம் கிடைக்கும் என்கிறார்கள். அதையும் போராடி நிறுத்தி விட்டீர்கள் என்றால் மின்சாரத்திற்கு என்ன செய்வது?
இந்தத் திட்டத்தால் மலிவு விலையில் மின்சாரம் கிடைக்கும் என்பதெல்லாம் வெற்றுக் கட்டுக் கதைகள் தாம்!
மலிவு விலையில் அணு மின்சாரம் என்று அரசு சொல்கிறது. நீங்கள் அது கட்டுக்கதை என்று சொல்கிறீர்கள். எப்படி என்று ஏதாவது புள்ளிவிவரம் கொடுக்க முடியுமா?
வரும் 20 ஆண்டுகளில் அணு மின்னாற்றலின் அளவை 6 விழுக்காடாகக் கூட்ட வேண்டுமானால் அதற்கு தேவைப்படும் முதலீடு மட்டும் ஐம்பதாயிரம் கோடி உரூபா ஆகும். இப்போது சூரியஆற்றல், காற்றாலை போன்ற முறைகளுக்கு அரசு ஒதுக்கும் தொகை வெறும் அறுநூறு கோடி உரூபா தான். அதிலேயே அவை ஐந்து விழுக்காட்டு அளவு மின்சாரத்தைத் தந்து விடுகின்றன. இப்போது அணு ஆற்றலுக்கு அரசு ஒதுக்கும் தொகை 3897 கோடி உரூபா. ஆனால் அவை தருவது 2.5 விழுக்காட்டு அளவு மின்சாரம் தான். ஒரு மெகா வாட்(டு) மின்சாரத்தை அணு ஆற்றலின் மூலம் உருவாக்க ஏறத்தாழ இருபத்திரண்டு கோடி உரூபா செலவாகும். ஆனால் சூரிய ஒளி மூலம் அதே அளவு மின்சாரத்தைப் பதினைந்து கோடியில் உருவாக்கிவிடலாம்.
நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை என்றால் கல்பாக்கம் அணுமின்நிலையத்தைச் சுற்றி உள்ள மக்களுக்கு உடல் நலத்தில் பாதிப்பு வந்திருக்க வேண்டுமே?
நல்ல கேள்வி!
ð கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர்களுடைய குடும்பத்தினருக்கு ‘மல்டிபிள் மைலோமோ’ என்னும் எலும்பு மச்சைப் புற்றுநோய் இறப்புவீதம் அதிகம் இருக்கிறது.
ð அப்பகுதியில் உள்ள மீனவப் பெண்கள் ‘ஆட்டோ இம்யூன் தைராய்டு’ என்னும் தைராய்டு சுரப்பியைப் பாதிக்கும் நோய் பற்றிய புள்ளி விவரங்கள் வெளிவந்திருக்கின்றன.
ð அணு உலையைச் சுற்றி ஐந்து கி.மீ. சுற்றளவுப் பகுதிகளில் (சதுரங்கப் பட்டினம் போன்ற பகுதிகளில்) தைராய்டு புற்று நோய் இறப்பு வீதம் பற்றிய புள்ளி விவரங்கள் ஆகியன அதிர்ச்சியான உண்மைகளை வெளிக்கொண்டு வந்தன. தைராய்டு புற்றுநோய்க்கு அணு உலையில் இருந்து வெளியேற்றப்படும் அயோடின் 131 என்னும் வாயுக்கழிவே காரணம் ஆகும்.
ð இப்புள்ளிவிவரங்கள் அனைத்தும் மருத்துவர் வீ. புகழேந்தி 2003, 2008, 2010 ஆகிய ஆண்டுகளில் மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவுகள் ஆகும். இவற்றில் எந்த அறிக்கையையும் கல்பாக்கம் அணு உலை நிருவாகம் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டுடன் ஒப்பந்தம் போட்டு வரும் திட்டத்தில் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அதைக் கெடுக்கப் பார்க்கிறீர்களே!
நாலு பேருக்கு வேலை கிடைக்க, நானூறு பேர் தங்கள் வேலையை இழப்பார்கள். அப்படிப்பட்ட திட்டம் நமக்குத் தேவையா?
