★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Friday, July 4, 2014

ஸ்ரீமான் பாஸ்கர சேதுபதி

எழுதியவர்:உ.வே.சாமிநாதய்யர்


இராமநாதபுரம் அரசராக இருந்து புகழ்பெற்ற ஸ்ரீமான் பாஸ்கர சேதுபதியவர்களை அறியாத தமிழர் இரார்; சற்றேறக்குறைய 40 வருஷங்களுக்கு முன்பு ஒரு முறை அவர் திருவிடைமருதூருக்கு வந்து ஒரு மாதம் அத்தலத்தில் தங்கியிருந்தார். அக்காலத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தில் தலைவராக விளங்கிய ஸ்ரீ அம்பலவாண தேசிகர் திருவிடைமருதூரிலேயே இருந்து வந்தனர். இராமநாதபுர ஸமஸ்தானத்திலிருந்து திருவாவடுதுறையாதீனத்திற்கு மகமைகளும் வேறு வரும்படிகளும் உண்டு. ஆதலின் இரண்டு இடங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அம்பலவாண தேசிகர் அரசரையும் அவருடைய பரிவாரங்களையும் மிகவும் செவ்வையாக உபசரித்து வந்தார். அவருடைய உபசாரங்களிலும் ஸ்ரீ மகாலிங்கமூர்த்தியின் தரிசனத்திலும் சேதுபதி மன்னர் ஈடுபட்டு மகிழ்ந்தனர். அச்சமயம் ஒவ்வோரு நாளும் ஒரு திருவிழாவாக இருந்தது.


அரசருக்கும், உடனிருக்கும் தானாதிகாரி தர்மாதிகாரி முதலிய உத்தியோகஸ்தர்களுக்கும், ஏனையவர்களுக்கும் தனித்தனியே ஏற்ற விடுதிகள் அமைக்கப்பட்டிருந்தன. வெளியூர்களிலிருந்து செல்பவர்கள் பலர் வந்து தேசிகரையும் அரசரையும் பார்த்து சிலதினம் இருந்து ஸல்லாபம் செய்து மகிழ்ந்து சென்றார்கள். தஞ்சாவூர் மகாராஷ்ட்ர அரச குடும்பத்தைச் சேர்ந்த சிலர் வந்து அரசரைப் பார்த்துவிட்டுச் சென்றார்கள். சிறந்த அறிவாளியாகிய சேதுபதி மன்னர் திருவிடைமருதூரிலுள்ள திருக்கல்யாண மண்டபத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் சில பிரசங்கங்கள் செய்தனர். அப்போது கும்பகோணம் முதலிய இடங்களிலிருந்து பலர் வந்து கேட்டு இன்புற்றனர்.

அச்சமயம் மகாசிவராத்திரி புண்ணிய காலம் வந்தது. இயல்பாகவே மகாலிஙக மூர்த்திக்கு அபிஷேகம் முதலியன நன்றாக நடை பெறும். அரசர் வந்திருந்ததனால் அந்த வருஷம் பின்னும் மிகுதியானாளவில் அவை நடைபெற்றன. பாஸ்கர சேதுபதி மன்னர் அன்று மாலையில் தன்னுடைய பூஜையை முடித்துக் கொண்டு ஆலயம் சென்று சிவதரிசனம் செய்து வந்தார். அவருடன் இருவர் இருந்து அவரது ஆத்மார்த பூஜைக்குரிய தொண்டு செய்வது வழக்கம். அவ்விருவரும் தோற்றப் பொலிவும் சீலமும் உடையவர்கள். அவ்ர்களுள் ஒருவருக்குச் சிவராத்திரியன்று மாலையில் வாந்திபேதி கண்டது. தக்க வைத்தியர்கள் கவனித்தும் அந்நோய் நீங்காமல் மறுநால் காலையில் மரணமெய்தினார். அதனால் பாஸ்கர சேதுபதிக்கு ம்னவருத்திம் மிகுதியாக உண்டாயிற்று. சிவராத்திரிக்கு மறுநாள் அரசர் மாயூரம் சென்று ஸ்வாமி தரிசனம் செய்ய எண்ணியதால் அதற்குரிய ஏற்பாடுகள் மாயூரத்தில் செய்யபட்டிருந்தன. அர்சர் தம் பரிவாரங்களுடன் மாயூரத்திற்குப் பகல் 12 மணி வண்டியிற் புறப்பட்டார். அவருடன் திருவாவடுதுறை மடத்து அதிகாரிகள் சிலரும் சென்றனர். திருவாடுதுறையில் பெரிய காறுபாறாக இருந்தவரும் திருவிடை மருதூரிலும் திருப்பெருந்துறையிலும் கட்டளை வேலைபார்த்துப் பல திருப்பணிகள் செய்தவருமாகிய ஸ்ரீ சுப்பிரமணியத் தம்பிரானென்பவரும் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளும் பொருட்டு சென்றார்.

