கண்ணகி... மாதவி...கோப்பெருந்தேவி...
கவிக்கோ இளங்கோவடிகள் படைத்த சிலப்பதிகாரத்தில் கண்ணகி, கோப்பெருந்தேவி மற்றும் மாதவி என நாம் 3 கற்புக்கரகியர்களை காணலாம். இந்த மூவரில் கற்பு நெறியில் சிறந்தவர் யார் என்பதை ஆராயப் போகிறோம். சிலப்பதிகார கற்பு நெறியை 3 வகையாக பிரிக்கலாம், அது முதற்கற்பு, இடைக்கற்பு மற்றும் கடைக்கற்பு ஆகும்.
கோவலனை மணந்ததால் கண்ணகி அவனது மனைவியானாள். மனைவி என்பவள் கணவனுக்கு கட்டுப்பட்டவள். கோவலன் என்ன தவறு செய்தாலும் அதை கண்ணகி பொறுத்து கொள்ளதான் வேண்டும். கணவனுக்கு மனைவி கட்டுப்பட்டவளாக, கற்பு நெறி காப்பவளாக இருப்பது ஆச்சரியமில்லை. அது அவளது கடமை. எனவே கண்ணகியின் கற்பு நேறி கடமையாகிவிடுகிறது.
ஆனால் மாதவி அப்படியல்ல. தேவதாசி குடும்பத்தில் பிறந்தவள். கோவலனின் ஆசை நாயகி. அவனது மகளான மணிமேகலையை கருவில் சுமந்து பெற்றெடுத்து, அப்பெண்னை துறவியாக வளர்த்தவள். கோவலன் பிரிந்து சென்ற பிறகு மாதவி நினைத்திருந்தால் வேறொரு செல்வந்தருக்கு ஆசை நாயகி ஆகி இருக்கலாம். ஆனால் அவள் அப்படி செய்யவில்லை. கோவலனை மானசீக கணவனாக ஏற்று வாழ்ந்தவள், கற்பு நெறி காத்தவள். மாதவியின் கற்பு நெறி போற்றுதலுக்குரியது.
அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும் என்பதற்கு எடுத்துக் காட்டு, மதுரையை ஆட்சி செய்த பாண்டியன் நெடுஞ்செழியன் மன்னன். கோவலனுக்கு தவறான தீர்ப்பு வழங்கியதாலும் கண்ணகிக்கு அநீதி இழைத்ததாலும், அவையில் உடைபட்டு கிடந்த சிலம்பை போல நெஞ்சு வெடித்து உயிரிழந்தான். நெடுஞ்செழிய மன்னரின் மனைவி, அரசி கோப்பெருந்தேவி கணவன் உயிரிழந்ததை கண்ட அதிர்ச்சியில் அவளும் உயிரிழந்தாள். கணவன் இறந்த பிறகு உயிர் வாழ நினைக்காத மனைவியின் கற்பு நெறி போற்றுதலுக்குரியதுதான், இருந்தாலும் கண்ணகியை போல கோப்பெருந்தேவியின் கற்பு நெறியும் கடமையாகிவிடுகிறது.
எனவே சிலப்பதிகாரத்தில் காணப்படும் கற்பு நெறி ஆய்வுபடி முதற்கற்பு மாதவிக்கும் இடைக்கற்பு கோப்பெருந்தேவிக்கும் கடைக்கற்பு கண்ணகிக்கும் கிடைக்கிறது. கண்ணகிக்கு ஏன் கடைக்கற்பு? கோப்பெருந்தேவிக்கு ஏன் இடைக்கற்பு? என்றால், கணவன் கொலையுண்டதால் கண்ணகி மதுரையை எரித்தாள். ஆனால் கோப்பெருந்தேவி, கணவன் உயிரிழந்தால் தனது உயிரையே நீத்தாள். உயிரைவிட கண்ணகியின் கோபம் பெரிதல்ல என்பதால் கோப்பெருந்தேவிக்கு இடையும் கண்ணகிக்கு கடையும் கொடுக்கப்பட்டுள்ளது.