மறைந்த மாபெரும்
தியாகியும்,
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் உற்ற நண்பருமாகிய முதுகுளத்தூர் தூரி
கிராமத்தைச் சார்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் எம்.ஆர்.இராமசாமித்தேவர்
அவர்களுக்கு மணிமண்டபம் அமைத்திடவும், அவரது பிறந்த நாளில்
அரசு விழா எடுத்திடவும் வலியுறுத்தி தமிழக முதலைச்சரின் தனிப்பிரிவில் மறத்தமிழர்
சேனை சார்பாக மனு அளிக்கப்பட்டிருந்தது. அந்த மனு குறித்து பரிசீலிக்கும்படி
இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்திடம் முதல்வர் அலுவலகம் கோரியிருந்த நிலையில், இராமநாதபுரம், (ஊராட்சிகள்) உதவி இயக்குநர் திரு
ஆ.செல்லத்துரை அவர்கள் 28.12.16 அன்று மாநில அமைப்பாளருக்கு கடிதம்
அனுப்பியிருந்தார். அதனை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி, மறத்தமிழர்
சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் இன்று (06.01.2017)
இராமநாதபுரம் ஆட்சித்தலைவர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் “இந்திய
நாடு ஆங்கிலேயர்களின் மேலாதிக்கத்திற்கு கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த பொழுது
சுதந்திர உணர்வோடு போராடி – விடுதலை அடைந்திட பல போராட்டங்களையும், உயிர்த் தியாகங்களையும்
அதிகஅளவில் நடத்தியதோடு, சிறை வாழ்வையும் முழு மனதோடு
ஏற்றுக் கொண்டவர்கள் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் ஆவர். அந்தவகையில்
இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், மு.தூரி கிராமத்தைச் சார்ந்த எம்.ஆர்.இராமசாமித்தேவர் அவர்கள் இந்திய
சுதந்திர உணர்வோடு பலமுறை ஆங்கிலேயர்களுக்கு எதிராக செயல்பட்டு சிறை சென்று
இருந்துள்ளார்.