தமிழகத்தில் இரண்டு நாட்கள் தங்கியிருந்த பிரதமர் மன்மோகன் சிங், முல்லைப் பெரியாறு, கூடங்குளம் உள்ளிட்ட பிரச்னைகளில் வாயே திறக்காமல், நரசிம்மராவின் வாரிசு, தான் தான் என்பதை மீண்டும் நிரூபித்தார். தமிழகத்தை அலைக்கழிக்கும் இந்த முக்கிய பிரச்னைகளுக்கு பிரதமர் வருகையால் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

வாடிய பயிர்களுக்கு உயிர்நீர் வழங்கி வந்த முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில், மீண்டும் முரண்டு பிடிக்க ஆரம்பித்து விட்டது கேரளா. எல்லையில் தொடரும் தொல்லையால், இரு மாநில உறவே அந்துபோகும் நிலை. மலையாளிகள் என்றால் தமிழர்களும், தமிழர்கள் என்றால் மலையாளிகளும் பரஸ்பரம் முறைத்துக் கொள்ளும் நிலை வந்துவிட்டது. இப்படி, இரு முக்கியமான பிரச்னைகளில், தமிழகம் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் போது, பிரதமர் மன்மோகன் சிங் இங்கு வரஒப்புக்கொண்டதே ஆச்சரியம் தான். தன் நம்பிக்கை நட்சத்திரமான, உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் நிர்பந்தம் தாங்காமல் ஒப்புக்கொண்டு விட்டார்.
வந்த வேலை முடிந்தது எனக் கருதி, அப்படியே டில்லிக்கு பறந்தார்.இது, இப்பிரச்னைகளில் பிரதமரின் கருத்தறிய பெரும் எதிர்பார்ப்பு கொண்டிருந்த தமிழக மக்களுக்கு, கடும் அதிர்ச்சியையும், பெரும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.பிரதமர் கலந்து கொண்டதில் இரண்டு, தனியார் நிகழ்ச்சிகள். நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இரண்டு பிரச்னைகளை பற்றி பேச நேரமில்லாத பிரதமருக்கு, தனியார் நிறுவனங்களை வாழ்த்தி பேச நேரமிருந்திருக்கிறது.
முல்லைப் பெரியாறு பிரச்னையில் பேசி, உள்துறை அமைச்சர் சிதம்பரம் வாங்கிக் கட்டிக் கொண்டது ஞாபகத்துக்கு வந்துவிட்டது போலும். தமிழகத்தில் இன்னாள் முதல்வரிடமும், முன்னாள் முதல்வரிடமும் மனு வாங்கியது மட்டும் தான் அவர் செய்த ஒரே உருப்படியான வேலை. அதே சமயம், நாளை அவர் கேரளா சென்றால், அங்கும் உம்மன் சாண்டி மற்றும் அச்சுதானந்தனிடம் மனு வாங்கி வைத்துக் கொள்வார் என்பதில் சந்தேகமில்லை.

சென்னையில், விழா நடந்த அரங்கம், சென்னை பல்கலை நூற்றாண்டு விழா அரங்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். குறிப்பாக, விழா நடந்த அரங்கத்திற்கு உள்ளேயோ, வெளியேயோ ஏதாவது நடந்துவிடக் கூடாது என்பதில், போலீசார் கண்களில் விளக்கெண்ணெயை ஊற்றிக் கொண்டு கண்காணித்தனர். கணிதமேதை ராமானுஜன் பிறந்தநாள் விழாவில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகளவில் பங்கேற்க வாய்ப்பு இருந்தபோதும், அவர்களை பங்கேற்க விடவில்லை. பிரதமர் வருவதற்கு முன், ஏராளமான பள்ளி மாணவர்கள், அரங்கத்திற்கு வந்தனர். ஆனால், "அழைப்பிதழ் இல்லை' என்ற காரணத்தைக் கூறி, அனைவரையும் போலீசார் விரட்டிவிட்டனர்.
விழா நடந்த அரங்கம், 3,500 பேர் அமரக் கூடிய வசதி கொண்டது. ஆனால், வெறும், 800க்கும் குறைவானவர்களே, விழாவில் கலந்து கொண்டனர். மேடையின் முன் பக்கம் உள்ள இரு வரிசைகள் மட்டுமே ஓரளவிற்கு நிரம்பின. மற்ற இருக்கைகள் எல்லாம் வெறிச்சோடின. இங்கு, ஆங்காங்கே போலீசார் மட்டும் அமர்ந்திருந்தனர்.காலை 10 மணிக்கு பிரதமர், மேடைக்கு வருவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், முன்னதாகவே பிரதமர் வந்ததாகவும், அரங்கு காலியாக இருந்த தகவலை கேள்விப்பட்டு, "அப்செட்' ஆனதாகவும் கூறப்படுகிறது. திட்டமிட்ட நேரத்தை விட, 7 நிமிடங்கள் முன்னதாக, 9:53க்கே பிரதமர், மேடைக்கு வந்தார்.
தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு பக்கத்தில் நடந்த விழா; அதிலும், மத்திய அமைச்சர்கள் பலர் பங்கேற்ற விழா, இருந்தபோதும், கட்சியினர், மிஸ்சிங். பாதுகாப்பு ஒரு பக்கம் இருந்தாலும், யாராவது பிரதமர் முன் கருப்புக் கொடி காட்டினால், வம்பாகிவிடும் என்பதால், கடைசி நேரத்தில் போலீசார் செய்த கெடுபிடி தான், அரங்கம் வெறிச்சோடியதற்கு காரணம் என கூறப்படுகிறது.
-maraththa milar senai