“வரலாற்றில் முக்கியத்துவம்
வாய்ந்த ஒவ்வொரு நிகழ்வும் அது நிகழும் காலத்தில் இயல்பாக நடந்தது போலத்தான்
தோன்றும். ஆனால், அது இயல்பானதல்ல. ஒவ்வொரு நிகழ்வும்
ஒன்றோடொன்று தொடர்பாக எதையோ நோக்கி நகர்ந்து கொண்டுதானிருக்கும். அதுபோலவே, உலகமெங்கும் கடல் பரந்து
விரிந்து கிடக்கிறது என்றாலும், எங்கள் சேது நாட்டு
கடலுக்கென்று தனிச்சிறப்பு உண்டு. கிடைப்பதற்கு அரிதான முத்து எங்கள் சேதுசீமையின்
கடல்பரப்பில் கொட்டிக்கிடக்கிறது. அதைப்போல, உலகமெங்கும்
இராமனை கடவுளாக வணங்கி வந்தாலும், அந்த இராமனே வணங்கிய
லிங்கமாகிய ‘இராமலிங்கம்’ எங்கள்
நாட்டின் புண்ணியபூமியான இராமேஸ்வரத்தில் அமைந்திருக்கிறது. கிடைப்பதற்கரிதான முத்தும் இராமனே வணங்கிய
இராமலிங்கமும் இணைந்து ‘முத்துராமலிங்கம்’ ஆக தேவர் குலத்திலே ஓர் மகனாக பிறப்பெடுக்க வைத்திருக்கிறது.
பசும்பொன்
கிராமத்தில் பாண்டியர் மரபிலே மாசற்ற தங்கமென உதித்த துருவநட்சத்திரம் தான்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார். தேவர் திருமகனார் அவர்களுடைய ‘வாழ்வியல்’
முறையென்பது முற்றிலும் அறம் சார்ந்தது. ஆட்சியாளர்களின் அதிகார பலமோ, அதையும் மீறிய பணமோ ஒருபோதும் தேவரை சமரசம் கொண்டுவிடச்செய்ய இயலாத
வகையில் யாவற்றிலும் முக்தி பெற்றவராயிருந்தார்.
எந்த
நிலையிலும் முறைதவறி விடாமல், ஏழை
எளிய மக்களின் வாழக்கைத்தரம் உயர்வதற்கென தமது அரசியலை கட்டமைத்துக் கொண்டார். அதன்
காரணமாகவே இன்றளவும் அரசியல்வாதிகள் அனைவரும் தங்களது பேச்சுகளில் தேவரின் வாழ்வை; வாக்கை மேற்கோள்களாக காட்டி வருகிறார்கள்.
வடவேங்கடம்
தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகில் வாழ்ந்தவர் கோடி தாண்டும், மறைந்தவர் கோடியிலும் கோடி இருப்பர் ஆனால்
மக்கள் மனதில் அரைநூற்றாண்டுகளுக்கும் மேலாக தினந்தினம் எல்லாவற்றிலும் வாழ்ந்து
கொண்டிருக்கும் ஒப்பற்ற மாமனிதர் தேவர் ஒருவரே! எவ்வித அதிகாரத்திலும் அமராத ஓர்
எளிய மனிதனை அவரது மரணத்திற்குப்பிறகும் இந்த மண் நினைத்து பெருமிதம்
கொள்கிறதென்றால், அந்த மனிதர் வாழ்ந்த அரைநூற்றாண்டு
வாழ்க்கை என்பது அத்தகைய அற்புதங்கள் வாய்ந்தது அல்லவா ?
அப்படியென்ன
அவர் வாழ்ந்து விட்டார் இந்த மண்ணின் மன்னராக முடிசூட்டப்பட்டவரா? அடித்துப்பிடித்து மந்திரியாகவோ அல்லது
அண்டிப்பிழைத்து முதல்வராகவோ தன்னை வளர்த்துக் கொண்டவரா?