மாயூரத்தில் திருவாவடுதுறை யாதீனத்துக்குரிய கட்டளை மடமொன்றுண்டு. அங்கே பரந்த இடங்கள் இருந்தன. அவ்விடங்களில் அமைக்கப் பட்டிருந்த விடுதிகளில் அரசரும் பிறரும் தங்குவதற்குரிய வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

சேதுபதி வேந்தர் மாயூரம் ஸ்டேஷனில் இரண்டு மணிக்கு வந்து இறங்கினார். அதே வண்டியில் கும்பகோணத்திலிருந்தும் பலர் வந்திறங்கினர். அரசருக்காகவும், உடன் வந்தவர்களுக்காகவும் பலவகையான பல்லக்குகளும் வண்டிகளும் வந்திருந்தன. அவரவர்கள் தங்கள் தங்களுக்கு உகந்த வாகனங்களில் ஏறிச் செல்வதற்காக மடத்து அதிகாரிகள் அவற்றைக் கொண்டு வந்திருந்தார்கள்
வந்திருந்த வாகனங்களுள் அழகிய மேனாப்பல்லக்கொன்றில் மன்னருடைய கருத்துச் சென்றது; அதில் ஏறிக்கொண்டு கட்டளை மடத்துக்குப்  புறப்பட்டனர். உடன் வந்தவர்களும் தங்கள் தங்களுக்கு இயைந்த வாகனங்களில் ஏறிச் சென்றனர். சேது வேந்தர் ஏறுவதெற்கென்று இரட்டைக் குதிரைபூட்டிய அழகிய பெரியவண்டியொன்று நிறுத்தப்பட்டிருந்தது. அதில் அவர் ஏறாமையால் அது தனியே நிறுத்தப்பட்டிருந்தது. அதில் ஏறும் குறிப்போடு அதற்கருகில் ஒரு கனவான் நின்றனர். எல்லாம் ஸ்ரீ சுப்பிரமணியத் தம்பிரானுடைய உத்தரவின்படி நடைபெற்றமையால் வண்டிக்காரன் அத்தம்பிரானது கட்டளையை எதிர்பார்த்திருந்தான். தம்பிரான் அவ்வண்டியின் அருகே வந்தார். அப்போது அங்கே நின்றிருந்த கனவான் அவரை நோக்கிக் கம்பீரமாக, “தாங்களும் ஏறலாமே” என்று சொன்னார். அக்கனவான் உயர்ந்த சட்டையொன்றை அணிந்திருந்தார்.காதில் வெள்ளைக் கடுக்கன்கள் ஒளிவிட்டன. கையில் மோதிரம் மின்னியது. நல்ல வேலைப் பாடுடைய பிரம்பொன்றை அவர் கையில் வைத்திருந்தார். அடிக்கடி மீசையை முறுக்கிக் கொண்டுநின்றார். ஒரு செல்வந்தராக யாவரும் நினைக்கும்படி அவர் இருந்தனர்.

