மறத்தமிழர் சேனை சார்பில் மறவர்களின் மரபுரிமை சொத்தான கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி இராமேஸ்வரம், பசும்பொன்
உ.முத்துராமலிங்கத் தேவர் நகரில் 21-08-2010 சனிக்கிழமை அன்று மாலை 3.00 மணியளவில்
‘மறவர் மண்ணுரிமை மாநாடு’ நடைபெற்றது. மாநாட்டில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் இராமேஸ்வரம் வேர்கோடு, தேவர் நகர் பகுதி பொதுமக்கள் தூரி முனியசாமித்தேவர் அவர்கள் தலைமையில் பெருந்திரளாக கலந்து கொண்டனர். மறத்தமிழர்
சேனை மாநில பொருளாளர் இ.ரவிராஜ சேதுபதி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
கெளரவத் தலைவர் முகவைதம்பி இ.கணபதி தேவர் அவர்கள் முன்னிலை வகிக்க
மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் தலைமை வகித்தார். தேசிய பார்வர்ட் பிளாக்
தலைவர் ந.பசும்பொன் பாண்டியன் அவர்கள், தமிழர் களம் பொதுச்செயலாளர் அரிமாவளவன் அவர்கள், ராணி வீரப்பேரரசி வேலுநாச்சியார் அறக்கட்டளை தலைவர் சிவகங்கை ஜெ.கோபால்துரை
அவர்கள், தேவர் பேரவை இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் வீ.கா.இராமசாமித்தேவர்
அவர்கள், மற்றும் மாவட்ட இளைஞர் சேனை செயலாளர் தேவிபட்டினம் பூ.முனியசாமி
அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
மாநில அமைப்பாளர் தமது உரையில் “பசும்பொன் தேவர், மன்னர்
பாஸ்கர சேதுபதி, வேலுநாச்சியார், பாம்பன்
சுவாமிகள் போன்றோர் பிறந்த புண்ணிய பூமியாம்
சேதுசீமையில் இன்று நம் மண் நம்மிடம் மீண்டும் வரவேண்டும் என்கிற நவீன போரைத்துவக்கி
இன்று இராமபிரான் வந்து வணங்கி சென்ற இராமேஸ்வரம் தீவில் ஒன்றிணைந்துள்ளோம். கி.பி 1480 ஆம் ஆண்டு ஏற்பட்ட
கடல் கொந்தளிப்பு காரணமாக இராமேஸ்வரம் தீவும் அதைச் சுற்றி 11 தீவுகளும்
தோன்றியுள்ளன, இத்தீவுகள் தமிழகத்தின் நிலப்பரப்பில் இருந்துதான்
துண்டிக்கப்பட்டன என்று இராமநாதபுரம் மாவட்ட அரசு வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது.
குத்துக்கால் தீவு, இராமசாமித் தீவு, மண்ணாலித் தீவு, கச்சத் தீவு, குருசடித் தீவு, நடுத் தீவு, பள்ளித் தீவு ஆகிய 8 தீவுகளும்,
69 கடற்கரை
ஊர்களும் நமது சேதுபதி
மன்னர்களுக்குச் சொந்தமாக இருந்தன. அந்த எட்டுத் தீவுகளில் ஒன்றுதான் கச்சத்தீவு. 1947 இல் நாடு விடுதலை அடைந்ததும், ஜமீன்தார் ஒழிப்புச் சட்டம் வந்தது அதனால்
மன்னரின் உடைமைகள் மக்கள் உரிமையானது. சேதுபதி மன்னர்கள் ஆட்சியில் இருந்தவரை
இந்தத் தீவு முத்துக்குளிக்கும் இடமாகப் பயன்பட்டு வந்தது. அத்துடன் சித்த
மருத்துவத்திற்குப் பயன்படும் மூலிகைகளின் சோலை வனமாகவும் இருந்தது. இராமநாதபுரம்
மக்கள் இங்கே
கிடைத்த உமிரி என்ற செடிவகையைத் தீராத நோய்களுக்குச் சிறந்த மருந்தாக
நம்பினர். அத்துடன் சாயவேர் போன்ற வேர் வகைகளும் இங்கிருந்து வெட்டி எடுக்கபட்டுள்ளது.
