இராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்கட்டமாக
22 இடங்களில் ONGC மூலம் ‘மீத்தேன்’ எடுக்கும் பணி துவங்கப்பட உள்ளது. இன்று
(14.05.15) காலை 10.00 மணியளவில் கருத்துக்கேட்பு கூட்டம் இராமநாதபுரம் ஆட்சியர்
க.நந்தகுமார் தலைமையில் மாவட்ட
சுற்றுச்சூழல் அலுவலர் ராஜேந்திர பாபு, உதவி ஆட்சியர் வினித்
முன்னிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
தமிழகத்தின் இயற்கை வளமும், கனிம வளங்களும் முன்னமே சிதைக்கப்பட்டு
வருகின்றன. இராமநாதபுரம்
மாவட்டம் கடும் வறட்சியான பகுதியாகவும், சீமைக்கருவேல மரங்களின் கொடிய ஆக்கிரமிப்பால் நிலத்தடி நீர்மட்டமும்
குறைந்து பெருமளவில் விவசாயமும் அழிந்து
வருகிறது. இந்நிலையில், வளர்ச்சித் திட்டம் என்கிற பெயரில்
மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதகம் ஏற்படும் வகையில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் விவசாய
நிலங்களை கைப்பற்றி கிணறுகள் அமைப்பது மேலும் பல இடர்களை ஏற்படுத்தும். ஆகவே மறத்தமிழர் சேனை சார்பில் மாநில அமைப்பாளர் புதுமலர்
பிரபாகரன் அவர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு கடும் எதிர்ப்பை
வாக்குமூலமாகவும், எழுத்து
பூர்வமாகவும் பதிவு செய்தார்கள்.
(Ramanathapuram
PML block of Oil and Natural Gas Corporation (ONGC) நிறுவனத்தால் 493 சதுர
கிலோமீட்டர் பரப்பளவில் மீத்தேன் கிணறுகள் அமைக்க ஒப்பந்தம்
போடப்பட்டுள்ளது. தற்போது, திட்டமிடப்பட்டுள்ள பகுதியில்
தேர்த்தாங்கல் பறவைகள் சரணாலயம் மற்றும் மன்னார் விரிகுடா தேசிய பூங்கா ஆகியவை
வருகிறது. இங்கே கிணறுகள் தோண்டப்பட்டால் வன விலங்குகள்,
பறவைகள் கடுமையாக பாதிக்கப்படும். இதனால், நிலத்தடி
நீர் பாதிப்பு, நிலத்தடி நீர் அற்றுப்போதல், மண் உப்பளமாக மாறுவது, காற்று மாசுபடுவது, நிலப்பரப்பே வாழத் தகுதியற்றதாக மாறுவது என பல வகைகளில் இந்த பகுதி சீர்கெடும்.
மேலும், இராமநாதபுரம் மாவட்டத்தின் இயற்கை வளங்களையும்,
உழவுத்தொழில்களையும், பல்லுயிர் வாழ்விட கட்டமைப்புகளையும்
கருத்தில் கொண்டு காவிரிப்படுகையில் ஓ.என்.ஜி.சி ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்த கவனத்துடன், அந்நிறுவனம் இராமநாதபுரம் மாவட்டத்தில்
அமைவதை தடுக்க வேண்டுமென கடுமையாக மறத்தமிழர் சேனை வாதிட்டது.
கலந்தாய்வு கூட்டத்தில் கூடங்குளம்
போராளி முகிலன், தமிழக வாழ்வுரிமை கட்சி
நிர்வாகி ஜெரோன்குமார், தமிழர் தேசிய முன்னணி கண்.இளங்கோ, மற்றும் நாம் தமிழர் கட்சி, மதிமுக சார்பில்
நிர்வாகிகள் கலந்து கொண்டு எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.