அக்கனவான் அரசரைச் சேர்ந்தவர்களுள் ஒரு தக்க அதிகாரி என்று தம்பிரான் எண்ணினார். ‘இல்லாவிடில் இவ்வளவு உரிமையோடு பேசுவாரா?’ என்பது அவர் எண்ணம். ஆதலின், உடனே கனவானைத் தம்முடன் ஏற்றிக்கொண்டு கட்டளை மடத்திற்குப் போய்ச் சேர்ந்தனர்.. மாயூரம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து கட்டளை மடம் நான்கு மைல் தூரம் இருக்கும். இருவரும் மௌனமாகவே சென்றனர்.

அரசருக்கு நிகழ்ந்த உபசாரங்கள் அளவற்றன. உபசாரங்கள் செய்வதில் அம்பலவாண தேசிகரைப் போன்றவர்கள் உலகத்தில் சிலரே இருக்கக் கூடும். அவருடைய கட்டளையின் கீழ் ஓர் அரசருக்கு நடைபெறும் உபசாரத்தைப் பற்றி எழுதுவது எங்ஙனம் இயலும்?

கட்டளை மடத்தில் அங்கங்கே தோட்டங்களில் கொட்டகைகளும் பந்தல்களும் அமைக்கப் பெற்றிருந்தன. நாற்காலிகளும் ஸோபாக்களும் மேஜைகளும் போடப்பட்டிருந்தன. மடத்தின் பின்புறத்திலுள்ள வெளியினிடையே இருந்த ‘சவுகண்டியில்’அரசர் தங்கியிருந்தார். சுப்பிரமணியத் தம்பிரான் தம்முடன் வந்த கனவானுக்கு அங்கேயுள்ள இடங்களைக் காட்டி சௌகரியமான இடத்தில் இருக்கும்படி சொல்லிவிட்டு மற்றக் காரியங்களைக் கவனிக்கச் சென்றுவிட்டார்.

அக்கனவான் ஒரு நல்ல இடத்தில் தங்கினார். அரசருள்ள இடத்திற்குச் செல்வோரும் அங்கிருந்து திரும்பி வருவோரும் செல்லும் வழியின் இடையில் அவருக்கு இடம் அமைந்திருந்தது. அங்கே நல்ல ஸோபாக்களும், வட்ட மேஜைகளும் நாற்கலிகளும் இருந்தன.  பிற்பகலில் அரசர் வந்து இறங்கினாராதலின் அவருக்கும் பிறருக்கும் பலகாரங்கள், பழவகைகள் முதலியன அளிக்கப்பட்டன. அரசருள்ள இடத்திற்கு அவற்றை மடத்து வேலைக்காரர்கள் எடுத்துச் சென்றார்கள். இடையே தங்கியிருந்த கனவான், ”என்ன அது?” என்று கேட்டார். அவர்கள், “பலகாரங்கள்” என்றார்கள். “இங்கே கொண்டு வாருங்கள்; என்ன என்ன கொண்டு போகிறீர்கள்? எல்லாம் சுத்தமான நெய்யில்; செய்தவைகளா?” என்று அவ்ர் கேட்டார். வேலைக்காரர்கள் அக்கனவானிடம் அவற்றைக் கொண்டு சென்றார்கள். அவ்ர் ஒவ்வோரு வகையிலும் சிறிது சிறிது எடுத்து வைக்கச் செய்து உண்டு சுவை பார்த்தார்; “பேஷ்! நன்றாக இருக்கிறது, கொண்டு போங்கள்” என்று அனுமதி கொடுத்தார்.

வேலைக்காரர்கள் அக்கனவானுடைய தோற்றத்தாலும், சிறிதேனும் அச்சமின்றி அதிகாரத்தொனியோடு பேசும் பேச்சாலும் அவர் அரசருடைய அதிகாரிகளுள் முக்கியமானவர் என்று எண்ணினார்கள். அரசருடைய உணவில் குற்றமில்லாதிருப்பதை அறிந்து கொள்ள அரண்மனையில் ’உண்டுகாட்டிகள். என்று ஒருவகையினர் இருப்பதுண்டு. அவர்கள் அரசருக்குரிய உணவை அவருக்கு முன்பு உண்டு குற்றமற்ற தென்று உணர்ந்த பின்னரே அவ்வுணவு அரசருக்கு அளிக்கப்படும். அவர் அத்தகையவர்களில் முக்கியமானவராக இருக்க்கலாமென்று சிலர் எண்ணினர்.