28.06.1974-ல் கச்சத் தீவை இந்திரா தலைமையிலான இந்திய அரசு இலங்கைக்கு தாரை வார்த்தது, அந்த ஒப்பந்தத்தில் இந்திய மற்றும் இலங்கை பிரதமர்கள்
கையெழுத்திட்டனர். ஆனாலும், ‘தமிழக மீனவர்கள் கச்சத் தீவை ஒட்டி மீன்
பிடித்துக் கொள்ளலாம். மீன் பிடிக்கும் வலைகளை கச்சத் தீவில் உலர வைக்கலாம், ஒய்வு
எடுத்துக்கொள்ளலாம். இது தவிர, கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில்
கலந்து கொள்ளலாம் எனும் உரிமை தமிழகத்திற்கு உள்ளது’ என்றெல்லாம் விளக்கமளித்தது, நமது பூர்வீக மண்ணை மாற்றானுக்கு தாரை வார்ப்பதா
என்று கொந்தளித்துக் கிளம்பிய தமிழக மக்களை சமாதானப்படுத்தியது அப்போதைய
மத்திய காங்கிரஸ் அரசு. அந்த சமயத்தில் தமிழகத்தில் கருணாநிதி தலைமையிலான அரசு கண்டும் காணாதிருந்தது.
தேவர் தந்த தேவர் பசும்பொன் மூக்கையாத்தேவர் அவர்கள் கடுமையாக எதித்த போதும் நமது மண் மாற்றானுக்கு கொடுக்கப்பட்டது. ஆனால், தற்போது தமிழக மீனவர்கள் சிங்கள இனவாத அரசால் தொடர்ந்து சுடப்பட்டும், சிறைபிடிக்கப்பட்டும் வரும் நிலையில் கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்த இந்தியாவின் ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும் என்றும், உடனடியாக கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த மாநாட்டின் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்” என்று உரை நிகழ்த்தினார்.
தமிழர் களம் பொதுச்செயலாளர்
அரிமாவளவன் தமது உரையில் “இந்த மாநாட்டிற்குள் நான் வந்தபோது மண்ணில் பாதி மறவர் சாதி
என்று முழக்கமிட்டீர்கள். ஒருபுறம் அந்த வேகத்தை பார்த்து மகிழ்ந்த நான், தமிழரின் மண்ணும் மானமும் எப்படிக் குறுகிப்
போனது என்றும் எடுத்துரைக்க விரும்புகிறேன். பாராண்ட இத்தமிழினம் இன்று பிறதேசி இனம்போலச்
சொந்த மண்ணிலேயே அந்நியப்பட்டுக் கூனிக்குறுகி கிடக்கிறது. தெற்கே கடல் கொண்ட குமரிக்கண்டம்
முதல் வடக்கே இமயம் வரை ஆட்சி செய்த தமிழினம் தொல்காப்பியம் எழுதப்பட்டபோது வேங்கடமலைக்குத்
தெற்கே என்று குறுகிப் போனது. பின்னர் 1956ல் இன்னும் வளமையான பகுதிகளைத் திராவிடர்களிடம்
இழந்தோம். எஞ்சியதும்கூட வந்தேறிகளின் வேட்டைக்காடாகிவிட்டது. தமிழனுக்கு இன்று ஆட்சி
இல்லை, அதிகாரம் இல்லை, வல்லமை இல்லை, வாழ்வும் இல்லை என்றாகிவிட்டது.
வரலாறு நெடுக தமிழன் வீழ்த்தப்பட்டிருக்கிறான்.
சயாமில் ஓர் இலக்கம் சப்பானியர்களால் கொல்லப்பட்டோம், மும்பையிலிருந்து விரட்டப்பட்டோம், கருநாடகத்தில் கொல்லப்பட்டோம், பர்மாவிலிருந்து விரட்டப்பட்டோம், ஈழத்தில் அழிக்கப்பட்டோம். தாய்த்தமிழகம் அனைத்தையும் பார்த்துவிட்டு படுத்துக்கொண்டது. காரணம் தமிழரைப் பிடித்த திராவிடம் என்ற நச்சு நோய்.
மறத்தமிழர் சேனை உள்ளிட்ட தமிழ்ச்சாதியினரெல்லாம்
கைகோர்த்து இந்த நச்சு நாகத்தை உச்சந்தலையில் போட்டுத் தள்ளினாலொழிய நாம் எழ முடியாது.
மண்ணை ஆள முடியாது" என்றார். மாநாட்டின் நிறைவாக வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள், நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து மறத்தமிழர் சேனை இராமேஸ்வரம் நகர் செயலாளர்
பா.வழிவிட்டான் அவர்கள் உரை ஆற்றினார்.