எப்படி நானூறு பேர் வேலை இழப்பார்கள் எனச் சொல்கிறீர்கள்?
தாராப்பூர் (மும்பை) அணு உலை தொடங்கிய போது அந்தக் கிராமத்தில் மொத்தம் எழுநூறு மீன்பிடி படகுகள் இருந்தன. இன்று அங்கு வெறும் இருபது படகுகள் தாம் இருக்கின்றன. மீன்பிடித் தொழில் அழிந்து போனதால் அங்கிருந்த மீனவர்கள் அனைவரும் தினக்கூலிகளாக வேறு தொழில் பார்த்துப் போய்விட்டார்கள். கல்பாக்கம் அணு உலை கடலில் கலக்கவிடும் ‘குளோரினால்’ மீன்வளம் வெகுவாகக் குறைந்து வருகிறது. ‘சிங்க இறால்’ போன்ற மீன் வகைகள் வேகமாக அழிந்து வருகின்றன. இதே நிலை தான் நாளை கூடங்குளத்திலும் நடக்கும். மிகப்பெரிய மீன் பிடி மையமாகத் திகழும் தமிழகத்தின் தென்பகுதியில் பல்லாயிரக்கணக்கான கோடிகளில் மீன்கள், கடல் உயிரினங்கள் ஆகியவற்றால் வணிகம் நடந்து வருகிறது. இது அப்படியே நசிந்து போகும். பேச்சிப்பாறை அணையில் இருந்து கூடங்குளம் அணு உலைக்கு நீர் எடுக்கும் நிலையில் அந்த அணையை நம்பி வேளாண் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஆயிரக்கணக்கான வேளாண் குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்து விடும். இப்போது சொல்லுங்கள் –சிலர் வாழ, பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் வாழ்க்கையையே இழந்து நாடோடி வாழ்க்கை நடத்த வேண்டி வரும். இது தேவையா?
chernobyl_child_370அப்படி என்ன உடல் நலக்குறைவு கதிர்வீச்சால் ஏற்பட்டு விடும் என்கிறீர்கள்?
கதிரியக்கத்தின் பாதிப்பு நம் உடலின் மற்ற பகுதிகளை விட, குழந்தைப் பேறு சார்ந்த உறுப்புகள் மீது தான் அதிகமாக இருக்கும். கதிரியக்கம் விந்து, சினை முட்டைகளை எளிதாகத் தாக்கி அவற்றின் தன்மையை மாற்றிவிடும். அதனால் கருச்சிதைவுகள், குறைமாதப் பிறப்பு, பிறவிக் குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகள் எனப் பல பாதிப்புகள் ஏற்படும். தைராய்டு புற்றுநோய், தோல் புற்று நோய், குருதி சார்ந்த புற்றுநோய் எனப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்டோருக்கு மிக அதிகம்.
அணுமின்நிலையம் வேண்டாம் என்று தமிழ்நாட்டில் மட்டும் தானே போராடிவருகிறீர்கள்? இந்தியாவின் மற்ற மாநிலங்கள் எல்லாம் அமைதியாகத் தானே இருக்கின்றன?
ð அணு உலைகள் பாதுகாப்பானவை என்று சொல்லிவந்த அமைச்சர்களை மராட்டியத்தில் உள்ள மக்கள் புகுசிமாவிற்கு அனுப்ப முடிவு செய்தனர்.
ð அதற்கான போக்குவரத்துக் கட்டணத்தைத் தலைக்கு ஒரு உரூபா வாங்கிச் சேர்த்து, காசோலைகள் அமைச்சர்களுக்கு அனுப்பப்பட்டன.
ð குசராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் கட்சிப்பாகுபாடு இல்லாமல் அமெரிக்கா நிறுவும் அணு உலையை எதிர்த்து வருகிறார்கள். அங்கு நடந்த துப்பாக்கிச்சூட்டில் இதுவரை மூவர் உயிரை விட்டிருக்கிறார்கள்.
