நெல்லை  மாவட்டம் ராதாபுரம் தாலுகா கூடங்குளம் கடலோரத்தில் அமைக்கப்பட்டு உள்ள  அணுமின் நிலையத்தை மூடக்கோரி அந்த பகுதி மக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி  வருகிறார்கள். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு அமைத்த  நிபுணர் குழுவினர், போராட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 
தமிழக  அரசு சார்பில் அமைக்கப்பட்ட 4 பேர் கொண்ட நிபுணர் குழுவினரும் கூடங்குளம்  அணுமின் நிலையத்தை ஆய்வு செய்து, போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை  நடத்தினர். 
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு அம்சங்கள் திருப்திகரமாக உள்ளதாக தமிழக குழுவினர் அறிவித்தனர். 
இந்த  நிலையில், போராட்டக்குழு சார்பில் 72 மணி நேர உண்ணாவிரதம் நேற்று 3-வது  நாளாக தொடர்ந்தது. உண்ணாவிரத பந்தலில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்  உதயகுமார் பேசியதாவது:- 
போராடும் மக்கள் சார்பில்  தமிழக அரசு அமைத்த நிபுணர் குழுவிடம் 2 கோரிக்கைகள் வைக்கப்பட்டன. போராடும்  மக்களை சந்திக்காமலும், போராட்டக்குழுவினர் சார்பில் அமைக்கப்பட்ட நிபுணர்  குழுவை சந்திக்காமலும் தமிழக குழுவினர் சென்னை சென்றதன் மூலம் நமது 2  கோரிக்கைகளும் ஏற்கப்படவில்லை. 
தமிழக குழுவினர்  மீண்டும் கூடங்குளம் வந்து போராடும் மக்களை சந்திக்க வேண்டும் என்று கோரி  இந்த 72 மணி நேர உண்ணாவிரதத்தை நடத்தி வருகிறோம். நிபுணர் குழுவினர் தமிழக  அரசிடம் அளிக்கும் அறிக்கையில், கூடங்குளம் அணுஉலை பாதுகாப்பானது என்று  கூறப்பட்டு இருந்தால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கையை கொளுத்துவோம்.  
நமது கோரிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர்  ஜெயலலிதாவுக்கு மீண்டும் கடிதம் எழுதி உள்ளேன். சங்கரன்கோவில்  இடைத்தேர்தலுக்கு முன்பாக தமிழக அரசிடம், கூடங்குளம் பகுதி மக்களின்  உணர்வுகளுக்கு எதிராக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டால், மக்களை திரட்டி  அணுமின் நிலையத்தை முற்றுகையிட்டு போராடுவோம். 
இவ்வாறு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் பேசினார். 
கூடங்குளம்  பகுதியை சேர்ந்தவர்கள் நடத்தும் 72 மணி நேர உண்ணாவிரதம் இன்று  (வியாழக்கிழமை) இரவில் முடிவுக்கு வருகிறது. போராட்டத்துக்கு ஆதரவு  தெரிவித்து மீனவர்கள் யாரும் நேற்றும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.  கூடங்குளத்தில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