கனவான் திருப்தியோடு அநுமதி கொடுத்ததனால் வேலைக்காரர்கள் மிக்க மகிழ்ச்சிபெற்றுப் பலகார முதலியவற்றை அரசருள்ள இடத்திற்குக் கொண்டு சென்றார்கள். அப்பால் அவர்கள் எதைக் கொண்டுபோனாலும் தாமாகவே அக்கனவானிடம் காட்டிவிட்டு அநுமதி   பெற்றுச் செல்லத் தலைப்பட்டார்கள். கனவானும் ஒவ்வொன்றையும் நாவாரச் சுவைத்து வயிறார உண்டு வந்தனர். இடையிடையே,”இரண்டுகைகளிலும் எடுத்துச் செல்லுங்கள்”, “அதை மூடிக்கொண்டு போங்கள்” என்பன போன்ற சில கட்டளைகளை இட்டுவந்தார்.

அரசரிடம் செல்வோர்களை இங்ஙனம் அதிகாரம் செய்ததோடல்லாமல் அரசரிடமிருந்து வரும் வேலைக்காரர்களிடமும் அக்கனவான், “எல்லாம் சரியாக நடக்கின்றனவா? அந்தப்பக்ஷணம் எப்படி? இன்னும் யாருக்காவது வேணுமா?” என்று சில கேள்விகளையும் கேட்டார். மடத்தைச் சேர்ந்த அதிகாரியாக அவர்கள் அவரை எண்ணி அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் மரியாதையாக விடையளித்துச் சென்றார்கள் இங்ஙனம் இருசாராராலும் மதிக்கப்பட்டு விருந்துணவை எல்லோருக்கும் முதலில் சுவைத்துக் கொண்டு சுகமாக அவர் இருந்துவந்தார்.

பாஸ்கர சேதுபதியரசர் இரண்டு மூன்று நாட்கள் மாயூரத்திலேயே தங்கியிருந்து அயலிலுள்ள ஸ்தலங்களைத் தரிசனம் செய்துவந்தார். நான் அக்காலத்தில் கும்பகோணம் கலாசாலையில் இருந்தேன். எனக்கு விடுமுறை நாள் இருந்தமையால் நானும் திருவிடை மருதூருக்குச் சென்று அரசரது விருப்பத்தின்படி அங்கிருந்து மாயூரத்திற்குப் போனேன்.