ð அரியானா மாநிலத்தின் பத்தேபாத்தில் மக்கள் தொடர் போராட்டம், பட்டினிப் போராட்டம் எனப் போராடிவருகிறார்கள்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களே கூடங்குளம் அணுமின்திட்டம் வேண்டும் என்கிறாரே!
‘அணுமின் திட்டம் வேண்டும்’ என்று சொல்வதற்கு அவர் என்னென்ன காரணங்கள் சொல்கிறார்?
23) அன்றாடம் செய்தித்தாள்களைப் படித்தாலே அவருடைய கருத்துகள் உங்களுக்குப் புரிந்திருக்கும். சரி! இருந்தாலும் சொல்கிறேன்.
அணு மின்சாரம் மலிவானது.
கூடங்குளம் அணு உலை நூறு விழுக்காடு பாதுகாப்பானது.
அணுக்கழிவுகளை எட்டாண்டுகள் வரை பாதுகாப்பாக வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சப்பானின் புகுசிமா அணு நேர்ச்சியில் ஒருவர் கூடச் சாகவில்லை.
நீங்கள் பெரிதாகப் பேசும் செர்நோபிள் அணு நேர்ச்சியில் ஐம்பத்தேழு பேர் தாம் இறந்தார்கள்.
யுரேனியம் கிடைக்காமல் தான் செர்மனி அணு உலைகளை மூடுகிறதே தவிர, புகுசிமா நேர்ச்சியால் ஏற்பட்ட அச்சத்தால் ஒன்றும் இல்லை.
என்று உங்கள் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் நெற்றியடி அடித்துச் சொல்லியிருக்கிறார். அப்படிச் சொல்லியும் உங்களுக்குப் புரியவில்லையா?
முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் கருத்துகளை நன்றாக ஊன்றிப் படித்திருக்கிறீர்கள். நீங்கள் சொல்லும் அக்கருத்துகளையே ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
1.கலாம்: அணு மின்சாரம் மலிவானது.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கூறும் இக்கணக்கானது, ‘ஒரு கிராம் யுரேனியத்தின் விலையால் அதிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தின் அளவை வகுத்துச் சொல்வதாகும்’. ஆனால் அணு மின்சாரத்தைக் கணக்குப் போடும்போது கருத்தில் கொள்ளப்பட வேண்டியவை:
ð அணு உலைகளுக்குச் செய்யப்படும் சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ஆகும் செலவு. (இதுவே பிற முறைகளுக்கு ஆகும் செலவை விடப் பல நூறு மடங்கு அதிகம்)
ð அணு உலையை ஏறத்தாழ முப்பதாண்டுகளுக்குப் பின் பிரித்துக் கலைத்துவிடவேண்டும். இப்போது கூடங்குளத்திற்குப் பதின்மூன்றாயிரம் கோடி உரூபா செலவாகியிருப்பதாக அரசு சொல்கிறது. இவ்வுலையைப் பிரிக்க இன்றைய கணக்கில் இருபதாயிரம் கோடி உரூபா ஆகும் என்று அரசு கூறி வருகிறது. (அப்படியானால் இன்னும் முப்பதாண்டுகளில் அத்தொகை ஐம்பதாயிரத்தில் இருந்து அறுபதாயிரம் கோடி உரூபா தேவைப்படும்.). ஆகக் கூடங்குளத்திற்கு ஆகப்போகும் தொகை (கட்டுவதற்கும் பிரிப்பதற்கும் மட்டும்) ஏறத்தாழ எண்பதாயிரம் கோடி உரூபா.
ð அணு மின்சாரம் மலிவாகக் கிடைக்கும் ஒன்று என்றால் “Wall street நிறுவனங்கள் அணு உலைகள் அமைக்க உதவ மாட்டோம்” (“Wall street does not vote for Nuclear Industries”) என ஏன் சொல்கிறார்கள்?
ð நாட்டின் அணுஆற்றல் துறையை அரசு ‘அலுவல் கமுக்கச் சட்டத்தின்’ (‘Official Secret Act’) கீழ் பாதுகாத்து வருகிறது. எனவே அங்கு எவ்வளவு செலவழிக்கப்பட்டுள்ளது என்பது மக்களுக்குச் சொல்லப்பட மாட்டாது. கதை இப்படியிருக்க, அணு மின்சாரம் மலிவானது என்று எந்தக்கணக்கில் கூறுகிறார்கள்?