இல்லை. தெற்கத்தி மன்னர் பரம்பரையில் பிறந்திருந்தும், தமது
அரசியல் வாழ்வை முதன்முதலில் மன்னருக்கெதிராகவே துவக்கியவர் ஆவார்.
கோடி
கோடியாய் சொத்தும் பணமும் கொட்டிக்கிடக்கும் உக்கிரபாண்டியத்தேவருக்கு மகனாகப்
பிறந்திருந்தும் ஓர் ஆண்டியைப் போல எளிய வாழ்வை வாழ்ந்து காட்டியவர். ஆனாலும், இந்த மண்ணும் மக்களும் அதீத பற்றுதலோடு ‘தேவர் திருமகனார்’ அவர்களை நித்தநித்தம் வணங்கி
செல்வதற்கான காரணங்களில் முதன்மையானது அவர் வாழ்ந்த முறையும்; வாழ்வியலுக்குள் கடைபிடித்த நெறியுமே ஆகும்.
தசரதனின்
ஒழுங்கற்ற பெண்நாடல் கண்ட ராமன் சீதை தவிர்த்த பெண்ணிடத்திலே விருப்பம்
கொள்ளவில்லை. ஆதலால் ஏகபத்தினி விரதன் என்று உலகால் மெச்சப்பெற்றான் என்பர். அய்யா
உக்கிரபாண்டியர் சென்ற இடமெல்லாம் வென்றுவாழும் நிலை கண்ட தேவரோ இராமனின் நிலையும்
கடந்து உயர்ந்து நின்றார். இன்றும் எங்கள் பகுதி பெரியவர்கள் இராமனையும் விட
சிறந்தவர் தேவர் என்று பேசுவார்கள்.
தன்மீது
ஆசை கொண்ட பெண்ணின் மார்பையும்,
மூக்கையும் சிதைத்த ராமனை விட, தன்னை ஒரு பெண் விரும்ப
காரணமாகிவிட்ட மீசையை சிதைத்து, தன்னை பெண்ணொருத்தி மீண்டும்
விரும்பிவிடாதபடி முடி வளர்த்த இராமநாதபுரத்து மண்ணின் ராமன் சிறந்தவர்
என்பார்கள்.
எந்த
சொத்திற்காக பெற்ற தந்தையை எதிர்த்து நீதிமன்றம் சென்றாரோ அந்த சொத்தை அனைவருக்குமானதாக
பகிர்ந்து அளிக்கும் வகையில் பரந்த மனது கொண்டவராக தேவர் இருந்திருந்தார். எந்த
சாதியினரால் இன்று அதிகம் விமர்சனங்களை எதிர்கொள்கிறாரோ அந்த சாதியினருக்கும் கூட
அள்ளிக் கொடுத்திட தவறவில்லை. அதையும் கூட அரசு பதிவின் மூலமாக உறுதியானதாக செய்து
கொடுத்திருந்தார்.
அரசியல்
அதிகாரத்தை நோக்கி தம்மக்களை நகர்த்த முடியாத இன்றைய தலைவர்கள் ஐம்பத்து ஏழுகளின்
அரசியல் கலவரங்களையும்,
கொலையையும் காரணமாக முன்னிறுத்தி ‘சாதி தூண்டல்’ அரசியல் செய்துவருகிறார்கள். ஆனால், தேவர்
திருமகனாரோ அன்றைய காலத்திலேயே பொதுத்தொகுதியில் தாழ்த்தப்பட்ட நபரை நிறுத்தி
வெற்றிபெற வைத்தார். அவரது மரணம்வரை
அவரோடு உடனிருந்தவர்களில் அதிகமானோர் தாழ்த்தப்பட்டோரே.
யாவரையும்
அரவணைத்து செல்லுவதில் பாகுபாடின்றி முற்போக்கு அரசியலை முப்பதுகளில் துவங்கிய தேவர்
அவர்களின் சிறை வாழ்க்கை என்பது மொத்த வாழ்வின் மூன்றில் இரண்டு பாகம் ஆகும்.