மூன்றாம் இரவு எட்டு மணிக்குச் சேதுபதி மன்னருக்குத் திருவிடை மருதூரிலிருந்து தந்தியொன்று வந்தது. அதில் அரசருடைய பூஜா கைங்கரியம் செய்பவர்களில் மற்றொருவரும் இறந்துவிட்டார் என்ற செய்தி இருந்தது. முதலில் ஒருவர் இறந்து போனதனாலுண்டான வருத்தமே அரசருக்கு அதிகமாக இருந்தது. அவர் திருவிடை மருதூரிலிருந்து புறப்படுங்காலத்தில் மற்றொருவருக்கும் சிறிது வாந்திபேதி கண்டது. அவரும் இறந்துவிட்டாரென்ற செய்தியை அறிந்த அரசருக்கு ஒன்றும் தோன்றவில்லை. பேசாமல் தலை குனிந்தபடியே துயரத்தில் மூழ்கியிருந்தார். அவருக்கு அருகில் சென்று ஆறுதல் கூறுதற்கும் பேசுவதற்கும் யாவரும் அஞ்சினர். அங்கே வந்திருந்த பல்லவராயப்பட்டு அழகப்ப பிள்ளை, வல்லம் பரமசிவம் பிள்ளை முதலிய பெரிய செல்வர்கள் பலரும் கூடி எவ்வாறேனும் அரசரோடு பேசி அவருடைய துக்கத்தை மாற்றவேண்டு்மென்று யோசித்தார்கள். ”யார் முதலில் போய் பேசுவது?” எனற கேள்விக்கு விடை பகர்வார் ஒருவரும் இல்லை. அப்பால் அவர்கள் சுப்பிரமணியத் தம்பிரானிடம் தம் கருத்தை விண்ணப்பித்து அவரையே போகும்படி வேண்டினர். அவரும் அரசரை அணுக அஞ்சினார் இங்ஙனம் ஒன்றுகூடி ஒருவழியும் தெரியாமல் கவலையுற்று, அங்கே வந்த என்னிடம் தெரிவித்தனர். அவர்களுடைய முகவாட்டத்தின் காரணத்தையும் விஷயத்தையும் உணர்ந்தேன்; ”ஏதோ ஒருவாறு முயன்று பார்க்கலாம்“ என்று சொல்லிவிட்டு யாவரையும் அழைத்துக்கொண்டு சேதுபதியார் இருக்குமிடம் சென்றேன். அவரோ எங்கள் வரவைக் கவனிகவும் இல்லை; தலை நிமிரவுமில்லை; கற்சிலையைப் போல் இருந்த இடத்திலேயே அமர்ந்திருந்தார். அவர் அங்ஙனம் இருந்ததினாலேயே அவருடைய மனத்துள் இருந்த துக்கத்தை ஒருவாறு அளந்து உணர்ந்தேன்.

”அவ்விடத்துக்குத் தெரியாததல்ல. நம்முடைய இஷ்டப்படி என்ன நடக்கிறது? ஈச்வர சங்கல்பத்தை யார் மாற்றக்கூடும்?” என்று துக்கம் விசாரிக்கத் தொடங்கினேன்; அரசர் தலை நிமிரவில்லை.

”வந்த இடத்தில் இப்படி நேர்ந்தது மனத்துக்குக் கஷ்டம் தரக்கூடியதுதான். ஆனாலும் மகாலிங்க மூர்த்தியின் நினைவாகவே அவர்கள் காலமாகி யிருக்கவேண்டும். அந்த இரண்டு ஆத்மாக்களும் நல்ல கதியடையு மென்பதில் சந்தேகமேயில்லை. பெரிய விருந்தில் அதிகமாகச் சாப்பிட்டிருக்கலாம். அதனால் உண்டான அஜீர்ணத்தினால் இப்படி நேர்ந்துவிட்டது. ஒருவர் போனாரென்றால் மற்றொருவருமா போகவேண்டும்? இந்த இருவருடைய கதியைப் பார்க்கும் போது எனக்கு வேறு ஒரு கவலை உண்டாகிவிட்டது. கவலைக்கிடமான மனுஷர் ஒருவர் இவ்விடத்திலும் இருக்கிறார். அவர் செய்யும் காரியங்களைப் பார்க்கையில் அவருக்கு எந்த சமயத்தில் என்ன நேருமொவென்ற பயம் எல்லோருக்கும் உண்டாகி யிருக்கிறது” என்றேன்.

” என்ன?” என்று அரசர் தலை நிமிர்ந்து கேட்டார்..