2. கலாம்: கூடங்குளம் அணு உலை நூறு விழுக்காடு பாதுகாப்பானது.
ð இக்கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்வதாக வைத்துக்கொள்ளுங்கள். இந்திய அரசு, இரசிய அரசுடன் சிறப்பு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இவ்வொப்பந்தத்தின் படி, கூடங்குளம் அணு உலையில் நேர்ச்சி ஏதும் ஏற்பட்டால் இந்த அணு உலையை நிறுவியிருக்கின்ற “ஆடம்சுதுரோயெக்சுபோர்ட்டு” (“Atomstroyeksport”) நிறுவனத்தின் மீது யாராலும் வழக்குத் தொடர முடியாது. இந்த ஒப்பந்தத்தின் பெயர் தான் ‘அணு உலை நேர்ச்சி இழப்பீட்டு ஒப்பந்தமாகும்’. அணு உலை நூறு விழுக்காடு பாதுகாப்பானது என்றால் இந்த ஒப்பந்தம் எதற்கு?
ð அணு உலைகள் பாதுகாப்பானவை என்றால், பெரும்பாலான தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் ஏன் அணு உலைகளைக் காப்பீடு செய்ய முன்வருவதில்லை?
ð மற்ற எரிபொருள் ஆற்றல் தொழில்களைக் காட்டிலும் அணு ஆற்றல் தொழிலுக்கு ‘Wall Street’ வங்கிகள் ஏன் கூடுதல் வட்டி வாங்குகின்றன?
3.கலாம்: அணுக்கழிவுகளை எட்டாண்டுகள் வரை பாதுகாப்பாக வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ð கழிவுகளைப் பாதுகாக்க முடியும் என்பதை ஏற்றுக்கொள்வோம். அப்படியானால் இரசியா ஏன் (முன்பு ஒப்புக்கொண்டதற்கு மாறாகக்) கழிவுகளை எடுத்துச் செல்ல முடியாது எனக் கைவிரிக்கிறது?
ð அணுக் கழிவுகள் என்று சொல்வது ஏதோ நம்முடைய வீட்டில் இருந்து கொட்டும் சமையல் கழிவுகளைப் போல என எண்ணி விடாதீர்கள். அணுக்கதிர் தனிமமான புளூட்டோனியத்தின் ஒரு கிராமில் பத்து இலட்சத்தில் ஒரு பகுதியே புற்றுநோயை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்தக் கழிவு இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்குக் கதிரியக்கத்தை வெளிப்படுத்தும்.
ð இரண்டு இலட்சம் ஆண்டுகள் (சரி! வெளியில் பேசப்படுகிற இருபத்தைந்தாயிரம் ஆண்டுகள் என்று கூட வைத்துக்கொள்ளுங்கள்). இருபத்தைந்தாயிரம் ஆண்டுகள் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு பொருளை எட்டாண்டுகள் மட்டும் பாதுகாத்துவிட்டு அதன் என்ன செய்யப் போகிறோம்?
ð அணுக்கழிவை நிலநடுக்கமும் நீர் ஒட்டும் வாய்ப்பும் அறவே இல்லாத யூக்கா மலையில் ஆழப் புதைக்கும் திட்டத்திற்குப் பல்லாயிரம் கோடிச் செலவழித்த பிறகு, அதுவும் பெரிய தீங்கு விளைவிப்பது தான் என அமெரிக்கா அந்தத் திட்டத்தைக் கைவிட்டது ஏன்?
4.கலாம்: சப்பானின் புகுசிமா அணு நேர்ச்சியில் ஒருவர் கூடச் சாகவில்லை.
ð ஒருவர் கூடச் சாகாத புகுசிமா நேர்ச்சிக்கு ஏன் ‘நேர்ச்சி அளவு: ஏழு’ என உச்ச அளவு சொல்லப்பட்டது?
