“வரலாற்றில் முக்கியத்துவம்
வாய்ந்த ஒவ்வொரு நிகழ்வும் அது நிகழும் காலத்தில் இயல்பாக நடந்தது போலத்தான்
தோன்றும். ஆனால், அது இயல்பானதல்ல. ஒவ்வொரு நிகழ்வும்
ஒன்றோடொன்று தொடர்பாக எதையோ நோக்கி நகர்ந்து கொண்டுதானிருக்கும். அதுபோலவே, உலகமெங்கும் கடல் பரந்து
விரிந்து கிடக்கிறது என்றாலும், எங்கள் சேது நாட்டு
கடலுக்கென்று தனிச்சிறப்பு உண்டு. கிடைப்பதற்கு அரிதான முத்து எங்கள் சேதுசீமையின்
கடல்பரப்பில் கொட்டிக்கிடக்கிறது. அதைப்போல, உலகமெங்கும்
இராமனை கடவுளாக வணங்கி வந்தாலும், அந்த இராமனே வணங்கிய
லிங்கமாகிய ‘இராமலிங்கம்’ எங்கள்
நாட்டின் புண்ணியபூமியான இராமேஸ்வரத்தில் அமைந்திருக்கிறது. கிடைப்பதற்கரிதான முத்தும் இராமனே வணங்கிய
இராமலிங்கமும் இணைந்து ‘முத்துராமலிங்கம்’ ஆக தேவர் குலத்திலே ஓர் மகனாக பிறப்பெடுக்க வைத்திருக்கிறது.
பசும்பொன்
கிராமத்தில் பாண்டியர் மரபிலே மாசற்ற தங்கமென உதித்த துருவநட்சத்திரம் தான்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார். தேவர் திருமகனார் அவர்களுடைய ‘வாழ்வியல்’
முறையென்பது முற்றிலும் அறம் சார்ந்தது. ஆட்சியாளர்களின் அதிகார பலமோ, அதையும் மீறிய பணமோ ஒருபோதும் தேவரை சமரசம் கொண்டுவிடச்செய்ய இயலாத
வகையில் யாவற்றிலும் முக்தி பெற்றவராயிருந்தார்.
எந்த
நிலையிலும் முறைதவறி விடாமல், ஏழை
எளிய மக்களின் வாழக்கைத்தரம் உயர்வதற்கென தமது அரசியலை கட்டமைத்துக் கொண்டார். அதன்
காரணமாகவே இன்றளவும் அரசியல்வாதிகள் அனைவரும் தங்களது பேச்சுகளில் தேவரின் வாழ்வை; வாக்கை மேற்கோள்களாக காட்டி வருகிறார்கள்.