”இந்த விஷயத்தை நினைத்தால் ஒரு பக்கத்தில் ஆச்சரியமும் கவலையும் உண்டாகின்றன. இவ்விடத்தில் ஒரு கனவான் இருக்கிறார். அவ்ர் இந்த மூன்று நாட்களாக இவ்விடத்துக்கு வரும் ஆகாரங்களை யெல்லாம் வாய் கொண்ட மட்டும் சாப்பிட்டு வருகிறார். அரண்மனையைச் சேர்ந்தவர்கள் அவரை மடத்து அதிகாரியாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். மடத்தைச் சேர்ந்தவர்களோ மகாராஜாவைச் சேர்ந்தவர்களாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அவரோ இரண்டு பக்கத்தாரையும் ஏமாற்றி அதிகாரம் செய்துகொண்டு கிடைத்தவற்றையெல்லாம் உண்டு வருகிறார். அவர் எப்படிப் பட்டவராக  இருந்தாலும் குற்றமில்லை; பின்னால் ஏதும் விபரீதம் உண்டானால் என்ன செய்வதென்றுதான் யோசிக்க வேண்டியிருக்கிறது ! என்ன செய்வது? சபலம் யாரைத்தான் விடுகிறது?” என்று சொல்லி அந்தக் கனவான் வண்டியிலிருந்து இறங்கினது முதல் யாதொரு சம்பந்தமு மில்லாமல் உபசாரங்களைப் பெற்றுவருவதை விரிவாகக் கூறினேன்.

அரசருக்கு உடனே சிரிப்பு வந்துவிட்டது; “அதென்ன சங்கதி? எங்கே இருக்கிறான் அந்த மனுஷன்?” என்று சொல்லிக் கொண்டே எழுந்தார். அழையா விருந்தினராகிய அந்தப் போலிக் கனவானைப் பார்க்க யாவரும் புறப்பட்டனர். தம்பிரானோ மிக்கக் கோபத்தோடு விரைவாக முதலிற் சென்றனர். ஆரம்பத்தில் மோசம் போனவர் அல்லவா? தம்பிரான் வருவதைக் கண்ட அக்கனவான், “வருங்கள் வாருங்கள்” என்றார். தம்பிரானோ கோபத்தோடு,”யாரடா நீ?” என்று கேட்டார்.. “நானா? நான் தஞ்சாவூர் ராஜவம்சத்தைச் சேர்ந்தவனென்பது தெரியாதா?” என்றார் கனவான். இருவருக்கும் சிறிது வாக்குவாதம் நிகழ்ந்தது. அதற்குள் மற்றவர்களும் வந்துவிட்டார்கள். அந்தக் கனவானை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கேள்வி கேட்கத் தொடங்கினர். வேலைக்காரர்கள் சிலர் அவரை வெளியிலேயே அழைத்துச் சென்றனர்.

சேதுபதி மன்னருக்கிருந்த துயரம் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டது.; “என்ன தைரியம்!?” என்று சொல்லி நகைத்தார். அவருடைய துயரம் மாறியதைக் கண்டு யாவருக்கும் ஆறுதல் உண்டாயிற்று. சுப்பிரமணியத் தம்பிரானும் மற்றச் செல்வர்களும் என்னை நோக்கி,”இந்த விஷயம் உங்களுக்கு எப்படித்தெரிந்தது?” என்று கேட்டார்கள்.

“அந்த மனிதர் கும்பகோணத்தில் பொடிக்கடை வைத்திருக்கிறார். மகாராஷ்ட்டிரர். சில சிப்பந்திகளை வைத்துக்கொண்டு கௌரவமாக இருக்கிறார். அவரை எனக்குத் தெரியும்; என்னை அவருக்குத் தெரியாது. அவரை நான் ஆரம்பத்திலிருந்தே கவனித்து வந்தேன்” இதைப்பற்றி நாம் ஏன் கவனிக்கவேண்டுமென்று விட்டுவிட்டேன். இந்தச் சமயத்தில் வேறு வழியில்லை. மகாராஜாவினுடைய துக்கத்தை மாற்றுவதற்கு அவர் கதை உபயோகமாயிற்று. பாவம்! என்னால் அவருடைய வேஷம் வெளிப்பட்டது” என்றேன். அன்று முழுவதும் அரசரும் மற்றவர்களும் கல்யாணங்களிலும் வேறு விசேஷங்களிலும் அழையா விருந்தாக வந்து நுழைந்துகொண்டு ஆரவாரம் செய்பவர்களைப் பற்றியே பேசிப் பொழுது போக்கினார்கள்.