ð ‘செர்நோபிளைப் போல இருபது மடங்கு கதிர்வீச்சு வெளிப்பட்டுள்ளது’ என அமெரிக்காவில் அணுத் தொழிலில் துணைத்தலைவராக இருந்த அர்னாடு கண்டர்சன் என எப்படிச் சொன்னார்? (http://www.aljazeera.com/indepth/features/2011/06/201161664828302638.html)
ð ஒருவர் கூடச் சாகவில்லை என்றால் ஏன் சப்பான் அரசு தன்னுடைய நாட்டில் அணு உலைகளை நிறுவுவதை உடனடியாக நிறுத்தி வைத்துள்ளது ஏன்?
ð ஒருவர் கூடச் சாகாத ‘சிறிய’ நேர்ச்சிக்குச் சப்பான் அரசு ஏன் அங்கு வாழ்ந்து வந்த எழுபதாயிரம் பேரை உடனடியாக வெளியேற்றியது?
ð புகுசிமாவில் பயிரான நெல்லை ஏற்றுமதி செய்யக்கூடாது எனச் சப்பான் அரசு ஏன் தடை விதித்தது? (http://www.dnaindia.com/world/report_japan-bans-shipment-of-rice-harvested-in-fukushima-after-high-cesium-level-detected_1619606)
5.கலாம்: நீங்கள் பெரிதாகப் பேசும் செர்நோபிள் அணு நேர்ச்சியில் ஐம்பத்தேழு பேர் தாம் இறந்தார்கள்.
ð இரண்டாம் உலகப் போரின் போது சப்பானின் இரோசிமா, நாகசாகி ஆகிய நகரங்கள் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதில் எத்தனைப் பேர் இறந்தார்கள்? அதன் பிறகு எத்தனைக் குழந்தைகள் ஊனமாக, மனவளர்ச்சி குன்றியதாக எனப் பல்வேறு குறைகளுடன் தொடர்ந்து பிறந்திருக்கின்றன என்பது நீங்கள் அன்றாடம் செய்தித்தாள் வாசிப்பவராக இருந்தாலே உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதைப் போல நூறு மடங்கு கதிர்வீச்சைச் செர்நோபில் அணு விபத்து வெளிப்படுத்தியது என்றால் எவ்வளவு பெரிய அவலம் நடந்திருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளுங்கள்.
ð ஐம்பத்தேழு பேர் இறந்து போவது என்பது ஒரு பேருந்து நேர்ச்சியைப் போலத்தான்! அப்படியானால் அதை ஏன் ஆசியாவின் பெரிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்தில் ‘சுற்றுச்சூழலியல்’ துறை பாடத்திட்டத்தில் வைத்துப் பொறியியல் மாணவர்களுக்குச் சொல்லித் தருகிறார்கள்? கலாம் அவர்களே அப்பல்கலைக்கழகத்தில் சில காலம் பேராசிரியராகப் பணியாற்றினாரே!
ð செர்நோபிள் நேர்ச்சியால் ஒன்பது இலட்சத்து எண்பத்தைந்தாயிரம் பேர் இறந்து போனார்கள் என்று இரசிய அரசு அறிக்கையே சொல்கிறது. (இதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள ‘Chernobyl: Consequences of the Catastrophe for People and the Environment’ என்னும் அறிக்கையைப் படித்துப் பாருங்கள்).
ð செர்நோபிள் நேர்ச்சியால் செர்நோபிளைத் தாண்டி ஐரோப்பாவில் 1 இலட்சம் சதுர கி. மீ. நிலம் வேளாண்மை செய்ய முடியாத அளவு மாசுபட்டுள்ளது.
6.கலாம்: யுரேனியம் கிடைக்காமல் தான் செர்மனி அணு உலைகளை மூடுகிறதே தவிர, புகுசிமா நேர்ச்சியால் ஏற்பட்ட அச்சத்தால் ஒன்றும் இல்லை.
ð செருமன் நாட்டின் அதிபர் (சான்சலர்) ஆங்கெலா மார்க்கெல் நம்முடைய தலைமையமைச்சர் மன்மோகன்சிங்கைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே ‘சப்பான் நேர்ச்சிக்குப் பிறகு ஏற்பட்ட எதிர்ப்பால் தான் அணு உலைகளை மூடுகிறோம்’ என்று சொல்லியிருக்கிறார். இது கலாம் அவர்களுக்குத் தெரியாதா?
