இராமநாதபுரம்
மாவட்டம் திருவாடானை வட்டம் ஆனந்தூர் அருகில் சம்மந்தவயல் என்ற ஊரில் கி.பி. 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை அங்குள்ள வயல்
வரப்பில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டத்தில்
புத்தர் சிலைகள் ஏற்கனவே இராமேஸ்வரம் அரியான்குண்டு பகுதியிலும், திருவாடானை
அருகே மணிகண்டியிலும், சுந்தரபாண்டியன்பட்டினத்தில் உள்ள
சிவன் கோயிலிலும், கிடைத்துள்ளன. இலங்கையின்
தொடர்பால் இம்மாவட்ட கடற்கரைப் பகுதிகளில் புத்த மதம் செழித்து இருந்ததாக
கூறப்பட்டாலும் அதற்கான தடயங்கள் பெரிய அளவில் கிடைக்கவில்லை. ஏற்கனவே கிடைத்த சிலைகளும்
கடலோரப்பகுதிகளில் கிடைத்துள்ள நிலையில் இச்சிலை மாவட்டத்தின் உள்பகுதியில்
கிடைத்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.
ஐந்தடி உயரம் உள்ள
இச்சிற்பத்தில் புத்தர் அமர்ந்த நிலையில் தியான
கோலத்தில் உள்ளார். இதன் கீழ்பகுதி மண்ணில் புதைந்த நிலையில் உள்ளது. மார்பில்
சீரை என்ற மேலாடையையும்,
இடுப்பில் ஆடையையும் அணிந்து நீண்ட காதுகளுடன் காணப்படுகிறார். அவர்
கையில் உள்ள தர்மச் சக்கரமும், தலையில் உள்ள சுருள்முடியும்
சிதைந்த நிலையில் உள்ளன. சுருள்முடிக்கு மேல்
தீச்சுடர் காணப்படுகிறது. அதில் துளை உள்ளது. இது
நவரத்தினக் கற்கள் பதிப்பதற்காக உருவாக்கப் பட்டிருக்கலாம். புன்னகை
புரியும் இதழ்களுடன் மிக அழகாக சிற்பம்
வடிக்கப்பட்டுள்ளது.