எதற்கும் அஞ்சாமல் சதாசர்வகாலமும் ஆட்சியாளர்களின் கொடிய செயல்களுக்கு எதிராக
தொடர்ந்து குரல் எழுப்பிக்கொண்டேயிருந்தார்.
ஒரு
கட்டத்தில் ஆளும் காங்கிரஸ்காரர்கள் தங்களது சுரண்டல்களை செய்யாமல் இருக்க
மாட்டார்கள். அவர்களின் மக்கள் விரோத அக்கிரம செயல்கள் கூடிக்கொண்டே செல்கிறது
என்பதை உணர்ந்து... ‘உங்களால்
அக்கிரமங்கள் செய்யாமல் இருக்க முடியாது. அடியேன் வேண்டுவதெல்லாம் நீங்கள்
குறைந்தபட்ச அக்கிரமங்களைச் செய்ய வேண்டும் என்பதுதான்’ என
பொது மேடையில் முழக்கமிடுகிறார். எவ்வளவு அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் இது.
இன்றைய ஆட்சியாளர்களுக்கும் சேர்த்தே அன்றைய நாளில் தீர்க்கதரிசமானக தேவர்
திருமகனாரால் பேச முடிந்துள்ளது.
சுதந்திரத்திற்கு
முன் அந்நிய ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களைத்திரட்டி போராடியவரின் போராட்டம், சுதந்திரத்திற்குப் பின் காங்கிரஸ்
ஊழல்வாதிகளுக்கு எதிரானதாக மாறியிருந்தது. எத்தனையோ வழக்குகள்; எத்தனையோ கைதுகள்; எத்தனையோ அதிகார கொலைகள்
அனைத்துக்கும் அடிபணிந்து விடாத தேவரின் தீர்க்கமான எதிர்ப்பை சமாளிக்க அரச
பதவிகள் கூட அலங்கரிக்க காத்துக்கிடந்தன. தேவரோ யாவற்றையும் துச்சமெனக் கடந்து
கொலைப்பழி சூழ்ந்தும் கூட அதிகாரத்தின் தவறுகளுக்கு எதிராக முழுமையான வடிவம்
எடுத்து, எதிர் கொள்கை கொண்டவர்களும் கூட வணங்கிவிடும்படியாக
உயர்ந்து நின்று இந்த மண்ணை விட்டு; நம் கண்ணை விட்டு
மறைந்து ஐம்பத்து மூன்று வருடங்கள் கடந்தாகி விட்டது.
இன்று
தேவர் திருமகனாருக்கு ஊரெங்கும் சிலை வைத்தோம். வீதியெங்கும் தோரணம் கட்டி, சுவரெல்லாம் படம் ஒட்டி விழா எடுத்தோம்.
பால் ஊற்றினோம். மொட்டை அடித்தோம். முளைப்பாரி தூக்கினோம். அலகு குத்தினோம்.
ஆரத்தி எடுத்தோம். ஆளுயர மாலை சாற்றி ஆளுக்கொரு புகைப்படம் எடுத்தோம். அன்னதான
பந்தல் அமைத்து அதையே சுவரெழுதி அண்ணன் தம்பிக்கு அறுசுவை உணவு கொடுத்தோம். அகிலம்
அதிர ‘தேவர் வாழ்க’ என்று கோஷமிட்டு அதோடு
திருப்தி அடைந்தவர்களாக அமைதி கொண்டோம். இதுவா அரசியல்?
இதைத்தான் தேவர் விரும்பியிருந்தாரா?
எவ்வித
ஊடக பலமுமற்ற ஐம்பதுகளில் இந்திய அரசியலின் உச்சநாயகனாகத் திகழ்ந்த நேருவே தேவரின்
நாவண்மைக்கும், அரசியல் அறத்திற்கும்
அஞ்சி பல இடர்களை ஏற்படுத்திய போதிலும், தேய்ந்து போன
தெற்கத்தி மக்களிடத்தில் உலகநாடுகளின் அரசியலை ஓங்கிவிதைத்தவர் தேவர் திருமகனார்.