ð யுரேனியம் கிடைக்காமல் தான் செருமனி அணு உலைகளை மூடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால் நம்முடைய நாட்டில் யுரேனியம் கிடைக்கிறதா? இல்லையே! இந்த யுரேனியத்தை இறக்குமதி செய்வதற்குத் தானே மன்மோகன் அரசு அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தத்தைச் செய்துள்ளது!
ð யுரேனியத்தை நம்முடைய நாட்டிற்கு இறக்குமதி செய்ய முன்வந்துள்ள ஆசுதிரேலியாவில் ஓர் அணு உலை கூடக் கிடையாது! ஏன்?
அப்படியானால் அப்துல் கலாமும் காசு வாங்கிக் கொண்டு நம்மை ஏமாற்றுகிறார் என்று சொல்கிறீர்களா?
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நாடு போற்றுகிற ஒரு தலைவர். இளைஞர்கள் பலர் அவரை முன்னோடியாகக் கொண்டு இயங்கிவருகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் நம்முடைய பகுதியைச் சேர்ந்தவர்; தமிழ்வழியில் படித்தவர்; ஏழை மீனவக் குடும்பத்தில் இருந்து இவ்வளவு பெரிய பதவிக்கு வந்தவர்; எளிமையானவர் என்று பெயர் பெற்றவர். இவ்வளவு புகழ் பெற்ற ஒருவர் காசு வாங்கிக்கொண்டு ஏமாற்றுகிறார் என்றெல்லாம் கண்மூடித்தனமாக நாங்கள் சொல்லவில்லை; சான்றுகள் எவையும் இன்றி அப்படிச் சொல்வது பொருத்தமும் இல்லை. அப்துல் கலாம் ஆனாலும் சரி! அன்னை தெரசாவானாலும் சரி! அறிஞர் அண்ணாவானாலும் சரி! ‘சரி என்றால் சரி என்று சொல்வோம்! தவறென்றால் தவறு என்று சொல்வோம்!’ ‘நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே!’ என்றல்லவா தமிழ் நமக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறது! முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு கலாம் அவர்கள், செல்லும் இடமெல்லாம் திருக்குறள் சொல்லும் இயல்புடையவர். அந்தத் திருக்குறள்
“எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் கேட்ப(து) அறிவு” என்று தானே நமக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறது! ஆக, ஒரு கருத்தைக் கலாம் சொன்னாலும் சரி, யார் சொன்னாலும் சரி, ‘மெய்ப்பொருள் காண்பது’ நம்முடைய கடமையாகிறது அல்லவா?
நீங்கள் சொல்வது எல்லாம் சரி என்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொள்வோம். உங்கள் போராட்டத்தை அறிஞர்களுள் ஒருவராவது ஆதரிக்கிறாரா?
புகழ்பெற்ற அணுவியலாளர்களுள் ஒருவராகத் திகழும் முனைவர் பரமேசுவரன் (பாபா அணு ஆராய்ச்சி நிறுவனம்), சப்பான் (புகுசிமா) அணுமின் திட்டத்தில் பணியாற்றிய முனைவர் யமுனா, பேராசிரியர் வி. சிவசுப்பிரமணியன், அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் முனைவர் டி.டி. அசித்குமார் என அடுக்கிக்கொண்டே போகலாம். (http://www.dnaindia.com/india/report_top-indian-scientists-to-launch-nation-wide-protest-for-ban-on-nuclear-plants_1600845-all)
நீங்கள் சொல்வதை எல்லாம் பார்க்கும் போது கூடங்குளம் அணு உலையை எதிர்க்க வேண்டும் என்று தான் தோன்றுகிறது. ஆனால் அங்கு போராடுபவர்களுக்கு (கூடங்குளம் திட்டத்தில் இரசியாவின் பங்கு இருப்பதால்) அமெரிக்கா பணம் கொடுப்பதாகச் சொல்கிறார்கள். அதை எப்படி ஏற்றுக்கொள்வது?
கூடங்குளத்தில் மக்கள் சாதி, மதம், கட்சி என எல்லாவற்றையும் தாண்டி ஒற்றுமையாக அரசை எதிர்த்துப் போராடி வருகிறார்கள். அதை ஒடுக்க விரும்பும் அரசே இது போன்ற பொய்ச்செய்திகளைப் பரப்புவது வருத்தப்பட வேண்டியது மட்டுமில்லை; வெட்கப்பட வேண்டியதும் ஆகும்.
அரசு பொய் சொல்கிறது என்று எப்படிச் சொல்கிறீர்கள்?
ð இப்போராட்டத்தை நடத்துபவர்கள் அமெரிக்கத் துணையுடன் அமைக்கப்பட்டுள்ள தாராப்பூர் அணு உலை, பிரான்சு துணையுடன் அமையும் செய்தாப்பூர் அணு உலை ஆகியவற்றையும் சேர்த்தே எதிர்த்து வருகிறார்கள். தன்னுடைய துணையுடன் அமைந்துள்ள உலைகளை எதிர்ப்பவர்களுக்குக் காசு கொடுத்து அமெரிக்கா வளர்த்துவிடுமா? இது சொந்தக் காசில் ‘சூனியம்’ வைத்துக்கொள்வது போல் அல்லவா ஆகிவிடும்?
ð ஏற்கெனவே இப்போராட்ட வரலாற்றை உங்களுக்குச் சொல்லிவிட்டேன். இருபத்தைந்து ஆண்டுகளாக நடந்து வரும் போராட்டம் இன்று உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அவ்வளவு தான்! அமெரிக்கா தான் இப்போராட்டத்தைத் தூண்டுகிறது என்று சொன்னால் பாபா அணு ஆராய்ச்சி நிறுவன அறிவியலாளர் முனைவர் பரமேசுவரன், இசையமைப்பாளர் இளையராசா, நடிகர் நாசர், முன்னாள் அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டசு (அமெரிக்காவின் கோககோலா நிறுவனத்திற்கு இந்தியாவில் தடை விதித்தவர் இவர்!) ஆகியோருக்கு இருபத்தைந்து ஆண்டுகளாக அமெரிக்கா பணம் கொடுத்து வருகிறது என்று பொருளாகிறது. ‘கேட்பவன் கிறுக்கனாக இருந்தால் கேப்பைச் சட்டியில் நெய் வடிகிறது என்று சொல்வதையும் நம்புவான்’ என்று ஊர்ப்புறத்தில் பழமொழி ஒன்று உண்டு. அரசு நம்மைக் கோமாளியாக்குவதுடன் தானும் வழிதவறிச் செல்கிறது.
சரி! கூடங்குளம் அணு உலை கூடவே கூடாது என்னும் உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். அப்படியானால் மின்வெட்டைத் தீர்க்க என்ன தான் வழி?
மின்வெட்டை ஒரு நாளும் அணு மின்சாரம் தீர்த்துவிடாது. 1962ஆம் ஆண்டே, ‘இன்னும் இருபத்தைந்து ஆண்டுகளில் நாங்கள் 20000 மெ.வா. மின்சாரத்தை அணு உலைகள் வழியாக உற்பத்தி செய்து விடுவோம்’ என்று சொன்னார்கள். ஆனால் 1987ஆம் ஆண்டு ஆயிரம் மெ.வா கூடக் கிடைக்கவில்லை. அதன்பின் இரண்டாயிரமாவது ஆண்டில் நாங்கள் மொத்தத் தேவையில் பத்து விழுக்காட்டு அளவுக்கு மின்சாரம் உருவாக்கி விடுவோம் என்றார்கள். ஆனால் மூன்று விழுக்காட்டைக் கூட எட்டவில்லை. எனவே கூடங்குளம் அணு உலை நமக்கு மின் தட்டுப்பாட்டைத் தீர்க்கும் என்பது ஏட்டுச்சுரைக்காய் தான்! அது கறிக்கு உதவாது.