ஆனால், இன்று அவரது குருபூஜை நாளில் அவர்மீதான
பற்றுதலில் தன்னெழுச்சியாக கூடும் லட்சோபலட்சம் மக்களிடத்தில் எவ்வித அரசியல்
சிந்தனைகளையும் விதைக்காமல், ஆடல் பாடல் நிகழ்ச்சிகளையும், கச்சேரிகளையும் நடத்தி ஒரு கொண்டாட்ட நாளாகவும்,
வருடத்தில் ஒருவாரம் திருவிழா எடுப்பது போலவும், சாதியின்
பலம்காட்டும் நிகழ்வாகவும் நடத்திக் கொண்டிருக்கிறோம். அனைத்து சாதிக்கும் பொதுவான
தலைவராக வாழ்ந்து மறைந்தவரை நமது சுய விருப்புகளுக்காக கைகளில் எடுத்துக் கொண்டு
சாதிய கோசமிடுவது தன்னலம் கருதாத அந்த பசும்பொன்னை மாசுபடுத்த முயலும் செயல் ஆகாதா? தவறுகளை இன்னும் நாம் திருத்திக்
கொள்ளவில்லையே !
தேவர்
ஓர் முழுமையான அரசியல் வடிவம் ஆவார். ஒரு மக்களுக்கான தலைவர் எப்படி வாழ்வேண்டும்
என்பதை வாழ்ந்து காட்டி மறைந்திருக்கிறார். அவரது அரசியல் செயல்பாடுகளே
எல்லாவற்றிலும் உயர்ந்தது ஆகும். தன்னுடைய தனிமனித வாழ்வில் ஒழுக்கமும், நிறைவும் ஏற்பட கடைபிடித்ததே ஆன்மிக வழி.
தேசியத்தையும் தெய்வீகத்தையும் தனது இரு கண்களாக பாவித்திருந்தாலும் அரசியல்
வியாபாரிகளுக்கு எதிராகவும், முரண்களுக்கு எதிராகவும்
தொண்டாட்ற்றுவதையே கடமையாக கொண்டிருந்தார்.
வன்முறை, ஊழலலற்ற வளமான பாரதம் அமைய வேண்டுமென
விரும்பியவரின் கைகளில் இன்று ஆயுதம் கொடுத்து சுவரொட்டி அடிப்பதும், சிலை வைத்து வாகன ஊர்வலம் செய்வதும் நாம் நம்முடைய கழிவுணர்வுகளுக்கு
தவறான வடிவமைத்தல் ஆகும். இனியேனும், தேவரின் சொற்பொழிவுகளை
படித்திடுவோம்; கேட்டிடுவோம். இந்த நாடு பயன்பெற நம்மால்
இயன்ற முயற்சியை மேற்கொள்வோம். தேவரின் அரசியலே எந்த அதிகாரத்திற்கும் பணிந்து
விடாமல் தான் எடுத்த முடிவில் உறுதியாக நிற்பதும், அதற்காக
சிறைக்கு செல்வதுமே. அவர் பெயரால் அரசியல் செய்துவருகிற நாம் ஒரு சீட்டிற்காக
சமாதானமாகி விடுவதும், ஆளும் ஆட்சியாளர்களின் தவறுகளை
தட்டிக்கேட்க மக்களை பழக்காமல் இருப்பதும் எப்படி சரியான அரசியல் ஆகிவிடும்.
பத்துபேர்
ஓரிடத்தில் கூடி நின்றாலே அங்கு பக்குவமான முடிவுகள் எடுக்கப்பட்டு அரசுக்கும்
ஆள்வோருக்கும் எடுத்துச்செல்லும் போது, தேவர் திருமகனாரின் ஜெயந்தியன்று கூடும் அத்தனை லட்சம் மக்களையும் வைத்து ஓர் முடிவும்
எடுக்காமல், ஓர் இலக்கும் வைக்காமல் கடந்து போவது நாம்
தேவருக்கு செய்யும் துரோகம் ஆகாதா?”