சரி! மாற்று என்ன? அதற்கு ஏதாவது திட்டம் வைத்திருக்கிறீர்களா?
ð தமிழகத்தில் குண்டு விளக்குகளுக்கு(‘பல்பு’) மாற்றாக சி.எப்.எல் (‘’CFL’) விளக்குகளைப் பொருத்தினால் ஒரே நொடியில் 1800 மெ.வா. மின்சாரம் மிச்சமாகும்.
ð தமிழ்நாட்டில் கயத்தாற்றில் இருந்து கன்னியாகுமரி வரை நிறுவப்பட்டுள்ள காற்றாலைகள் மூலம் நாம் நாள் ஒன்றுக்கு 3200 மெ.வா மின்சாரம் பெறுகிறோம். இந்தியாவில் இது போல் காற்றடிக்கும் கடற்கரை குசராத்து முதல் வடகிழக்கு வரை ஏழாயிரத்து ஐந்நூறு கி.மீ. நீளத்திற்கு உள்ளது. அங்கும் காற்றாலைகள் நிறுவினால் பல்லாயிரக்கணக்கான மெ.வா. மின்சாரம் பெற முடியும்.
ð இன்றுள்ள காற்றாலைகள் 11-14 கி.மீ வேகத்தில் காற்றடித்தால் சுழல்கின்றன. இவற்றை ஆய்ந்து 4-5 கி.மீ வேகத்தில் காற்றடித்தாலே இயங்கும் வகையில் காற்றாலைகள் அமைக்கலாம் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன.
ð ஒரு ச.கி.மீ. பரப்பளவில் சூரியத் தகடுகளைப் பொருத்தினால் நாள் ஒன்றுக்கு 35 மெ.வா. மின்சாரம் பெற முடியும்.
ð நம் நாட்டில் உள்ள தார் பாலைவனத்தில் 5000 ச.கி.மீ பரப்பளவில் (5000 * 35 = 175000 மெ.வா.) சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெற முடியும்.
ð தூத்துக்குடி மாவட்டத்தில் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரில் இருந்து எரிவாயு உருவாக்கப்பட்டு மின்சாரம் பெறப்படுகிறது. இருபது இலட்ச உரூபா முதலீட்டில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் மாதம் ஓர் இலட்ச உரூபா அளவுக்குப் பணம் மிச்சமாகிறது.
ð இதே போல் ஒவ்வொரு மாவட்டத் தலைநகர், நகராட்சிகள், பேரூராட்சிகள் என எங்கெல்லாம் கழிவுநீர் அரசால் சேர்க்கப்படுகிறதோ அங்கெல்லாம் ‘கழிவு நீர் மேலாண்மை’ மூலம் மின்சாரம் பெற முடியும். ஏறத்தாழ ஐந்து மெ.வா. மின்சாரத்தை ஒவ்வொரு நகராட்சியில் இருந்தும் நம்மால் பெற முடியும். இப்படிச் செய்வதன் மூலம் நகர்ப்பகுதிகளில் மின்வெட்டை உடனடியாகக் குறைக்கலாம்.
- maraththam ilar senai
தொகுப்புக்குத் துணை நின்ற படைப்புகள்:
அணு உலைகள் குறித்து, கீற்றில் வெளியான படைப்புகள் அனைத்தும்
‘கூடங்குளம் பொய்யைப் பிளந்து வாழ்வைக் காக்கும் போர்’, அ.முத்துக்கிருட்டினன், உயிர்மை, 2011 திசம்பர் இதழ்
‘கூடங்குளம்: கலாம் சொல்வதெல்லாம் உண்மை தானா?’, அ.மார்க்சு, குமுதம் தீராநதி, 2011 திசம்பர் இதழ்
www.dianuke.org இணையத்தளத்தின் சில கட்டுரைகள்
‘அப்துல் கலாமுக்குச் சில கேள்விகள்’, மாலெ தீப்பொறி, 2011 திசம்பர் தொகுதி 10, இதழ் 5
‘மாற்றுவழியில் மின்சாரம்’, நெல்லை கவிநேசன், கோகுலம் கதிர், 2011 திசம்பர் இதழ்